×

தலைமை தேர்தல் ஆணையர் பற்றி விமர்சனம் தேர்தல் ஆணையம் ஒரு நபரால் இயக்கப்படவில்லை: கெஜ்ரிவாலுக்கு பதிலடி

புதுடெல்லி: டெல்லியில் பேரவை தேர்தலையொட்டி கடந்த திங்கள்கிழமை(பிப்3) நடந்த இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரத்தில் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் உரையாற்றினார். அப்போது அவர், “டெல்லி பேரவை தேர்தலில் வெற்றி பெற பாஜ தேர்தல் விதிமீறல்களில் ஈடுபட்டு வருகிறது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் ஆம் ஆத்மி பலமுறை புகாரளித்தும் பாஜவுக்கு எதிராக தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், பாஜ மீதான புகார்களை புறக்கணித்து வருகிறது.

இந்திய தலைமை தேர்தல் ஆணையராக உள்ள ராஜீவ் குமார் இம்மாதம் ஓய்வு பெற போகிறார். அதன் பிறகு விதிமீறல் தொடர்பாக பாஜ மீது நடவடிக்கை எடுக்காத அவருக்கு(ராஜீவ் குமார்) ஒன்றிய பாஜ அரசு என்ன பதவி தரப்போகிறது என தெரியவில்லை. 45 ஆண்டுகள் பணியில் இருக்கும் நீங்கள் பாஜ அரசு தரும் பதவிக்காக தேசத்தின் ஜனநாயகத்தை அழிக்க துணை போகதீர்கள்” என தலைமை தேர்தல் ஆணையர் பற்றி கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார். கெஜ்ரிவாலின் விமர்சனத்துக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தகுந்த பதிலடி கொடுத்துள்ளது.

அது தன் எக்ஸ் பதிவில், “டெல்லி பேரவை தேர்தலை முன்வைத்து 3 உறுப்பினர்களை கொண்ட தேர்தல் ஆணையம் மீது அவதூறு பரப்பும் விதமாக தொடர் குற்றச்சாட்டுகள், விமர்சனங்கள் கூறப்படுவதை கவனித்து வருகிறோம். இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஒரு நபரால் இயக்கப்படவில்லை. அது 3 உறுப்பினர்களை கொண்டுள்ளது. டெல்லி தேர்தலையொட்டி அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் உள்ளிட்டோர் அளிக்கும் புகார்கள் மீது நெறிமுறைகளுக்கு உட்பட்டு உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அரசியல் கட்சிகளின் விமர்சனங்களால் திசை மாறாமல், அரசியலமைப்பு சட்டத்துக்கு கட்டுப்பட்டு பணியாற்றி, தேர்தல் நடத்தை விதிகளை கடைப்படிப்பதில் நியாயமாக செயல்பட்டு வருகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தலைமை தேர்தல் ஆணையர் பற்றி விமர்சனம் தேர்தல் ஆணையம் ஒரு நபரால் இயக்கப்படவில்லை: கெஜ்ரிவாலுக்கு பதிலடி appeared first on Dinakaran.

Tags : Chief Election Commissioner ,Election Commission ,Kejriwal ,New Delhi ,Aam Aadmi Party ,Delhi ,Chief Minister ,Arvind Kejriwal ,BJP ,Delhi Assembly ,
× RELATED வாக்காளர் பட்டியல் திருத்தம்...