நன்றி குங்குமம் தோழி
“சேர்ந்தே இருப்பவை?” எது என்று இப்போது கேட்டால், “பொங்கலும், கரும்பும்!” என்ற பதிலைச் சொல்லலாம்! கரும்பு என்றால் இனிப்பு அல்லது இன்பம் என்பதுதான் பொருளாம். இன்பம் பொங்கும் பொங்கலன்று, இன்பம் எனும் பொருள் தரும் கரும்புடன்தான் நமது தமிழர் திருநாள் கொண்டாட்டங்களைத் துவங்குகிறோம் என்பது எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது!
கரும்பு வேண்டுமானால் இனிக்கலாம், ஆனால் கரும்பின் வரலாறும், அதனால் ஏற்படும் வாழ்க்கைமுறை நோய்களும் மிகமிகக் கசப்பானவை என்று வரலாறும் அறிவியலும் நமக்கு அழுத்தமாக
கூறுகின்றன. இதன் உண்மை நிலையைத் தெரிந்துகொள்ள, கரும்புடன் பயணிப்போம் வாருங்கள்!
கரும்பின் தாவரப்பெயர் Saccharum officinarum. தோன்றிய இடம் நியூ கினியா தீவு. காட்டுப்பயிராக இருந்த கரும்பை, சுமார் எட்டாயிரம் ஆண்டுகளுக்கு முன், பாலினேசியா, ஓசியானியா உள்ளிட்ட தென்பசிபிக் தீவுகளில் விவசாயப் பயிராகப் பயிரிட, அப்படியே இந்தியா, இந்தோனேசியா, சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்குப் பரவி, இன்று ஏறத்தாழ 40 வகைகளுடன், உலகளவில் பயிரிடப்படும் முக்கியத் தாவரமாக விளங்குகிறது என்றாலும், நம்மிடையே செங்கரும்பும், வெண்கரும்பும் அதிகம் விளையும்
வகைகளாகும்.
இந்த இனிப்புக் குச்சிகளின் சாற்றிலிருந்து முதன்முதலாக சர்க்கரைதயாரித்தது நமது இந்திய மண்ணில்தானாம். அப்படி நம்மிடமிருந்து பெர்சிய மற்றும் அரபு நாடுகளுக்கு கரும்பு சென்றடைந்தபோது, அங்கு Sukkar என்றும், பின்னர் ஃப்ரெஞ்சு, இத்தாலி மற்றும் கிரேக்க நாடுகளை அடைந்தபின் Zucchero, Saccharum என்றும் வழங்கப்பட, கிரேக்கத்தின் Saccharum என்பதே கரும்பின் தாவரப்பெயராக நிலைத்துவிட்டது.
இனிப்பு என்றால் தேன் அல்லது கனிகள் என்று மட்டுமே இருந்த நிலையில், கரும்பு எனும் இனிப்புக் குச்சிகளின் கண்டுபிடிப்பும் அதன் உலகளாவிய பயணமும் மனிதப் பரிணாம வரலாற்றில், குறிப்பாக உணவு வரலாற்றில் பெரும் பங்காற்றியுள்ளது என்பதில் ஐயமில்லை. உணவிலும் உடல்நலத்திலும் இன்பத்தை விளைவிக்கும் பண்புகளைக் கொண்டது கரும்பு என்று கூறும் ஊட்டச்சத்து நிபுணர்கள், கரும்பைக் கடித்து மெல்லும் போதும் அதனைப் பிழிந்து கரும்புச்சாறு எடுக்கும் போதும் கிடைக்கும் ஆரோக்கியம் குறித்தும் விளக்குகின்றனர்.
பொதுவாக 70-75% நீர்த்தன்மை மற்றும் 10-15% நார்ச்சத்து கொண்ட கரும்பில், இனிப்புச் சுவையையும் உடனடி சக்தியையும் தரும் fructose, glucose மற்றும் sucrose ஆகிய சர்க்கரைகள் 10-15% வரை காணப்படுகிறது என்றும், அத்துடன் சர்க்கரை அல்லாத மாவுச்சத்து குறைந்தளவு உள்ளது என்றும், இவற்றுடன் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, பொட்டாசியம், செலீனியம் மற்றும் மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய தாதுக்களும், வைட்டமின்களும், அத்துடன் குளோரோஜெனிக் அமிலம், சின்னமிக் அமிலம், கேஃபிக் அமிலம் மற்றும் எபிஜெனின், லூட்டியோலின் உள்ளிட்ட தாவரச்சத்துகளும் நிறைந்துள்ளது என்கின்றனர்.
