திருவனந்தபுரம்: வயநாட்டில் மனைவியுடன் தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகம் ஏற்பட்டதை தொடர்ந்து உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த வாலிபரை துண்டு துண்டாக வெட்டிக் கொன்று உடல் பாகங்களை 2 பேக்குகளில் அடைத்து வைத்து ஆற்றில் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆட்டோவில் ஏற்றி சென்றபோது டிரைவர் போலீசுக்கு கொடுத்த தகவலால் சிக்கினார். உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் முகம்மது ஆரிப் (38). இவர் கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் கல்பெட்டா அருகே உள்ள வெள்ளமுண்டா பகுதியில் கூலித்தொழிலாளியாக வேலைபார்த்து வருகிறார். இதற்காக அவர் தனது மனைவியுடன் அப்பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் குடியிருந்தார்.
இதேபகுதியில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த முஜீப் (25) என்பவரும் தனியாக வசித்து வந்தார். ஒரே மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால் முகம்மது ஆரிப் குடும்பத்தினரிடம் முஜீப் நெருங்கி பழகியதாக கூறப்படுகிறது. ஆனால் நாளடைவில் தன்னுடைய மனைவியுடன் முஜீப் தகாத உறவு வைத்திருந்ததாக முகம்மது ஆரிப்புக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து ஒருதடவை அவர் தனது மனைவியிடம் நேரடியாகவே கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மனைவி வாக்குவாதம் செய்துள்ளார். எப்போதெல்லாம் பிரச்னை வருகிறதோ, அப்போதெல்லாம் முகம்மது ஆரிப் தனது மனைவியிடம் இதுகுறித்து கேட்டு அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் முகம்மது ஆரிப் நேற்று மாலை நைசாக 2 பெரிய பேக்குகளுடன் வெளியே செல்ல திட்டமிட்டார். இதற்காக ஆட்டோவில் சென்றுள்ளார். ஊருக்கு எங்கேயோ செல்கிறார் என ஆட்டோ டிரைவரும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் திடீரென மூளித்தோடு ஆற்றுப்பாலம் அருகே ஆட்டோவை நிறுத்துமாறு முகம்மது ஆரிப் கூறினார். ஆட்டோ டிரைவர் நிறுத்திய பிறகு, 2 பேக்குகளையும் கையில் தூக்கிக்கொண்டு முகம்மது ஆரிப் ஆற்றுப்பாலத்தின் விளிம்பை நோக்கி நடந்தார்.
பின்னர் சற்றும் யோசிக்காமல் அந்த 2 பேக்குகளைகளையும் ஆற்றில் தூக்கி வீசியுள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஆட்டோ டிரைவருக்கு சந்தேகம் அதிகமானது. உடனே அவர் வெள்ளமுண்டா போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் ஆற்றில் தூக்கி வீசப்பட்ட 2 பேக்குகளையும் கைப்பற்றி அதனை திறந்துபார்த்தபோது அதிர்ச்சி அடைந்தனர். அந்த பேக்குகளில் மனிதனுடைய வெட்டப்பட்ட உடல் பாகங்கள் இருந்ததை கண்டு அதிர்ந்தனர்.
இதையடுத்து முகம்மது ஆரிப்பை கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில் அந்த பேக்குகளில் இருந்தது முஜீபின் உடல் பாகங்கள் என்றும், மனைவியுடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக ஏற்பட்ட சந்தேகத்தில் அவரை வெட்டி கொலை செய்ததாகவும் முகம்மது ஆரிப் கூறினார். ஆனால் அவர் முஜீப்பை எப்படி? எங்கு வைத்து? கொலை செய்தார், தனி ஆளாக செய்தாரா? அல்லது யாரேனும் கூட்டு சேர்ந்து கொலை செய்தார்களா? என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் வயநாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post மனைவியுடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக சந்தேகம்; வாலிபரை கொன்று உடலை துண்டு துண்டாக வெட்டிய தொழிலாளி appeared first on Dinakaran.
