×

குடிபோதையில் வாகனத்தை ஓட்டியதால் வாலிபர் பலி டிரக் ஓட்டுநருக்கு 5 ஆண்டு சிறை

சென்னை: சூளைமேடு நெல்சன் மாணிக்கம் சாலையில் கடந்த 2013 ஜனவரி 18ம் தேதி, வீரபத்திரன் (48) என்பவர் மேக்சி டிரக் வேனை கவனக்குறைவாக ஓட்டிவந்து அதே சாலையில் இடது ஓரமாக பைக்கில் நின்று கொண்டிருந்த சிவசுந்தர் மீது மோதியுள்ளார். இதில் சிவசுந்தர் படுகாயமடைந்துள்ளார். இதை தொடர்ந்து தறிகெட்டு ஓடிய கார் அதே சாலையில் வலதுபுறம் சைக்கிளில் சென்று கொண்டிருந்த விக்னேஷ்ராஜ் என்பவர் மீது மோதியது, இதில் விக்னேஷ்ராஜ் படுகாயமடைந்தார். அப்போதும் வாகனத்தை நிறுத்தாத வீரபத்திரன் அதை திசையில் மொபட்டில் சென்று கொண்டிருந்த வெங்கடேசன் என்பவர் மீது மோதினார்.

இதில் வெங்கடேசன் படுகாயமடைந்தார். பின்னர் அதே வேகத்தில் எதிர் திசையில் வந்துகொண்டிருந்த வேன் மீது மோதி, அந்த வாகனத்தை சேதப்படுத்தியுள்ளார். தொடர்ந்து டிரக்கை நிறுத்தாமல் ஓட்டிச்சென்ற வீரபத்திரன் சாலையில் சென்று கொண்டிருந்த பைக்கில் மோதியுள்ளார். இதில் பைக்கை ஓட்டி சென்ற கணேஷ்குமார் ஹரி படுகாயமடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வீரபத்திரனை, அண்ணாநகர் போலீசார் கைது செய்து, நடத்திய விசாரணையில் அவர் குடிபோதையில் வாகனத்தை ஓட்டியது தெரியவந்தது.

இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட சிவசுந்தர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். இதையடுத்து, வீரபத்திரன் மீது உயிரிழப்புக்கு காரணமாக இருத்தல், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி கு.புவனேஸ்வரி முன்பு விசாரணைக்கு வந்தது. போலீஸ் தரப்பில் வழக்கறிஞர் ஜி.சீனிவாசன் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டுகள் போதிய ஆதாரங்கள், சாட்சிகளுடன் நிரூபிக்கப்பட்டதால் வீரபத்திரனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் மொத்தம் ரூ.14 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

The post குடிபோதையில் வாகனத்தை ஓட்டியதால் வாலிபர் பலி டிரக் ஓட்டுநருக்கு 5 ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Nelson Manickam Road ,Choolaimedu ,Veerabhathran ,Sivasundhar ,Sivasundhar… ,
× RELATED கோவையில் போக்குவரத்து விதியை...