×

237 வாக்குச்சாவடிகள் தயார், 2,678 போலீசார் பாதுகாப்பு ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று வாக்குப்பதிவு: 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடக்கிறது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாக இருந்த ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவையொட்டி, இத்தொகுதிக்கு கடந்த மாதம் 7ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 10ம் தேதி துவங்கி 17ம் தேதி வரை நடைபெற்றது. திமுக சார்பில் வி.சி.சந்திரகுமார், நாதக சார்பில் சீதாலட்சுமி வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

அதிமுக, பாஜ மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் யாரும் போட்டியிடவில்லை. இதனால் கடந்த 20ம் தேதி அறிவிக்கப்பட்ட இறுதி வேட்பாளர்கள் பட்டியலின்படி, திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாதக வேட்பாளர் சீதாலட்சுமி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என 46 பேர் களத்தில் உள்ளனர். வேட்பாளர்களின் இறுதி பிரசாரம் நேற்று முன்தினம் மாலையுடன் நிறைவடைந்ததையொட்டி தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் நடந்து வந்தன.

இந்த தேர்தலில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 10 ஆயிரத்து 128 பேரும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 17 ஆயிரத்து 381 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 37 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 546 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிக்க வசதியாக 53 இடங்களில் 237 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவுகளை கண்காணிக்க வெப்கேமரா மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

இதில், 9 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக அறிவிக்கப்பட்டு, அங்கு கூடுதல் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகளில் பயன்படுத்திட ‘பேலட் சீட்’ பொருத்தப்பட்டு பாதுகாப்பு அறையில் 850 மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள், 284 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 308 விவிபேட் வைக்கப்பட்டிருந்தது. இதனை மாநகராட்சி ஆணையரும், கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருமான ஸ்ரீகாந்த், அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் பாதுகாப்பு அறையின் சீல் அகற்றி திறந்தார்.

பின்னர், நேற்று காலை முதல் வாக்குச்சாவடிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பிரத்யேக வாகனங்களில், 24 மண்டல அலுவலர்கள் முன்னிலையில் ஏற்றப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தக்கூடிய 97 வகையான பொருட்களும் கொண்டு செல்லப்பட்டன. வாக்குச்சாவடி பணியில் ஈடுபடும் 1,194 ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு ஏற்கனவே 3 கட்ட பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு நேற்று பணி ஆணை வழங்கப்பட்டு மாலையே அவர்கள் பணி செய்யும் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்குப்பதிவுக்கு முன்னேற்பாடு பணிகளை மேற்கொண்டனர். வாக்குப்பதிவானது இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள பகுதிகளில் துணை ராணுவ வீரர்கள் 300 பேர், பட்டாலியன் போலீசார் 450 பேர், ஆயுதப்படை போலீசார் 250 பேர், சட்டம் ஒழுங்கு போலீசார் 1,678 பேர் என மொத்தம் 2,678 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். பதிவான வாக்குகள் எண்ணிக்கை, வருகிற 8ம் தேதி சித்தோடு ஐஆர்டிடி கல்லூரியில் அமைக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கை மையத்தில் நடக்கும்.

* சீமான், நாதக வேட்பாளர் உட்பட 5 பேர் மீது வழக்கு
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பொதுக்கூட்டத்திற்கு நேற்று முன்தினம் மாலை 4 மணி முதல் 5 மணி வரை தேர்தல் அலுவலரிடம் அனுமதி பெற்றிருந்தனர். ஆனால், மாலை 5.59 மணி வரை பிரசாரம் செய்தனர்.

இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையினர் ஈரோடு டவுன் போலீசில் அளித்த புகாரின்பேரில், சீமான், வேட்பாளர் சீதாலட்சுமி உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே, தேர்தல் பிரசாரத்தில் வெடிகுண்டு வீசுவேன் என்று பேசியது உட்பட சீமான் மீது 5க்கும் மேற்பட்ட வழக்குகளும், வேட்பாளர் மற்றும் கட்சியினர் மீது 7க்கும் மேற்பட்ட வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post 237 வாக்குச்சாவடிகள் தயார், 2,678 போலீசார் பாதுகாப்பு ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று வாக்குப்பதிவு: 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை appeared first on Dinakaran.

Tags : Erode East ,Erode ,EVKS ,Ilangovan ,MLA ,Erode East Assembly ,Dinakaran ,
× RELATED திருச்செந்தூர் கோயில் அருகே கடல் அரிப்பு: 6 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம்