*சுகாதார சீர்கேடு அபாயம்
கிருஷ்ணகிரி : பர்கூர் பாம்பாறு ஆற்றுப்பாலத்தில் கொட்டப்படும் பிளாஸ்டிக் குப்பை கழிவுகளால் சுகாதார சீர்கேடு அபாயம் ஏற்பட்டுள்ளதாக குற்றம்சாட்டும் விவசாயிகள், கழிவுநீர் நேரடியாக ஆற்றில் கலப்பதை தடுக்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் பகுதி ஆந்திர மாநில எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. ஆந்திர மாநிலம் குப்பம் வனப்பகுதியிலிருந்து வெளியேறும் மழைநீர், கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் ஓதிக்குப்பம் ஏரிக்கு வந்தடைகிறது.
இந்த ஏரி 50 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. ஏரி நிரம்பி உபரிநீர் வெளியேறும் இடத்தில், பாம்பாறு கால்வாய் தொடங்குகிறது. இந்த கால்வாய் பர்கூர், மத்தூர், ஊத்தங்கரை ஒன்றியங்கள் வழியாக பாம்பாறு அணையை சென்றடைகிறது. கடந்த சில ஆண்டுகளாக போதிய மழை இல்லாததால், பாம்பாறு கால்வாய் புதர்மண்டி காணப்பட்டது.
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக பருவகாலங்களில் பரவலாக பெய்யும் மழையால், ஓதிக்குப்பம் ஏரி நிரம்பி வெளியேறும் உபரிநீர், பாம்பாறு ஆற்றில் பெருக்கெடுத்துச் செல்கிறது. இதேபோல், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையாலும், ஆற்றில் தண்ணீர் தேங்கி உள்ளது.
இந்நிலையில், பர்கூரில் பாம்பாறு ஆறு கடந்து செல்லும், திருப்பத்தூர் சாலையில் கட்டப்பட்டுள்ள பாலத்திற்கு அடியில் அதிகளவில் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதேபோல், அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரும் நேரடியாக ஆற்றில் கலக்கிறது.
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த கோபிநாத் என்பவர் கூறுகையில், ‘பர்கூர் நகர பகுதிகளில் இருந்து சாக்கடை கழிவுநீர் நேரடியாக ஆற்றில் விடப்படுவதால், ஆற்றின் தன்மை முற்றிலும் மாறி விட்டது. பிளாஸ்டிக் குப்பைகள், இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதால், கடும் துர்நாற்றம் வீசுகிறது.
குறிப்பாக பிளாஸ்டிக் கவர்கள், பயனற்ற பழைய பொருட்கள் ஆற்றில் அதிகளவில் குப்பை கழிவுகளை வீசுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு அதிகரித்து நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக நேரில் ஆய்வு செய்து, இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றார்.
The post பர்கூர் அருகே பாம்பாறு ஆற்றுப்பாலத்தில் குப்பை கழிவுகள் குவிப்பு appeared first on Dinakaran.