புதுடெல்லி: இடைத்தரகர்கள் மூலம் உணவு தானிய கொள்முதலில் ஊழல் நடந்ததாக எதிர்க்கட்சிகள் எழுப்பிய குற்றச்சாட்டுக்கு மாநிலங்களவையில் ஒன்றிய அரசு பதில் அளித்தது. மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது நாடு முழுவதும் உணவு தானிய கொள்முதலில் இடைத்தரகர்கள் மூலம் ஊழல் நடந்ததாக எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் எம்பி திக்விஜய் சிங், பீகார் மாநிலம் ஆர்எல்எம் கட்சி எம்பி உபேந்திர குஷ்வாஹா ஆகியோர் குற்றம் சாட்டினார்கள்.
இந்த குற்றச்சாட்டு குறித்து ஒன்றிய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி பதில் அளித்து கூறியதாவது: உணவு தானியங்கள் கொள்முதலில் எந்த ஊழலும் இல்லை. விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக 100 சதவீத பணம் செலுத்தப்பட்டது. காங்கிரஸ் எம்பி திக்விஜய் சிங், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் நடந்த ஊழலைப் பற்றிப் பேசுவாரா?. நாங்கள் நேரடியாக விவசாயிகளுக்கு நேரடி பயன் பரிமாற்றம் மூலம் பணத்தை மாற்றுகிறோம். 48 மணி நேரத்திற்குள் விவசாயிகளின் கணக்குகளுக்கு நேரடியாக பணத்தை அனுப்புகிறோம். முன்பு ஒன்றிய அரசு அனுப்பிய ஒரு ரூபாயில் 15 பைசா மட்டுமே பயனாளிகளுக்கு சென்றடைந்தது. மோடி ஆட்சியில், 1 ரூபாய் அனுப்பப்படும் போது, முழு ஒரு ரூபாய், அதாவது 100 பைசா, விவசாயிகளின் கணக்குகளுக்கு செல்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
The post இடைத்தரகர்கள் மூலம் உணவு தானிய கொள்முதலில் ஊழலா? எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு மாநிலங்களவையில் ஒன்றிய அரசு பதில் appeared first on Dinakaran.