செங்கரும்பு, வெண்கரும்பு என்கிற இருவகையான கரும்புகளிலும் நேரடி மற்றும் கூட்டுச் சர்க்கரை அதிகம் உள்ளது என்றாலும், இவற்றில் Low Glycemic Index, அதாவது, ரத்தத்தில் குறைவாக சர்க்கரையைக் கலக்கும் தன்மை கொண்டவை வெண் கரும்புகள் என்பதால், சர்க்கரை நோயாளிகளுக்கும், உடற்பருமன் கொண்டவர்களுக்கும் வெண்கரும்பை இயற்கை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
கரும்புச்சாறு உடனடி சக்தியையும் உடல் இயக்கத்திற்கான ஆற்றலையும் தருவதோடு, நீர் வறட்சியையும் போக்குகிறது. இஞ்சி மற்றும் எலுமிச்சை சாறு கலந்த கரும்புச்சாறு, கோடைக்கால குளிர்ச்சி பானமாகவும், கர்ப்ப காலத்தில் வாந்தி மற்றும் மசக்கைக்கான நிவாரணியாகவும், குழந்தைகள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு உற்சாகத்தையும், சக்தியையும் அளிக்கிறது. காமாலை, பித்தப்பை மற்றும் சிறுநீரகக் கற்கள், சிறுநீர்த்தொற்று, ப்ராஸ்டேட் அழற்சி, வயிற்று அழற்சி, பெருங்குடல் நோய்கள், மலச்சிக்கல், மாதவிடாய் வலி ஆகியவற்றையும் தடுக்கவும் உதவுகிறது.
கரும்பில் உள்ள flavanoids மற்றும் polyphenols, செல் அழற்சியைக் கட்டுப்படுத்துவதால் சரும நோய்கள், அலர்ஜி, வலிப்பு நோய், தசை மற்றும் மூட்டு நோய்கள், குடல், தோல் மற்றும் மார்பகப்
புற்றுநோய்களைக்கூட மட்டுப்படுத்த உதவுகிறது. திடீர் விக்கலுக்கு சிறிது சர்க்கரை சாப்பிட்டால் நிற்கும் என்பது பாட்டி வைத்தியம். அதேபோல தீக்காயங்கள், தழும்புகளில் மேல்பூச்சாக கரும்புச்சாறு அல்லது கரும்புச் சர்க்கரை பூசப்பட்டு வந்ததையும், சமீபத்திய அழகு சாதன தயாரிப்புகளில் இதைனைப் பயன்படுத்தியும் வருகின்றனர்.
எல்லாம் சரி! அதென்ன இனிக்கும் கரும்பில் ஒரு கசப்பான வரலாறு மற்றும் கசப்பான அறிவியல். எனக் கேட்டால், வரலாற்றில் கரும்பு விளைச்சலை உலகமயமாதலுடன் நாம் இணைத்துப் பார்க்க முடிகிறது. கரும்புச் சாற்றிலிருந்து வெல்லம் மற்றும் பழுப்புநிற சர்க்கரையைத் தயாரித்தது முதன்முதலில் இந்தியாதான். கரும்பாலைகளில் கொதிக்க வைத்த கரும்புச் சாற்றிலிருந்து தயாரிக்கப்பட்ட பாகு மற்றும் அச்சுவெல்லம் ஓர் உயரிய உணவாக, குறிப்பாக அரசவை உணவாகவும் இருந்து வந்தது.
