
*ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து விடுவித்த பேரூராட்சி
திங்கள்சந்தை : வில்லுக்குறி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மனித கழிவுகள் கொட்டும் சம்பவங்கள் நடந்து வருகிறது. தனியார் கழிவுநீர் வாகனத்தில் கொண்டு வரப்படும் கழிவுகள் குளங்கள் சூழ்ந்த தனியார் தோட்டத்தில் கொட்டப்படுகிறது. இந்த இடம் வில்லுக்குறி பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து சுமார் 500 மீ தொலைவில் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து விவசாயிகள் பலரும் வில்லுக்குறி பேரூராட்சி செயல் அலுவலரிடம் புகார் தெரிவித்து உள்ளனர். ஆனால் பேரூராட்சி நிர்வாகம் எதையும் கண்டு கொண்டதாக தெரியவில்லை. இதுகுறித்து நாம் தமிழர் கட்சியினரிடம் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதனால் மனித கழிவு கொட்டும் லாரியை கையும் களவுமாக பிடித்து பேரூராட்சியில் ஒப்படைக்க அவர்கள் முடிவு செய்தனர்.
இந்த நிலையில் கடந்த 3ம் தேதி மாலை செப்டிக் டேங்க் கழிவு லாரி ஒன்று தேசிய நெடுஞ்சாலை ஓரம் உள்ள தோப்பில் வந்து நின்றது. இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த அவர்கள் அந்த வாகனத்தை கையும் களவுமாக பிடித்தனர்.
அப்போது லாரியில் இருந்த மனித கழிவுகளை ஒரு தோப்பில் தென்னையை சுற்றி தோண்டப்பட்டு இருந்த குழியில் கொட்டி கொண்டு இருந்தனர். இதை செல்போனில் வீடியோவாகவும் பதிவு செய்தனர்.
ஏன் இப்படி செய்தீர்கள் என லாரி டிரைவர் மற்றும் கிளீனரிடம் அவர்கள் கேட்டபோது, நிலத்தின் உரிமையாளர் கொட்ட சொன்னார். அதனால் கொட்டுகிறோம் என கூறி உள்ளனர். இந்த உரையாடல் வீடியோவில் பதிவாகி உள்ளது.
இதுகுறித்து நாதகவினர் செயல் அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் யாரும் சம்பவ இடத்திற்கு வரவில்லை. நீண்ட நேரம் காத்திருந்த அவர்கள் லாரியை பேரூராட்சி அலுவலகத்தில் ஒப்படைத்தனர். செயல் அலுவலர் ரூ. 2 ஆயிரம் அபராதம் விதித்து லாரியை விடுவித்தார்.
இறைச்சி கழிவுகள் கொண்டு வரும் லாரிகள் கூட பறிமுதல் செய்யப்பட்டு டிரைவர் உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியில் தினம் தினம் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வரும் தேசிய நெடுஞ்சாலை ஓரம் விவசாய நிலத்தில் மனித கழிவுகளை கொட்டிய லாரிக்கு ரூ. 2 ஆயிரம் தான் அபராதமா..? என்ற கேள்வி எழுந்துள்ளது.
பேரூராட்சிக்கு ரூ. 2 ஆயிரம் கட்டிவிட்டால் மனித கழிவுகளை எங்கும் கொட்டலாமா? என அரசியல் கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.
போராட்டம் அறிவிப்பு
இதுகுறித்து வில்லுக்குறி பேரூர் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கூறும்போது, தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ள விவசாயநிலத்தில் குளம் போல் மனித கழிவுகள் கொட்டப்பட்டு கிடக்கிறது. சில இடங்களில் இவை காய்ந்து குவியல் குவியலாக துர்நாற்றம் வீசி வருகிறது.
இந்த தோப்பில் கொட்டப்பட்டிருக்கும் கழிவுகள் தண்ணீரில் கலந்து ஊட்டுக் கால்வாய்கள் வழியாக நெல் வயல்கள், மற்றும் வாழைத் தோட்டம், தென்னந் தோப்புகளுக்கும் பாய்ந்து செல்கிறது.
அருகில் உள்ள மடையார்குளம் உட்பட பல்வேறு குளங்களிலும் கலக்கிறது. இதனால் விவசாயிகள், விவசாயத் தொழில் செய்கிறவர்கள் மற்றும் இந்த தண்ணீரை பயன் படுத்துகிறவர்கள் என பலரும் தொற்றுநோய் பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த தோட்டம் முழுவதும் மலைபோல் கொட்டி கிடப்பதை பார்த்தால் கடந்த சில மாதங்களாக இந்த சம்பவம் நடந்து கொண்டு இருப்பது தெரிகிறது. பேரூராட்சி நிர்வாகத்திற்கு தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை.
மனித கழிவுகளை முழுமையாக தோட்டத்திலிருந்து அப்புறப்படுத்த செயல் அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்து பேசி பொதுமக்களை திரட்டி வில்லுக்குறி பேரூராட்சியை கண்டித்து போராட்டம் நடத்துவோம் என்றனர்.
விளை நிலத்தில் கொட்டக்கூடாது
செப்டிக் டேங்க் கழிவுகளை பொதுமக்கள் குடியிருக்கும் பகுதியிலோ விவசாய விளை நிலங்களிலோ கொட்டக்கூடாது. அதற்காக ஒதுக்கப்பட்ட இயற்கை முறையில் சுத்திகரிக்கப்படும் இடங்களில் மட்டுமே உரிய முறையில் பதிவு செய்து கொட்ட வேண்டும். மேலும் செப்டிக் டேங்க் கழிவு ஏற்றி வரும் வாகனங்களை அனுமதி இல்லாத இடங்களில் நிறுத்துவதும் தடை செய்யப்பட்டுள்ளது.
The post சுகாதார சீர்கேடு ஏற்படும் வகையில் வில்லுக்குறியில் விவசாய நிலத்தில் கொட்டப்படும் மனித கழிவுகள் appeared first on Dinakaran.
