* மனுத்தாக்கல் செய்தவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம், சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நாகேந்திரனுக்கு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதி கோரிய வழக்கை ஐம்பதாயிரம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆயுள் தண்டனை கைதியாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நாகேந்திரன், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முதல் எதிரியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவருக்கு சில ஆண்டுகளுக்கு முன் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் உடல் நல குறைவு ஏற்பட்டு வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதி கோரி, நாகேந்திரன் மனைவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ், இதே கோரிக்கையுடன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனு மீதான உத்தரவு தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்று கூறினார். இதைக்கேட்ட நீதிபதிகள், ஒரே கோரிக்கையுடன் இரு நீதிமன்றங்களில் மனுத்தாக்கல் செய்வதை ஏற்க முடியாது எனக்கூறி மனுதாருக்கு ஐம்பதாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.
The post ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி நாகேந்திரனுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை கோரிய மனு தள்ளுபடி appeared first on Dinakaran.