6ம் நூற்றாண்டில், பௌத்த துறவிகளால் கரும்பும் அதன் சர்க்கரையும் சீனா சென்றடைய, அச்சு வெல்லத்தின் பழுப்பை போக்க, ரசாயனங்களை அதிகம் சேர்த்து, பார்க்கவும் சுவைக்கவும் ஏதுவான வெள்ளை நிற சீனியாக மாற்றியுள்ளனர். சீன மொழியில் சீனி என்றால் வெள்ளை என்பது பொருளாம். சீனர்களுடைய இந்தத் தொழில்நுட்பத்தை நம்மிடம் இறக்குமதி செய்தவர்கள் ஐரோப்பியர்கள். ஒடிசாவின் அஸ்கா நகரத்தில் சர்க்கரை ஆலைகளை நிறுவி, நமது பொன்னிற சர்க்கரையை, வெண்ணிற சர்க்கரையாக மாற்றி, ஏற்றுமதி செய்யத் தொடங்கியுள்ளனர். வெள்ளைச் சர்க்கரைக்கு, சீனி அல்லது அஸ்கா என்ற பெயர் வந்தது இப்படித்தான் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.
ஆனால் தண்டுகளிலிருந்து பயிரிடப்படும் கரும்பு உண்மையில் ஒரு நீண்டகாலப் பயிர். அதுவும் ஒரு வெப்பமண்டலப் பயிர். அதிக பராமரிப்பு தேவைப்படும், நற்பலன்களைத் தரும் பயிர். இதில் நாவினிக்கும் சர்க்கரை மட்டுமல்லாமல், எத்தனால், ரம் உள்ளிட்ட மதுபானங்களும், மொலாஸஸ்களும் (molasses), உயிரி எரிபொருட்களும், காகிதமும் என பற்பல விஷயங்களும் சேர்ந்தே கிடைக்கும் என்பதுடன், சர்க்கரையினூடே கேரமல், பழரசங்கள், ஜாம், ஜெல்லி, கேண்டி, கேக், சாக்லேட், ஐஸ்கிரீம் என நாவினிக்கும் உபரிகளும் மனிதனை அதன் இனிப்புச் சுவைக்கு காலங்காலமாக அடிமைப்படுத்தியுள்ளது.
கொதித்த தேநீரைக் கொட்டிவிட்டு, இலைகளை உண்ட மனித வரலாறு, சர்க்கரை சேர்ந்தபின் காஃபி, டீ பானங்களை உலகமயமாக்கின. ஆகவே, கரும்பின் உற்பத்தியை துரிதமாக்கவும், விளைச்சலைக் கூட்டவும், பல வெப்ப மண்டல நாடுகளை அடிமைகளாகத் தேர்ந்தெடுத்தது உலகின் அதிகார வர்க்கம். அப்படி க்யூபா, ஜமைக்கா, பிரேசில், மேற்கிந்தியத் தீவுகள், மேற்கு மற்றும் தென்னாப்பிரிக்க நாடுகள், மியான்மர், ஃபிலிப்பைன்ஸ் என தேடித்தேடி பல நூற்றாண்டுகளாக, பல்லாயிரக்கணக்கான மக்களிடையே அடிமை நிலங்களையும் அடிமைத்தனத்தையும் கரும்புடன் பயிரிட்டது, பிரிட்டிஷ், அமெரிக்கா, ஃப்ரெஞ்சு, போர்ச்சுகீஸ் உள்ளிட்ட அதிகார வர்க்க நாடுகள்.
ஆம். வெள்ளைத் தங்கம் என்கிற பெயருடன், 14ம் நூற்றாண்டு தொடங்கி, 19ம் நூற்றாண்டு வரை, அட்லாண்டிக் கடல் சார்ந்த கரும்பு வாணிபத்தை அடிமைத்தனத்துடன் அரங்கேற்றின பல நாடுகள். இப்படி இனிப்பையும் அதிகாரத்தையும் ஒன்றிணைத்ததால் ஏற்பட்ட உயிரிழப்புகள் கரும்பின் வரலாற்றில் மிகக் கசப்பான ஒன்றாகவே இன்றும் அறியப்படுகிறது. சர்க்கரை சுத்திகரிப்புக்கென சேர்க்கப்பட்ட ரசாயனங்களுக்குள் விலங்குகளின் எலும்புகள் மட்டுமன்றி மரித்த மனித எலும்புகளும் அடங்கும் என்கிறது இந்த கசப்பான வரலாறு.நமது அன்றாட உணவில் முக்கிய அங்கமாக மாறிவிட்ட சர்க்கரையில் மற்ற சத்துகளற்ற வெறும் சர்க்கரை அதிகப்படியாக உட்கொள்ளப்படும்போது, அந்த ஆற்றல் கல்லீரலில் கிளைக்கோஜனாகவும், அதிலிருந்து உபரி கலோரிகள் வெள்ளைக் கொழுப்பாகவும் உருப்பெறுகிறது.
