திருவண்ணாமலை, பிப்.10: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று திடீர் ஆய்வு செய்தார். அப்போது, பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்த உத்தரவிட்டார். பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக அமைந்திருப்பது திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில். நினைக்க முக்தி தரும் இத்திருக்கோயிலில் தரிசிக்க வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால், பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. அதோடு, வெளியூர் வாகனங்களால் திருவண்ணாமலை மாடவீதி உள்ளிட்ட நகரின் முக்கிய இடங்களில் மிக கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகின்றன.
எனவே, பக்கர்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காணவும் அமைச்சர் எ.வ.வேலு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதையொட்டி, திருவண்ணாமலை நகரின் மேம்பாட்டுக்காக மாதிரி திட்ட வரைவு (மாஸ்டர் பிளான்) வடிவமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் ராஜகோபுரம் மற்றும் அம்மணி அம்மன் கோபுரம் நுழைவு வாயில், வட ஒத்தவாடை தெரு உள்ளிட்ட பகுதிகளில் அமைச்சர் எ.வ.வேலு நேற்று திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது, அண்ணாமலையார் திருக்கோயிலுக்கு வரும் ஆன்மீக பக்தர்கள் எவ்வித சிரமமும் இல்லாமல் விரைவாக தரிசனம் செய்வதற்குரிய நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகமும் கோயில் நிர்வாகமும் இணைந்து மேற்கொள்ள வேண்டும். பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என அமைச்சர் உத்தரவிட்டார்.
மேலும், திருக்கோயிலை சுற்றியுள்ள பகுதிகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், போக்குவரத்து நெரிசலை முற்றிலுமாக கட்டுப்படுத்தவும், தேவையான இடங்களில் சாலை தடுப்புகளை அமைக்கவும், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பக்தர்கள் ராஜகோபுரம் மற்றும் அம்மணி அம்மன் கோபுரம் வழியாக கோயிலுக்குள் செல்ல தேவையான சிறப்பு ஏற்பாடுகளை செய்யவும் உத்தரவிட்டார்.
ஆய்வின்போது, கலெக்டர் தர்ப்பகராஜ், மாநில தடகள சங்கத் துணைத் தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன் எம்எல்ஏ மு.பெ.கிரி, மேயர் நிர்மலா வேல்மாறன், மாநகராட்சி ஆணையாளர் காந்திராஜ், அறங்காலவர் குழு தலைவர் ஜீவானந்தம், முன்னாள் நகராட்சி தலைவர் இரா.ஸ்ரீதரன், தூய்மை அருணை ஒருங்கிணைப்பாளர்கள் கார்த்திவேல்மாறன், பிரியா விஜயரங்கன், துரைவெங்கட், இல குணசேகரன், துணை மேயர் ராஜாங்கம் உட்பட பலர் உடன் இருந்தனர்.
The post அண்ணாமலையார் கோயிலில் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு: பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்த உத்தரவு appeared first on Dinakaran.