செஞ்சி, பிப். 8: செஞ்சி அருகே ஜோடியாக வந்து கோயில் உண்டியலை உடைத்து பணம் திருடிய வாலிபர் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி- சேத்துப்பட்டு சாலையில் சங்கராபரணி ஆற்றங்கரை அருகே உள்ளது சோலையம்மன் கோயில். இங்கு கடந்த வருடம் கும்பாபிஷேகம் நடந்த நிலையில் உண்டியல் வைக்கப்பட்டு பக்தர்கள் காணிக்கை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் கோயில் உண்டியலில் இருந்த பணம் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து கோயில் நிர்வாகிகள் அங்கு வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது வாலிபர் ஒருவர் உடன் வந்த பெண்ணை வெளியில் காவலுக்கு நிற்க வைத்து விட்டு கோயிலுக்குள் சென்று உண்டியலை எடுத்துக்கொண்டு இருவரும் மறைவான இடத்துக்கு சென்று உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளை அடித்து சென்றது சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இவர்கள் இருவரும் காதல் ஜோடியாக இருக்கலாம் என தெரிகிறது. ஜோடியாக வந்து உண்டியல் திருடிச்செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சம்பவம் குறித்து கோயில் நிர்வாகிகள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
The post ஜோடியாக வந்து கோயில் உண்டியலில் பணம் திருடிய வாலிபர் appeared first on Dinakaran.