ரத்தத் தமனிகளில் பதியும் கெட்ட கொழுப்புகளுக்கு இவை வழிவகுப்பதுடன், உடல் பருமன், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், இதய நோய், புற்றுநோய்கள், அறிவாற்றல் குறைபாடுகள் என பற்பல உடல் மற்றும் மனநல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது எனும் தகவல், இன்று சர்க்கரை நோய் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் நமது நாடே இதற்கு முக்கிய சாட்சியாக இருக்கிறது.ஆம். கரும்பு விளைச்சலில் பிரேசிலுக்கு அடுத்ததாக இந்தியா இருக்கிறது என்றாலும், சர்க்கரைக் கொள்முதல் மற்றும் சர்க்கரை நோயாளர்களின் எண்ணிக்கையிலும் இந்தியாதான் உலகளவில் முன் நிற்கிறது என்பது வலி மிகுந்த உண்மை.
அப்படியெனில் எந்த சர்க்கரை நல்லது? எவ்வளவு சர்க்கரை பயன்பாட்டிற்கு தேவை என்கிற கேள்வி எழுகிறதல்லவா? இரும்புச் சத்து மற்றும் பிற தாதுக்கள் நிறைந்த கரும்புச் சர்க்கரை, வெல்லம், கருப்பட்டி என அனைத்திலும் அதிக கலோரிகள் உண்டு என்றாலும், அதிக ரசாயனங்கள் சேர்த்து உருவான வெள்ளைச் சர்க்கரையில் கலோரிகளைத் தவிர வேறு நன்மைகள் அறவே கிடையாது. ஏற்கெனவே நமது அன்றாடப் பயன்பாட்டில், 2-3 மடங்கு அதிக சர்க்கரையை ஏதாவது ஒரு வழியில் பயன்படுத்தி வரும் நமக்கு 100-150 கலோரிகள், அதாவது, 6-9 டீஸ்பூன் அளவு சர்க்கரைதான் அளவானது என அறுதியிட்டு வரையறுக்கிறது அமெரிக்க இதய அமைப்பு (AHA).
உண்மையில் கரும்பு எனும் தாவரம் அழிக்கப்பட வேண்டிய ஒன்றல்ல. மற்ற இயற்கை படைப்பு போலவே, வேரூன்றி விளையும் பயிர்தான். ஆனால் அதில் மனிதனின் பேராசைகளும், பாகுபாடுகளும், விருப்பத் தேர்வுகளும் கரும்பை பெரிதும் கசக்கச் செய்துள்ளது என்பதுதான் உண்மை!இன்றைய நிலையில், நாம் உணர வேண்டியது ஒன்றுதான்.
இயற்கையில் விளையும் உணவு அளவாக இருக்கும்போது மருந்துகள் நமக்குத் தேவைப்படுவதில்லை. காரணம், இயற்கை உணவே நமக்கு மருந்தாகிறது. அது கரும்பே என்றாலும்..!தித்திக்கும் கரும்பு போல் வாழ்க்கையும் இன்பமாக அமைய வேண்டும் என்பதன் குறியீடே கரும்பு. Noble canes எனப்படும் இனிப்புக் குச்சிகளோடு இனிக்கட்டும் உழவர் திருநாளான நமது தை பொங்கல் திருநாள். தமிழர் திருநாள் வாழ்த்துகளுடன்…
(இயற்கைப் பயணம் நீளும்..!)
டாக்டர்: சசித்ரா தாமோதரன் மகப்பேறு மருத்துவர், சமூக ஆர்வலர்
The post இயற்கை 360° – கரும்பு appeared first on Dinakaran.