×

பிரபல பிரியாணி கடை பெயரில் ரூ.25 கோடி வசூலித்து மோசடி: ராஜபாளையம் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட 4 மாநில மக்கள் குவிந்ததால் பரபரப்பு

ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தை சேர்ந்தவர் கங்காதரன். இவர் ராஜபாளையம் – சங்கரன்கோவில் சாலை புதிய பேருந்து நிலையம் அருகே கேரளாவை சேர்ந்த பிரபலமான ஒரு நிறுவனத்தின் பிரியாணி கடை நடத்தி வருவதாகவும், அதற்கு தமிழகம் முழுவதும் கிளைகள் திறக்க உள்ளதாகவும் 2 வருடங்களுக்கு முன் கவர்ச்சிகரமாக விளம்பரப்படுத்தினார். இதனைத்தொடர்ந்து தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 239 பேர் தங்கள் பகுதியில் பிரியாணி கடை திறப்பதற்காக தொடர்பு கொண்டனர்.

இவர்களிடம் கங்காதரன், பொருட்கள், கடை வாடகை உள்ளிட்ட பல்வேறு செலவுகளுக்காக மொத்தம் ரூ.25 கோடி வரை வாங்கியதாக கூறப்படுகிறது. இதற்காக 100 ரூபாய் பத்திரத்தில் ஒப்பந்தம் போட்டு அனைவருக்கும் கொடுத்துள்ளார். தொடக்கத்தில் 21 கடைகள் மட்டும் திறக்கப்பட்டன. இந்த கடைகள் சிறிது காலத்தில் மூடப்பட்டன. மற்றவர்களுக்கு இதுவரை கடை திறக்கப்படவில்லை. பணமும் திருப்பி வழங்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அந்தந்த காவல் நிலையங்களில் புகார் அளித்தனர்.

இதையடுத்து விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்ட கங்காதரன், தன்னை நீதிமன்ற வழக்கு மூலம் மட்டுமே விசாரணை செய்ய வேண்டும் என ராஜபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விபரம் குறித்து பாதிக்கப்பட்ட 239 பேருக்கும் நீதிமன்றத்தில் இருந்து சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இதனையடுத்து நேற்று 4 மாநிலங்களில் இருந்து 200க்கும் மேற்பட்டோர் ராஜபாளையம் நீதிமன்றத்தில் ஆஜராகினர். ஆனால் வழக்கு தொடர்ந்த கங்காதரன் வரவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்ற உள்வாயில் அருகே திரண்டு, கங்காதரனை கைது செய்யக் கோரி முழக்கங்களை எழுப்பினர். எனவே பரபரப்பு ஏற்பட்டது. இவர்களுக்கு மார்ச் 4ம் தேதி வாய்தா போட்டிருப்பதாக நீதிமன்றம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர்கள் நீதிமன்றம் எதிரே சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

இவர்களை தடுத்து நிறுத்திய டிஎஸ்பி பிரீத்தி உள்ளிட்ட காவல் துறையினர் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். குற்றம் சாட்டப்பட்டவர் மீது புகார் அளிக்கும்பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கலைந்து சென்ற அவர்கள், கங்காதரன், அவருக்கு உடந்தையாக இருந்த ப்ரவீன், ராம்குமார், தேவதாஸ், மரியநாயகம், சதீஷ்குமார் ஆகிய 6 பேர் மீது ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

The post பிரபல பிரியாணி கடை பெயரில் ரூ.25 கோடி வசூலித்து மோசடி: ராஜபாளையம் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட 4 மாநில மக்கள் குவிந்ததால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Biryani ,Rajapaliam ,court ,Gangadharan ,Virudhunagar District, Rajapalayam ,Kerala ,Sankaranko ,Tamil Nadu ,Dinakaran ,Rajapaliam Court ,
× RELATED பிரியாணி கடைக்காரரிடம் கத்தி முனையில் பணம் பறித்த ரவுடி கைது