×

கடந்த 9 நாளில் 8,124 மெட்ரிக் டன் கட்டிட, இடிபாட்டு கழிவுகள் அகற்றம்: சென்னை மாநகராட்சி தகவல்

சென்னை: சென்னை மாநகராட்சி பகுதிகளில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்ட கட்டிடக் கழிவுகளை அகற்றும் தூய்மைப் பணிகளில் கடந்த 9 நாட்களில் மட்டும் 8,124 மெட்ரிக் டன் கட்டிட மற்றும் இடிபாட்டு கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு நாள்தோறும் 5,900 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சி பகுதிகள் தூய்மையாகவும், சுகாதாரமாகவும் திகழ்ந்திடும் வகையில் அனைத்து போக்குவரத்து மற்றும் உட்புறச் சாலைகள், பேருந்து நிறுத்தங்கள், பூங்காக்கள், மயான பூமிகள், மேம்பாலங்கள், மேம்பாலங்களின் கீழ் உள்ள பகுதிகள் மற்றும் சுரங்கப்பாதைகளில் தீவிர தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு குப்பை, கட்டிடக் கழிவுகள், சுவரொட்டிகள் மற்றும் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பதாகைகள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, முதற்கட்டமாக சென்னை மாநகராட்சிக்குட்பட்ட தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க. நகர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மற்றும் அடையாறு ஆகிய 7 மண்டலங்கள் முழுவதும் சாலைகள் மற்றும் தெருக்களில் உள்ள கட்டிட மற்றும் இடிபாட்டு கழிவுகளை அகற்றும் வகையில் தீவிரமாக கட்டிடக் கழிவுகளை அகற்றும் தூய்மைப்பணி மேயர் பிரியாவால் 7.1.2025 அன்று தொடங்கி வைக்கப்பட்டது.

அதனடிப்படையில், 7.1.2025 முதல் 16.1.2025 வரை தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க. நகர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மற்றும் அடையாறு ஆகிய 7 மண்டலங்களிலும், இரண்டாம் கட்டமாக 17.1.2025 முதல் திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்தூர், வளசரவாக்கம், ஆலந்தூர், பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய 8 மண்டலங்கள் உள்பட அனைத்து 15 மண்டலங்களிலும் தீவிரமாக கட்டிட மற்றும் இடிபாட்டுக் கழிவுகள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த பணிகளுக்காக டிப்பர் லாரிகள், மினி லாரிகள், ஜே.சி.பி. வாகனங்கள், பாப்காட் வாகனங்கள் உள்ளிட்ட 101 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் 7.1.2025 முதல் 31.1.2025 வரை மண்டலம் 1 முதல் மண்டலம் 8 வரையிலான வடக்குப் பகுதிகளில் 11,142.86 மெட்ரிக் டன் கட்டிடக் கழிவுகளும், மண்டலம் 9 முதல் 15 வரையிலான தெற்குப் பகுதிகளில் 9,820.04 மெட்ரிக் டன் கழிவுகளும் என மொத்தம் 24,963 மெட்ரிக் டன் கட்டிட மற்றும் இடிபாட்டுக் கழிவுகள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், பிப்ரவரி மாதம் முதல் நேற்று வரை மட்டும் 8,124 டன் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. ஆக மொத்தம் கடந்த 33 நாட்களில் 29,086.9 மெட்ரிக் டன் கட்டிட மற்றும் இடிபாட்டுக் கழிவுகள் அகற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த கழிவுகள் பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த கழிவுகள் கொடுங்கையூர் மற்றும் பெருங்குடியில் மறுசுழற்சிக்கு பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. சென்னை மாநகராட்சி பகுதிகளில் கட்டிடக் கழிவுகளை அகற்றும் தீவிர தூய்மைப்பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

உதவி எண்ணில்
தகவல் தரலாம்
பொதுமக்கள் தங்களது மற்றும் தங்கள் சுற்றுப்புறங்களில் உள்ள கட்டிட மற்றும் இடிபாட்டுக் கழிவுகளை அகற்ற வேண்டுமெனில் மாநகராட்சியின் 1913 என்ற உதவி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதன் மீது மாநகராட்சியின் சார்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு கட்டிட மற்றும் இடிபாட்டுக் கழிவுகள் அகற்றப்படும். கட்டிடக் கழிவுகளை அகற்றுவதற்காக, கடந்த ஜனவரி மாதம் முதல் மாநகராட்சி தீவிர தூய்மைப்பணியை எடுத்து வருகிறது.

  • சென்னை மாநகராட்சியில் சராசரியாக 1000 மெட்ரிக் டன் வரையிலான கட்டிடக் கழிவுகள் தினசரி அகற்றப்படுகிறது. ஒரு மெட்ரிக் டன் வரையிலான கழிவுகள் மாநகராட்சியின் சார்பில் கட்டணமின்றி அகற்றப்படும்.
  • ஒரு மெட்ரிக் டன் முதல் 20 மெட்ரிக் டன் வரையிலான கட்டிடக் கழிவுகளை உருவாக்குபவர்களுக்கும், 20 மெட்ரிக் டன் மேலான பெருமளவில் கட்டிடக் கழிவுகளை உருவாக்குபவர்களுக்கும் கட்டணம் உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் தனியாக உருவாக்கப்பட்டு வருகிறது. இதை பின்பற்றி கட்டிடக் கழிவுகள் அகற்றப்படும்.
  • சட்ட விரோதமாக கட்டிடக் கழிவுகளை சாலைகள், நீர்நிலைகள் உள்ளிட்ட பொது இடங்களில் கொட்டுபவர்கள் மீது ₹5000 அபராத கட்டணமும், காவல்துறையின் மூலம் உரிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். கடந்த ஒரு மாத காலத்தில் சட்ட விரோதமாக கட்டிடக் கழிவுகள் கொட்டியவர்கள் மீது கண்காணிப்புப் படையினரால் ₹8,06,000 (₹8 லட்சத்து 6 ஆயிரம்) அபராதம் விதிக்கப்பட்டும், வாகனங்கள் கைப்பற்றப்பட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

The post கடந்த 9 நாளில் 8,124 மெட்ரிக் டன் கட்டிட, இடிபாட்டு கழிவுகள் அகற்றம்: சென்னை மாநகராட்சி தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai Corporation ,Chennai ,Dinakaran ,
× RELATED தொழில் உரிமம் புதுப்பிக்க 31ம் தேதி வரை...