×

ஜனாதிபதி உரை மீதான விவாதம் வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்க எந்த பதிலும் இல்லை: மக்களவையில் ராகுல்காந்தி ஆவேசம்

புதுடெல்லி: வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்க ஜனாதிபதி உரையில் எந்த பதிலும் இல்லை என்று மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி பேசினார். ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மனத்தில் கலந்து கொண்டு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: ஜனாதிபதி உரையில் புதிதாக என்ன சொல்லப்படுகிறது என்பதை கண்டு பிடிக்க முடியாமல் நான் தவித்தேன். ஏனெனில் இதே உரையைத்தான் கடந்த முறையும், அதற்கு முன்பும் கேட்டிருந்தேன். இந்தியா கூட்டணி ஆட்சியில் ஜனாதிபதி உரை என்றால் அதில் உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும்.

நாம் வளர்ந்துள்ளோம், வேகமாக வளர்ந்துள்ளோம். ஆனால் நாம் இன்னும் வளரும் நாடாகவே இருந்து கொண்டிருக்கிறோம். நமது பொதுவான பிரச்னை வேலைவாய்ப்பின்மையை நம்மால் சமாளிக்க முடியவில்லை என்பதே. அது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசோ அல்லது இன்றைய தேசிய ஜனநாயக கூட்டணி அரசோ இந்த நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மை பிரச்னைக்கு தெளிவான பதிலை அளிக்கவில்லை. இதை இந்த அவையில் யாரும் மறுக்க மாட்டார்கள் என்று நான் நினைக்கிறேன்.

பிரதமர் மோடி மேக் இன் இந்தியா திட்டத்தை முன்மொழிந்தார். அது நல்லதொரு யோசனை. அதன் முடிவுகள் உங்கள் முன்பு உள்ளன. கடந்த 2014ம் ஆண்டு 15.3 சதவீதமாக இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி தற்போது 12.6 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த 60 ஆண்டுகளில் மிகவும் குறைவான உற்பத்தி பங்களிப்பாகும். நான் பிரதமரை குறைகூறவில்லை. அவர் முயற்சி செய்யவில்லை என்று கூறுவது நியாயமாக இருக்காது. அவர் முயற்சித்தார் ஆனால் தோல்விடைந்தார் என்று சொல்லலாம்.

ஒரு நாடாக உற்பத்தியை ஒழுங்கமைப்பதில் நாம் தோல்வியைந்துள்ளோம். நம்மிடம் உற்பத்தியை ஒருங்கிணைக்கும் சிறந்த நிறுவனங்கள் உள்ளன. ஆனால் அடிப்படையில் நாம் செய்தது என்னவென்றால் உற்பத்தி அமைப்பை நாம் சீனர்களிடம் ஒப்படைத்துள்ளோம். இந்த மொபைல் போன், இதனை நாம் இந்தியாவில் உருவாக்கினோம் என்று சொல்லிக்கொள்ளலாம். இந்த போன் இந்தியாவில் உருவாக்கப்படவில்லை. அது இந்தியாவில் அசம்பிள் செய்யப்பட்டது. இதற்கான அனைத்து உற்பத்தி பொருட்களும் சீனாவில் உருவாக்கப்பட்டது. நாம் சீனாவுக்கு வரி செலுத்துகிறோம்.

சீனா இந்த இடத்தில் இந்தியாவை விட குறைந்தது 10 வருடங்கள் முன்னிலையில் உள்ளது. சீனா கடந்த 10 ஆண்டுகளாக பேட்டரிகள், ரோபோக்கள், மோட்டார்கள் போன்ற துறைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. நாம் இந்தத் துறைகளில் பின்தங்கியுள்ளோம். நம் நாட்டில் உற்பத்தி செய்யப்பட வேண்டிய பொருட்கள் சீனாவுக்கு சென்று விட்டன. சீனா நமது எல்லைக்குள் இருப்பதற்கான காரணம் மேக் இன் இந்தியா திட்டத்தின் தோல்வியே.

இந்தியா உற்பத்தி செய்ய மறுப்பதே சீனா நமது எல்லைக்குள் இருப்பதற்கான காரணம். இந்தியா இந்தப் புரட்சியை மீண்டும் சீனாவிடம் ஒப்படைத்து விடுமோ என்று நான் கவலைப்படுகிறேன். நமது நாட்டில் சமூக பதற்றம் அதிகரித்து வருகிறது. மின்சார மோட்டார்கள், பேட்டரிகள், ஒளியியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு ஆகிய நான்கு தொழில்நுட்பங்கள் இயக்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. இதில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

* தலைமை நீதிபதியை நீக்கியது ஏன்?
ராகுல்காந்தி பேசுகையில், ‘தலைமை தேர்தல் கமிஷனரை தேர்வு செய்ய இன்னும் சில நாட்களில் பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோருடன் இணைந்து நானும் இன்னும் சில நாட்களில் ஆலோசனை நடத்த உள்ளேன். இந்த விவகாரத்தில் மிக முக்கியமான கேள்வியை பிரதமர் மோடிக்கு எழுப்புகிறேன். தலைமை தேர்தல் கமிஷனர் நியமனத்தில் தலைமை நீதிபதி நீக்கப்பட்டது ஏன்?.

