கடலூர், பிப். 4:கடலூர் மாவட்டம் சிதம்பரம் லாஸ்பேட்டை தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜன் மகன் சுரேஷ்குமார். இவரது முகநூல் கணக்கில் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என வந்த விளம்பரத்தை நம்பி, அடையாளம் தெரியாத நபர்கள் அனுப்பிய வங்கி கணக்கிற்கு ₹40,87,000 அனுப்பி ஏமாந்துள்ளார். இது குறித்து கடலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் சுரேஷ்குமார் புகார் செய்தார். இது குறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதை தொடர்ந்து கூடுதல் காவல் கண்காணிப்பாளர் நல்லதுரை தலைமையில், காவல் ஆய்வாளர் கவிதா, உதவி ஆய்வாளர் அமலா மற்றும் போலீசார் விசாரணை நடத்தி, நடவடிக்கை மேற்கொண்டு மோசடி செய்த நபர்களின் வங்கி கணக்குகளை முடக்கம் செய்து ₹8,00,000 மீட்கபட்டது.
மேலும் ஆன்லைன் லோன் மூலமாக ஏமாற்றப்பட்ட தவகுமார் டேவிட் என்பவர் ₹1,53,637 இழந்துள்ளார். இவரும் 1930 என்ற எண்ணில் உடனடியாக தனது புகாரை பதிவு செய்ததில், மோசடி செய்த நபர்களின் வங்கி கணக்குகளை முடக்கம் செய்து ₹1,13,417 மீட்கபட்டது. இதையடுத்து பணத்தை இழந்த இருவருக்கும் கடலூர் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார், தனது அலுவலகத்துக்கு வரவழைத்து பணத்தை ஒப்படைத்தார். அப்போது எஸ்பி ஜெயக்குமார் கூறுகையில், பணத்தை இழந்த 24 மணி நேரத்திற்குள் புகார் கொடுத்ததால் குற்றவாளிகளின் வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டு பணம் மீட்கப்பட்டது. பொதுமக்கள் ஆன்லைன் மூலம் வரும் விளம்பரங்களை பார்த்து ஏமாற வேண்டாம். யாரேனும் ஆன்லைன் மோசடி மூலம் ஏமாற்றப்பட்டால் உடனடியாக 1930 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம், என்றார்.
The post மோசடி செய்த பணம் மீட்பு ஆன்லைனில் வரும் விளம்பரங்களை பார்த்து ஏமாற வேண்டாம் appeared first on Dinakaran.
