*முதல் மருந்தகத்தை பிப்.15ம் தேதி திறந்து வைக்க ஏற்பாடு
நாகர்கோவில் : தமிழ்நாட்டில் முதல்வர் மருந்தகம் அமைக்கும் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. டி-பார்ம், பி-பார்ம் வைத்திருக்கும் தொழில் முனைவோர் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக விண்ணப்பம் செய்தவர்கள் மருந்தக உரிமம் பெற்றபிறகு தொழில் முனைவோர் முதல்வர் மருந்தகம் நிறுவனத்தை சொந்தமாக அல்லது வாடகை கட்டிடத்தில் தொடங்க அறிவுறுத்தப்பட்டது.
தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர் டிஎன்சிசிஎப் உடன் ஒப்பந்தம் செய்து கொண்டு அவர்களுக்கு முதல் தவணை ரூ.1.5 லட்சம் விண்ணப்பதாரர் வங்கி கணக்கில் செலுத்தப்படும். 2ம் கள சரிபார்ப்புக்கு பிறகு மானிய இறுதி தவணை ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள பொதுவான மருந்துகளின் கையிருப்பாக வெளியிடப்படும். மேலும் கூட்டுறவு வங்கிகள் மூலம் வசதி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
முதல்வர் மருந்தகத்திற்கு தேவையான பொதுப்பெயர் (ஜெனரிக்) மருந்துகள் தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தால் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படும். மருத்துவம் சார்ந்த இதர மருத்துவ உபகரணங்கள், சித்தா, ஆயுர்வேதம், இம்காப்ஸ், டாம்கால் மற்றும் யுனானி மருந்துகள், சர்ஜிக்கல் மற்றும் நியூட்ராசூட்டிக்கல்ஸ் உள்ளிட்ட மருந்து வகைகள் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையத்தால் கொள்முதல் செய்யப்பட்டு முதல்வர் மருந்தகத்திற்கு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
குமரி மாவட்டத்தில் மட்டும் 36 முதல்வர் மருந்தகங்கள் அமைக்க விண்ணப்பம் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கூட்டுறவு துறை சார்பில் நாகர்கோவில் அருகே முகிலன்விளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் முகிலன்விளையில் அமைக்கப்பட்டு வரும் முதல்வர் மருந்தகம் பணிகளை குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் பொதுப்பெயர் (ஜெனரிக்) மருந்துகளையும் பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்க செய்யும் வகையில் முதற்கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்கள் அமைக்கப்படும் என அறிவித்தார்.
இத்திட்டத்தின் கீழ் முதல்வர் மருந்தகங்கள் செயல்படுத்தப்படும் நிலையில் தொழில் முனைவோர்கள் மருந்தாளுநர்களுக்கு ரூ.3 லட்சம் அரசு மானியமாக வழங்கப்படுகிறது. கூட்டுறவுச் சங்கங்களுக்கு அரசு மானியத்தொகையாக ரூ.2 லட்சம் வழங்கப்படுகிறது.
அதில் 50 சதவீதம் உட்கட்டமைப்பு வசதிக்கும், 50 சதவீதம் மருந்துகளாகவும் வழங்கப்படுகிறது. இவ்வறிவிப்பினை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் தொழில் முனைவோர் ஆகியோரிடமிருந்து 36 முதல்வர் மருந்தகங்கள் அமைக்க விண்ணப்பங்கள் பெறப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அதனடிப்படையில் முகிலன்விளையில் அமைக்கப்பட்டு வரும் முதல்வர் மருந்தகம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, இப்பணிகளை விரைந்து முடித்து வரும் பிப்ரவரி 15ம் தேதி அன்று திறக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
The post குமரி மாவட்டத்தில் 36 ‘முதல்வர் மருந்தகம்’ அமைக்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.