×

கடலில் மிதக்கும் ஓட்டல்கள், மரத்திலேயே நடைபாதைகள்: உலகத்தரத்திற்கு மாறிவருகிறது; முத்துப்பேட்டை அலையாத்திக்காடு

முத்துப்பேட்டை அலையாத்திக்காடு உலக தரத்திற்கு மாறிவருகிறது. கடலில் மிதக்கும் ஓட்டல்கள், மரத்திலேயே நடைபாதைகள் தயாராகி வருவதால் சுற்றுலா பயணிகள் உற்சாகத்தில் உள்ளனர். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் உள்ள அலையாத்திக்காடு ஆசியா கண்டத்திலேயே மிகப்பெரிய பரப்பளவு கொண்ட காடாகும். இந்த காடு புயல் மற்றும் சூறாவளி காற்றிலிருந்தும், சுனாமியிலிருந்தும், கடலோர கிராமங்களையும், கிராம மக்களையும் பாதுகாக்கும் அரணாக விளங்குகின்றன. கடலோரங்களில் எற்படும் மண் அரிப்பை பெருமளவில் தடுத்து நிறுத்துகிறது. முத்துப்பேட்டை பகுதியில் 12.020 ஹெக்டேர் பரப்பளவில் காணப்படும் இக்காடுகள் திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் பரவி உள்ளது.

முத்துப்பேட்டை அலையாத்திக்காடு ஆசியா கண்டத்தில் காணப்படக்கூடிய மிகப்பெரிய அலையாத்தி காடாகும். உலக அளவில் இக்காடுகள் 2லட்சம் சதுர கி.மீ. பரப்பளவில் 30 நாடுகளில் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. முத்துப்பேட்டை அலையாத்திக்காடுகள் அமைந்துள்ள லகூன் என்ற காயல் பகுதிக்கு ஒவ்வொரு ஆண்டும் அக்டோபரிலிருந்து பிப்ரவரி வரை 147 வகை நீர்ப்பறவைகள் வருகின்றன.

இந்தியாவில் முதன் முதலாக முத்துப்பேட்டை பகுதியில் மட்டும்தான் அலையாத்தி காடுகளுக்கு உள்ளே சென்று பார்ப்பதற்கு ஏற்ற வகையில் மர நடைப்பாதைகள், உயர் கோபுரங்கள், ஓய்வெடுக்க குடில்கள், காட்டுக்குள் சுற்றுலா பயணிகள் செல்லும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் வனத்துறையினரால் அமைக்கப்பட்டிருக்கின்றன. முத்துப்பேட்டை அலையாத்திக்காடுகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்லும் ஆற்றின் வழியே படகில் நெடுந்தூரப்பயணம் செல்வது பயணிப்பவர்களின் மனதை சொக்க வைக்கும்.

இருபுறமும் அடர்ந்து படர்ந்து கிடக்கும் அலையாத்திகாடுகளின் இயற்கை அழகு அவர்களை மெய்மறக்க வைக்கும். உள்ளே சென்றதும் லகூன் பகுதியில் உள்ள குட்டிக்குட்டி தீவுகளின் அழகு காண்போரை பிரமிக்க வைக்கும். ஆங்காங்கே தென்படும் பறவைகளின் கீச்கீச்சென்ற சத்தம் ரசிக்க வைக்கும். இப்படி ஆற்றின் வழிப்பயணமாக கடலுக்கு செல்வதே ஒரு ஆனந்தம்தான் என்று சுற்றுலா பயணிகள் கூறுகின்றனர். அந்த அளவிற்கு இயற்கையின் அழகை காட்டும் ஒரு சொர்க்க பூமியை இங்கு காணமுடியும். எனவே இந்த காட்டின் அழகை ரசிக்க ஆண்டு முழுவதும் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதியிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் வந்து செல்கின்றனர். அலையாத்திக்காட்டை உலகளவிலான சுற்றுலா பகுதிகளில் ஒன்றாக கொண்டு வரும் வகையில் உலக தரத்திற்கு மற்றும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘அலையாத்திக்காட்டில் சுற்றுலா பயணிகள் வசதிக்கு ஓய்வு அறை, சுற்றுலா பயணிகள் மழை மற்றும் வெயில் காலத்தில் நிற்கும் வகையில் கூரைகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. காட்டின் உள்ளே மரத்திலேயே நடபாதைகள், உயர்கோபுரங்கள், ஓய்வெடுக்க குடில்களும், அதேபோல் படகுதுறை பகுதியில் சுற்றுலா பயணிகள் காத்திருக்கும் பகுதியில் சாலையிலிருந்து சென்று ஆற்றில் படகில் ஏறும் வகையில் பெரியளவிலான பிரமாண்டமான மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் சுற்றுலா பயணிகள் வசதிக்கு சமீபத்தில் படகு சவாரிக்காக கூடுதலாக இரண்டு படகுகள் வனத்துறை மூலம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக படகுகளும், சொகுசு படகுகளும் வாங்கவும், கடலில் மிதக்கும் வகையில் ஓட்டல்களும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பகுதி நாட்டிற்கே கிடைத்த ஒரு அரிய பொக்கிஷம். அதனால் படிப்படியாக பணிகள் தொடரும். இதன்மூலம் உலக சுற்றுலா தளங்களில் இந்த அலையாத்திக்காடும் முதன்மையிடத்தை வகிக்கும். வனத்துறை சார்பில் சுற்றுலா பயணிகள் வசதிக்கு உலக தரத்திற்கு பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. இதனால் இங்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்’ என்றனர்.

இந்தியாவில் முதன் முதலாக முத்துப்பேட்டை பகுதியில் மட்டும்தான் அலையாத்தி காடுகளுக்கு உள்ளே சென்று பார்ப்பதற்கு ஏற்ற வகையில் மர நடைப்பாதைகள், உயர் கோபுரங்கள், ஓய்வெடுக்க குடில்கள், காட்டுக்குள் சுற்றுலா பயணிகள் செல்லும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் வனத்துறையினரால் அமைக்கப்பட்டிருக்கின்றன.

The post கடலில் மிதக்கும் ஓட்டல்கள், மரத்திலேயே நடைபாதைகள்: உலகத்தரத்திற்கு மாறிவருகிறது; முத்துப்பேட்டை அலையாத்திக்காடு appeared first on Dinakaran.

Tags : Muthupettai Wailing Forest ,Wailing Forest ,Muthupettai ,Thiruvarur district ,Asia ,
× RELATED முத்துப்பேட்டை, கோவிலூர் மந்திரபுரீஸ்வரர் கோயில் திருக்கல்யாண வைபவம்