மதுரை: சட்டவிரோத கல்குவாரி பற்றி புகார் அளித்ததற்காக கொலை செய்யப்பட்ட சமூக ஆர்வலர் ஜகபர்அலியின் உடலை தோண்டி எடுத்து, புதைத்த இடத்திலேயே உடலை எக்ஸ்ரே எடுக்குமாறு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. புதுக்கோட்டை வெங்கலூரைச் சேர்ந்த மரியம், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: சுற்றுச்சூழல் ஆர்வலரான எனது கணவர் ஜகபர் அலி, கடந்த 17ம் தேதி, டிப்பர் லாரி ஏற்றி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டவிரோத குவாரிகள் நடத்தியவர்களிடம் இருந்து ஏற்கனவே கொலை மிரட்டல்கள் வந்தன. எனது கணவரின் உடல் ஜன. 18ம் தேதி மாலை 4 மணியளவில் உடற்கூறாய்வு செய்யப்பட்டாலும், 10 நாட்கள் தாமதத்திற்கு பின்பு சான்றிதழ் வழங்கப்பட்டது. வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டாலும் முதல் தகவல் அறிக்கை எங்களுக்கு வழங்கப்படவில்லை. எனவே, என் கணவரின் உடலை தோண்டி எடுத்து, இரண்டு தடய அறிவியல் நிபுணர்களோடு, எங்கள் தரப்பு நிபுணரையும் இணைத்து புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில், எக்ஸ்ரே எடுத்து, மறுஉடற்கூறாய்வு செய்யவும், அதனை வீடியோ பதிவு செய்யுமாறும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி நிர்மல்குமார் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், ஜகபர் அலியின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்திலேயே எக்ஸ்ரே செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. இதைதொடர்ந்து நீதிபதி, புதுக்கோட்டை மாவட்ட அரசு மருத்துவமனையின் டீன், மருத்துவர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் உள்ளிட்டோர் எக்ஸ்ரே செய்ய தேவையான வசதிகளை செய்து தர வேண்டும்.
திருமயம் தாசில்தார் முன்னிலையில், போதிய போலீஸ் பாதுகாப்புடன், ஜகபர் அலி உடல் புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து தோண்டி எடுத்து, அந்த இடம் முழுவதுமாக மறைக்கப்பட்டு, எக்ஸ்ரே எடுக்கப்பட வேண்டும். ஊடகங்களோ, வேறு யாருமோ அனுமதிக்கப்படக் கூடாது. செல்போனில் புகைப்படங்களை எடுக்கவும் அனுமதிக்க கூடாது.
உடல் ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே செய்யப்படுவது தொடர்பான எந்த புகைப்படமும் விசாரணைக்காக அன்றி வேறு இடங்களில் பகிரப்படக்கூடாது. எக்ஸ்ரே எடுக்கும் நடவடிக்கைகள் முழுவதுமாக வீடியோ பதிவு செய்யப்பட்டு விசாரணை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். இயன்ற அளவு விரைவாக இந்த நடவடிக்கையை செய்து முடிக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
* காத்திருப்போர் பட்டியலுக்கு கனிமவள அதிகாரி மாற்றம்
கொலையான சமூக ஆர்வலர் ஜகபர் அலி குற்றம் சாட்டி இருந்த திருமயம், துளையானூர், மலைக்குடிப்பட்டி பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில், புதுக்கோட்டை மாவட்ட கனிமவள உதவி இயக்குநர் லலிதா தலைமையிலான புதுக்கோட்டை, திருச்சி, கரூர் மாவட்ட புவியியல் மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகள் கடந்த 20ம்தேதி முதல் 22ம்தேதி வரை தொடர்ந்து 3 நாட்கள் ஆய்வு நடத்தினர். நேரடியாகவும், ட்ரோன் மூலமாகவும் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வில், குவாரிகள் கடந்த 1992 முதல் செயல்பட்டு வந்ததும், ஒப்பந்த காலம் 2023ல் முடிந்ததும், கடந்த 6 வருடங்களாக உரிமம் இல்லாமல் செயல்பட்டு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஆய்வுக்கான அறிக்கை சென்னை கனிமவளத்துறை இயக்குநரிடம் சமர்ப்பிக்கப்பட இருந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்ட கனிமவள உதவி இயக்குநர் லலிதா திடீரென காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். வேலூர் கனிமவள உதவி இயக்குநர் நடராஜன் கூடுதலாக பொறுப்பு வகிப்பார் என கனிமவளத்துறை ஆணையர் சரவணவேல்ராஜ் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
The post சட்டவிரோத கல்குவாரி பற்றி புகார் கொலை செய்யப்பட்ட ஜகபர் அலி உடலை தோண்டி எடுத்து எக்ஸ்ரே: ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.