இந்த தேர்வுக்குழு 2:1 என்ற முறையில் சீரற்ற மைதானமாக உள்ளது. மோடி, அமித்ஷா சொல்வதை ஏற்கும் ரப்பர் ஸ்டாம்பாக நான் இதில் கலந்து கொள்ள வேண்டுமா?. ஆனால் தலைமை நீதிபதியின் இருப்பு மிகவும் சமநிலையான விவாதத்திற்கு வழிவகுத்திருக்கும். தலைமை நீதிபதியை நீக்கியதால் இந்த மாற்றம் திட்டமிட்ட உத்தியாகத் தோன்றுகிறது’ என்றார்.

* 70 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டது எப்படி?
ராகுல்காந்தி பேசும் போது மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் குறித்து குறிப்பிட்டார். அவர் கூறுகையில்,’ மகாராஷ்டிராவில் ஜூனில் நடந்த மக்களவை மற்றும் நவம்பர் மாதம் நடந்த சட்டப்பேரவை தேர்தலுக்கு இடையே 70 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு ஐந்து மாதங்களில் அதிக வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு இமாச்சலப்பிரதேச மக்கள் தொகைக்கு இணையான வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதில் ஏதோ சிக்கல் உள்ளது என்று நான் கூறுகிறேன். குறிப்பாக பாஜ வெற்றி பெற்ற தொகுதிகளில் புதிய வாக்காளர்கள் அதிகம் சேர்க்கப்பட்டுள்ளனர்’ என்றார்.

* டிரம்ப் பதவி ஏற்புவிழா ராகுல் சொல்வது சுத்தப் பொய்: ஜெய்சங்கர் பதில்
ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மக்களவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி,’ அமெரிக்க அதிபர் டிரம்பின் பதவியேற்பு விழாவுக்காக பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட வேண்டும் என்பதற்காக வெளியுறவுத் துறை அமைச்சர் பல முறை அமெரிக்கா சென்றார். அமெரிக்க அதிபரின் பதிவியேற்பு விழாவுக்கு நமது பிரதமரை அழைக்க வேண்டும் என்பதற்காக நாம் நமது வெளியுறவு அமைச்சரை இவ்வாறு பலமுறை அனுப்ப மாட்டோம்.

மாறாக, அமெரிக்க அதிபர் இங்கு வந்து நமது பிரதமரை அழைத்திருப்பார்’என்று பேசியிருந்தார். ராகுல்காந்தி பேச்சுக்கு பா.ஜ எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். அப்போது நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு பதிலளித்து பேசும்போது,’வெளியுறவு விவகாரம், ராணுவ விவகாரங்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் இப்படி பேசக் கூடாது’ என்றார். இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் தனது எக்ஸ் பதிவில்,’கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் நான் அமெரிக்கா சென்றது குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வேண்டுமென்றே பொய்யைச் சொல்கிறார்.

நான் அமெரிக்க வெளியுறவு செயலாளரையும், ஜோ பைடன் நிர்வாகத்தின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரையும் சந்திக்கச் சென்றேன். அத்துடன், வெளியுறவுத் தூதர்களின் பொதுக் குழுக் கூட்டத்துக்கு தலைமை தாங்கவே அமெரிக்கா சென்றேன். நான் அங்கு தங்கியிருந்தபோது புதிதாக வரவிருக்கும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் என்னைச் சந்தித்தார்.

அந்தப் பயணத்தில், எந்தக் கட்டத்திலும் பிரதமருக்கான அழைப்பு குறித்து விவாதிக்கப்படவில்லை. இதுபோன்ற விழாக்களில் நமது பிரதமர் கலந்து கொள்வதில்லை என்று அனைவருக்கும் தெரியும். பொதுவாக இந்தியா தனது சிறப்புத் தூதர்களாலேயே பிரதிநிதித்துவப்படுகிறது. ராகுல் காந்தியின் பொய் அரசியல் உள்நோக்கம் கொண்டதாக இருக்கலாம். ஆனால், இது வெளிநாடுகளில் நமது நாட்டின் நற்பெயரை சேதப்படுத்துகிறது’என்று தெரிவித்துள்ளார்.

The post ஜனாதிபதி உரை மீதான விவாதம் வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்க எந்த பதிலும் இல்லை: மக்களவையில் ராகுல்காந்தி ஆவேசம் appeared first on Dinakaran.

Tags : Rahul Gandhi ,Lok Sabha ,New Delhi ,Leader of ,Opposition ,President ,
× RELATED கல்வியை ஆர்எஸ்எஸ் தனது...