×

திண்டுக்கலில் வரும் 9-ஆம் தேதி ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் “ஒருங்கிணைந்த பண்ணையம் ஒவ்வொரு நாளும் வருமானம்” கருத்தரங்கு!

கோவை: ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் “ஒருங்கிணைந்த பண்ணையம் ஒவ்வொரு நாளும் வருமானம்” எனும் மாபெரும் கருத்தரங்கம் வரும் 9-ஆம் தேதி திண்டுக்கல் PSNA கல்லூரியில் நடைபெற உள்ளது. இந்த கருத்தரங்கினை மண் காப்போம் இயக்கத்துடன் PSNA கல்லூரி மற்றும் HDFC வங்கி இணைந்து நடத்துகிறது.

இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு கோவை பிரஸ் கிளப்பில் இன்று (06/02/2025) நடைபெற்றது. இதில் மண் காப்போம் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் திரு. முத்துக்குமார் அவர்கள் பங்கேற்று பேசினார்.

இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் முத்துக்குமார் அவர்கள் பேசுகையில் “ஈஷா மண் காப்போம் இயக்கம் தமிழகத்தை இயற்கை விவசாய மாநிலமாக மாற்றும் நோக்கத்தோடும் விவசாயிகளின் பொருளாதாரம் மற்றும் மண்வளத்தை மீட்டெடுக்கும் நோக்கத்தோடும் கடந்த 20 வருடங்களாக செயல்பட்டு வருகிறது.

இதுவரை தமிழகம் முழுவதும் 30,000-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு நேரடியாக இயற்கை விவசாய களப்பயிற்சி வழங்கியதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து அவர்களுக்கு இயற்கை விவசாயம் சார்ந்த வழிகாட்டுதல்களை வாட்ஸ்-அப் குழுக்கள் மூலமாகவும் நேரடியாக அவர்களின் நிலங்களுக்கு சென்றும் வழங்கி வருகிறது. இதன் மூலம் 10,000 விவசாயிகள் இதுவரை இயற்கை விவசாயத்திற்கு திரும்பி வெற்றிகரமாக விவசாயம் செய்து வருகிறார்கள்.

தற்போதைய சூழ்நிலையில், விவசாயிகள் ஒரே ஒரு பயிரை மட்டுமே நம்பி விவசாயம் செய்வதால், போதுமான விளைச்சலும், விளைச்சலுக்கு ஏற்ற விலையும் கிடைக்காமல் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகிறார்கள். இதற்கு தீர்வாக ஈஷா மண் காப்போம் இயக்கம் “ஒருங்கிணைந்த பண்ணையம் ஒவ்வொரு நாளும் வருமானம்” என்ற மாபெரும் கருத்தரங்கை திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ கல்லூரி மற்றும் எச். டி. எஃப்.சி வங்கியுடன் (HDFC) இணைந்து வரும் 9-ஆம் தேதி நடத்தவுள்ளது. இதில் 2000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொள்ள உள்ளனர்.

இக்கருத்தரங்கில் ஒருங்கிணைந்த பண்ணையம் மூலம் ஒவ்வொரு நாளும் வருமானம் பெறுவது எப்படி என்பது குறித்த தங்களின் அனுபவங்களையும் ஒருங்கிணைந்த பண்ணை அமைக்க அரசு சார்பில் அளிக்கப்படும் சலுகைகள் குறித்தும் முன்னோடி விவசாயிகள் பகிர்ந்து கொள்ள உள்ளனர்.

குறிப்பாக ஆடு, மாடு, கோழி, வாத்து மற்றும் பயிர்கள் வளர்த்து வருடத்திற்கு 12 லட்சம் வருமானம் ஈட்டும் முன்னோடி விவசாயி துளசிதாஸ், சிறுவிடை கோழிகள் மூலம் வருடத்திற்கு 12 லட்சம் வருமானம் ஈட்டும் முன்னோடி விவசாயி அண்ணாதுரை, மீன் வளர்ப்பில் 30 வருட அனுபவம் கொண்ட சர்மஸ்த், ஆடு வளர்ப்பில் மாதம் 1 லட்சம் ஈட்டும் எம்.ஆர்.கே பண்ணை கௌதம் மற்றும் ஒருங்கிணைந்த பண்ணையில் கீரை சாகுபடி மூலம் சாதித்து வரும் கோவையை சேர்ந்த முன்னோடி விவசாயி கந்தசாமி உள்ளிட்டோர் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு பயனுள்ள தகவல்களை பகிரவுள்ளனர்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த பண்ணையம் மூலம் நல்ல வருமானம் பெற முடியும் என்பதை விவசாயிகளுக்கு உணர்த்தும் விதமாக ஆடு, மாடு, கோழி, வாத்து, மீன் ஆகியவைகளை உள்ளடக்கிய ‘மாதிரி ஒருங்கிணைந்த பண்ணை’ ஒன்றை நிகழ்ச்சி நடைபெறும் கல்லூரி வளாகத்திலேயே அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதனுடன் விதைகள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் விற்பனை மற்றும் கண்காட்சியும் நடைபெற இருக்கிறது.” என அவர் கூறினார்.

The post திண்டுக்கலில் வரும் 9-ஆம் தேதி ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் “ஒருங்கிணைந்த பண்ணையம் ஒவ்வொரு நாளும் வருமானம்” கருத்தரங்கு! appeared first on Dinakaran.

Tags : Isha ,Soil Conservation ,Integrated Farming ,Income ,Dindigul ,Coimbatore ,Dindigul PSNA College ,PSNA College ,Conservation ,Movement ,Isha Soil Conservation Movement ,Dinakaran ,
× RELATED சென்னை முழுவதும் சீரான குடிநீர்...