மதுராந்தகம்: பாக்கம் ஊராட்சியில் 40 ஆண்டுகளாக தனிநபர் ஒருவர், கிராம சாலையை ஆக்கிரமிப்பு செய்து மதில் சுவர் எழுப்பி இருந்தார். அதனை, வருவாய் துறை அதிகாரிகள், போலீஸ் பாதுகாப்புடன் நேற்று அகற்றும் நடடிக்கையில் ஈடுபட்டனர். மதுராந்தகம் அருகே பாக்கம் ஊராட்சி மாரியம்மன் கோயில் தெருவில் வசித்து வரும் சத்யா என்பவர் கிராம சாலையை ஆக்கிரமிப்பு செய்து வீட்டிற்கு முன்பு மதில் சுவர் அமைத்து சுமார் 40 ஆண்டு காலம் ஆக்கிரப்பு செய்து அனுபவித்து வந்தார்.இந்நிலையில், மாரியம்மன் கோயில் கிராம சாலைக்கு கடந்த 2022ம் ஆண்டு சிமெண்ட் சாலை போடுவதற்கான நிதி ஒதுக்கப்பட்டு இருந்தது. ஆனால், அந்த சாலையை கடந்த மூன்று ஆண்டுகளாக போடப்படாமல் கிடப்பில் போட்டு இருந்தனர்.
இதற்கு காரணம் சாலையை ஆக்கிரமிப்பு செய்து மதில் சுவர் எழுப்பி இருந்ததால் சாலை போட முடியாத நிலை ஏற்பட்டது. இந்த ஆக்கிரமிப்பு குறித்து கிராம மக்கள் மாவட்ட கலெக்டரிடம் புகார் அளித்தனர். அதன்பேரில், வருவாய் துறையினர் ஆய்வு செய்து அளவீடு செய்ததில் கிராம சாலையை ஆக்கிரமிப்பு செய்து மதில் சுவர் அமைக்கப்பட்டது தெரியவந்தது. இதன் காரணமாக, நேற்று காலை வருவாய்த்துறையினர் மற்றும் மதுராந்தகம் காவல்துறையினர் பெக்லைன் இயந்திரம் மூலம் மதில் சுவற்றினை அகற்றினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதன் மூலம் சுமார் 40 ஆண்டுகால ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு கிராம சாலை போட நடவடிக்கை எடுக்கப்பட்டதால் கிராம மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
The post பாக்கம் ஊராட்சியில் கிராம சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட மதில் சுவர் அகற்றம்: அதிகாரிகள் நடவடிக்கை appeared first on Dinakaran.