தஞ்சாவூர், பிப்.7: காந்தியடிகள் நினைவு நாளை முன்னிட்டு ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு முகாம்கள் ஜனவரி 30 முதல் இரண்டு வாரங்கள் நடைபெறுவதாக கலெக்டர் தெரிவித்தார். இதுகுறித்து கலெக்டர் பிரியங்கா பங்கஜம் கூறியிருப்பதாவது: மகாத்மா காந்தியடிகளின் நினைவு நாளான ஜனவரி 30ம் தேதி ஒவ்வோர் ஆண்டும் தேசிய தொழுநோய் ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.. அதனையொட்டி தொழுநோயாளிகள் மீது கருணையும் தொழுநோய் ஒழிப்பில் அக்கறையும் காட்டிய மகாத்மாவின் கனவை நனவாக்கும் வகையில் நாடுமுழுவதும் 30.01.2025 முதல் 15.02.2025 வரை ஸ்பர்ஷ் இருவார தொழுநோய் விழிப்புணர்வு முகாம் நடத்தப்படுகிறது.
இம்முகாமை முன்னிட்டு ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபா கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், மருத்துவக்கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களிலும் தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இருவார காலமும் மாவட்டம் முழுவதும் தீவிர தொழுநோய் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக குடிசைப் பகுதிகள், ஓட்டல்கள், அரசு அலுவலகங்கள். விடுதிகள் கட்டுமானம் நடைபெறும் இடங்கள், வெளிமாநில தொழிலாளர்களின் வசிப்பிடங்கள் ஆகிய பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளன. அனைத்து பள்ளி கல்லூரிகளிலும் தொழுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் வினாடிவினா போட்டிகளும் கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன.
இதனையொட்டி நேற்று கலெக்டர் தலைமையில் தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் உட்பட மாவட்ட அனைத்து சுகாதார அலுவலர்கள், மற்றும் அரசு மருத்துவமனைகளின் முதன்மை மருத்துவ அலுவலர்கள். தனியார் மருத்துவர்கள் ஆகியோர் பங்கேற்றனர். தொழுநோய் குறித்து மக்களிடையே நிலவுகின்ற தவறான நம்பிக்கைகள்,தேவையற்ற அச்சம், போன்றவற்றை அகற்றுதல், நோய்ப்பரவல், அறிகுறிகள், மருத்துவ முறைகள் குறித்து அறிவியல்பூர்வமான உண்மைகளை பொதுமக்களுக்கு தெரியப்படுத்துதல், புதிய நோயாளிகளைக் கண்டறிந்து சிகிச்சை அளித்தல், தொழுநோயாளிகளைச் சமூகத்தில் தனிமைப்படுத்துதல் இன்றி சக மனிதர்களாய் வாழச் செய்தல் ஆகிய நோக்கங்களுடன் நடத்தப்படுகின்ற இப்பணிகளுக்குப் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கி தொழுநோய் ஒழிப்புக்கான இயக்கத்தை வெற்றி பெறச்செய்ய வேண்டுமாய் தொழுநோய் ஒழிப்புத்துறை கேட்டுக்கொண்டுள்ளது என மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
The post வரும் 15ம் தேதி வரை தொழுநோய் விழிப்புணர்வு முகாம் appeared first on Dinakaran.
