சென்னை: இலங்கையிலிருந்து சென்னை வந்த திரிபுரா மாநில பயணி ஒருவருக்கு முகத்தில் கொப்பளங்கள் இருந்ததால் அவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பா என்ற சந்தேகத்தில் பயணியை தனிமைப்படுத்தி, சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பினர். இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கொழும்பிலிருந்து லங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று முன்தினம் இரவு சென்னை வந்தது. பயணிகளை விமான நிலைய சுகாதாரத் துறை அதிகாரிகள் கண்காணித்து, ஆய்வு செய்து அனுப்பிக்கொண்டு இருந்தனர்.
அப்போது அந்த விமானத்தில் வந்த திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 35 வயது ஆண் பயணி ஒருவருக்கு, முகத்தில் கொப்பளம் கொப்பளங்களாக இருந்தன. இதை கண்டுபிடித்த சுகாதாரத் துறை அதிகாரிகள், அந்த பயணியை வெளியில் அனுப்பாமல் நிறுத்தி வைத்து, அதோடு அவரை தனிமைப்படுத்தி விசாரித்தனர். அப்போது அந்த திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த அந்த பயணி, சுகாதாரத் துறை அதிகாரிகளிடம், நான் இலங்கைக்கு சுற்றுலா பயணியாக சென்றிருந்தேன். அங்கு அழகு சாதன கிரீம் என்று விற்பனை செய்தனர்.
அதை வாங்கி என் முகத்தில் தடவினேன். இதைப் போல் கொப்பளம் வந்துவிட்டது என்று கூறினார். ஆனால் அதிகாரிகள், திரிபுரா மாநில பயணி கூறியதை முழுமையாக நம்பவில்லை. இவருக்கு முகம், உடலில் ஏற்பட்டுள்ள கொப்பளங்கள் குரங்கு அம்மையாக இருக்கலாமா என்ற சந்தேகம் ஏற்பட்டது. உடனடியாக தனி ஆம்புலன்ஸ் மூலம், சென்னை விமான நிலையத்தில் இருந்து திரிபுரா மாநில ஆண் பயணியை சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உள்ள சிறப்பு தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு மருத்துவ பரிசோதனை நடந்து வருகிறது.
இதுபற்றி சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், ‘‘சந்தேகத்தில் அந்த திரிபுரா மாநில பயணியை சென்னை விமான நிலைய சுகாதாரத்துறை அதிகாரிகள் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி உள்ளனர். பரிசோதனை முடிவில்தான் அதுபற்றி தெரிய வரும். ஆனால் அவருக்கு குரங்கு அம்மை நோய்க்கான வாய்ப்பு மிகவும் குறைவு. அவர் கூறியது போல், அழகு சாதன கிரீம் என்று வாங்கி தடவியதில் ஏற்பட்ட கொப்பளங்களாக இருக்க தான் வாய்ப்பு உள்ளது. எனவே பயணிகள் யாரும் அச்சப்பட வேண்டியது இல்லை என்றனர். திரிபுரா பயணிக்கு குரங்கு அம்மை நோய்க்கான வாய்ப்பு மிகவும் குறைவு. அழகு சாதன கிரீம் என்று வாங்கி தடவியதில் ஏற்பட்ட கொப்பளங்களாக இருக்க தான் வாய்ப்பு உள்ளது.
The post இலங்கையில் இருந்து சென்னை வந்த திரிபுரா மாநில பயணிக்கு குரங்கு அம்மை பாதிப்பு? மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பியதால் பரபரப்பு appeared first on Dinakaran.