- விமானநிலைய அதிகாரசபை
- கோயம்புத்தூர் விமான நிலையம்
- கோயம்புத்தூர்
- தமிழ்நாடு அரசு
- சென்னை
- மும்பை
- பெங்களூரு
- தில்லி
- ஹைதெராபாத்
- புனே
- கோவா...
- தின மலர்
கோவை: கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக தமிழ்நாடு அரசு கையகப்படுத்தி வழங்கிய 470 ஏக்கர் நிலங்களை விமான நிலைய ஆணையம் பெற்றுக் கொண்டது. கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னை, மும்பை, பெங்களூரு, டெல்லி, ஐதராபாத், பூனே, கோவா ஆகிய உள்நாட்டு பகுதிகளுக்கு 32 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதேபோல சிங்கப்பூருக்கு 2 விமானங்களும், ஷர்ஜாவிற்கு வாரத்திற்கு 5 முறையும், அபுதாபிக்கு வாரத்திற்கு 3 முறையும் வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
கோவை விமான நிலையத்தை பயன்படுத்தி வரும் பயணிகளின் எண்ணிக்கை மட்டுமின்றி, சரக்கு போக்குவரத்தும் அதிகரித்து வருகிறது. கோவை விமான நிலையத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை கடந்தாண்டுகளைவிட தற்போது பல மடங்கு அதிகரித்துள்ளது. இதைக்கருத்தில் கொண்டு விமான நிலையத்தை விரிவாக்கம் செய்யவேண்டும் என பல ஆண்டுகளாக தொழில் துறை உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக நிலம் கையகப்படுத்த கடந்த 2010ம் ஆண்டில் அரசாணை வெளியிடப்பட்டது. இதற்காக சிங்காநல்லூர், உப்பிலிபாளையம், காளப்பட்டி, நீலாம்பூர், இருகூர் ஆகிய கிராமங்களில் 627.89 ஏக்கர் நிலம் கையகப்படுத்த திட்டமிடப்பட்டது. அதன்பின்னர் பல்வேறு காரணங்களால் அப்பணிகள் மெதுவாக நடைபெற்று வந்தன. தற்போது அப்பணிகள் வேகம் எடுத்துள்ளன. தமிழ்நாடு அரசு ரூ.2088.92 கோடி நிதி ஒதுக்கி, நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கி 451.74 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியது.
20.58 ஏக்கர் புறம்போக்கு நிலத்தையும் சேர்த்து 472.32 ஏக்கர் நிலம் எவ்வித நிபந்தனையும் இன்றி, இலவசமாக 99 ஆண்டுகள் குத்தகைக்கு கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் மாவட்ட நிர்வாகம் விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைத்தது. ஏற்கனவே இந்த நிலங்களுக்குள் இருக்கும் ஒன்றிய அரசின் பாதுகாப்புத் துறைக்கு சொந்தமான 148.39 ஏக்கர் நிலத்தில் விமான நிலைய விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ளலாம் என்று அத்துறையின் சார்பில் தடையின்மை சான்று வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு சார்பில் கையகப்படுத்தி ஒப்படைத்த நிலங்களில் 449.59 ஏக்கர் பட்டா நிலம், 20.58 ஏக்கர் புறம்போக்கு நிலம் உட்பட மொத்தம் 470.17 ஏக்கர் நிலங்களை பல மாதங்களுக்கு பிறகு விமான நிலைய ஆணையம் பெற்றுக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒப்படைக்கப்பட்ட நிலங்களை விமான நிலைய ஆணையம் அளவீடு செய்து வருகிறது. இதற்கு அடுத்ததாக அந்த நிலங்களில் சுற்றுச்சுவர் கட்டப்படும். இந்த திட்டத்திற்கு தேவையான மீதமுள்ள நிலங்களே கையகப்படுத்தும் பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
இதுகுறித்து தொழில் அமைப்பினர் கூறுகையில், ‘‘கோவை மக்களின் நீண்ட கால கோரிக்கையாக விமான நிலைய விரிவாக்கம் இருந்து வருகிறது. தொழில் வளர்ச்சி உள்ள மண்டலமாக கொங்கு மண்டலம் உள்ளது. கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, கரூர், சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய மேற்கு மண்டலத்தில் உள்ள ஒரே சர்வதேச விமான நிலையம் கோவை விமான நிலையம்தான். வெளிநாட்டு விமான சேவைகளை அதிகரிக்க விமான நிலைய விரிவாக்கம் செய்வது அவசியம்.
கோவை விமான நிலையம் ஆண்டுக்கு 20 லட்சம் பயணிகள் வரை கையாளும் திறனை கொண்ட வகையில் அமைக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டில் மட்டும் 30 லட்சம் பயணிகள் கோவை விமான நிலையத்தை பயன்படுத்தியுள்ளனர். அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கோவை விமான நிலைய விரிவாக்க பணிகளை மேற்கொள்ள வேண்டும். மீதமுள்ள நிலங்களையும் விரைவாக கையகப்படுத்தி, விமான நிலைய விரிவாக்க பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும்’’ என்றனர்.
* விமான நிலைய ஆணையம் பெற்றுக் கொண்ட நிலம்
பட்டா நிலம் 449.59
புறம்போக்கு நிலம் 20.58
பாதுகாப்பு துறை நிலம் 148.39
* ஆண்டு வாரியாக பயணிகள் எண்ணிக்கை
2021 1,273,520
2022 2,309,525
2023 2,886,533
2024 3,063,878
The post 470 ஏக்கர் நிலத்தை பெற்ற விமான நிலைய ஆணையம் கோவை ஏர்போர்ட் விரிவாக்க ஆரம்பக்கட்ட பணிகள் துவக்கம் appeared first on Dinakaran.