×

பொங்கல் விழாவை முன்னிட்டு பாலமேட்டில் கோலாகல ஜல்லிக்கட்டு

* 21 காளைகளை அடக்கி வீரர் அசத்தல் * அடக்க முடியாத ‘காளைக்கு’ கார் பரிசுஅலங்காநல்லூர் : பொங்கல் விழாவை முன்னிட்டு பாலமேட்டில் நேற்று நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 21 காளைகளை அடக்கிய வீரருக்கு டூவீலர், சிறந்த காளையின் உரிமையாளருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. தைப்பொங்கல் விழாவை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் அடுத்தடுத்து ஜல்லிக்கட்டு நடப்பது வழக்கம். இதன்படி நேற்று  முன்தினம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடந்தது. இதில் 641 காளைகள் களம்  இறக்கப்பட்டன. காளைகள் முட்டியதில் 39 வீரர்கள், பார்வையாளர்கள் 17 பேர்,  காளைகளின் உரிமையாளர்கள் 24 பேர் என மொத்தம் 80 பேர் படுகாயமடைந்தனர்.  பார்வையாளரான அவனியாபுரம் குட்டிஸ் மகன் பாலமுருகன்(18), காளை முட்டியதில்  காயமடைந்து இறந்தார். பிடிபடாத காளைகள், காளைகளை அடக்கிய வீரர்கள்  தங்கக்காசு, வாஷிங்மிஷின், ஏர்கூலர், பீரோ, கட்டில், வெள்ளிக்காசு,  சைக்கிள், மிக்ஸி, கிரைண்டர், எவர்சில்வர் பாத்திரங்கள் என பரிசுகள்  பெற்றனர்.மதுரை மாவட்டம், பாலமேட்டில் மாட்டுப்பொங்கல் நாளான நேற்று காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு துவங்கியது. அமைச்சர்கள் பி.மூர்த்தி, பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், கலெக்டர் அனீஷ் சேகர், எஸ்பி பாஸ்கரன் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள், காளைகளின் உரிமையாளர்கள் பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பின்னர் அமைச்சர்கள் கொடியசைத்து ஜல்லிக்கட்டை துவக்கினர். முன்னதாக விழா கமிட்டி சார்பில் பாலமேடு பொது மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டி அலுவலகத்தில் ஜல்லிக்கட்டில் வென்றவர்களுக்கு வழங்கப்பட்ட வேஷ்டி, துண்டு உள்ளிட்ட பரிசுப் பொருட்களை வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. தொடர்ந்து அங்குள்ள விநாயகர் கோயிலில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் பங்கேற்கும் காளைகளை நிறுத்தி சிறப்பு வழிபாடு நடத்தி, அங்கிருந்து மேளதாளம் முழங்க ஊர்வலமாக சென்று வாடிவாசல் அருகே உள்ள மண்டு புலி சுவாமி கோயிலிலும் சிறப்பு வழிபாடு நடத்தினர். முதலில் வாடிவாசலில் இருந்து மடத்து கமிட்டி கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது.  தொடர்ந்து மஞ்சமலை சுவாமி, அய்யனார் சுவாமி, பட்டாளம்மன், சாத்தாவுராயன், மாரியம்மன், பத்திரகாளியம்மன் கோயில்களின் காளைகள் அடுத்தடுத்து அவிழ்த்து விடப்பட்டன. அரசு வழிகாட்டுதலின்படி ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டிருந்த 704 காளைகள் களமிறக்கப்பட்டன. தடுப்பூசி சான்றிதழ் சரி பார்க்கப்பட்ட பின் 300 வீரர்கள் களமிறங்கினர். களத்தில் சீறிப்பாய்ந்த காளைகளுடன், வீரர்கள் மல்லுக்கட்டினர். மாலை 5 மணிக்கு ஜல்லிக்கட்டு  நிறைவடைந்தது. பிடிபடாத காளைகளுக்கும் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் என  பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.  நேற்றைய பாலமேடு ஜல்லிக்கட்டில் பொதும்பு கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன், 21 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்தார். இவருக்கு உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ சார்பில் வழங்கப்பட்ட டூவீலர் முதல் பரிசாக வழங்கப்பட்டது. மேட்டுப்பட்டியை சேர்ந்த கார்த்திக் ராஜா 7 காளைகளை அடக்கி, இரண்டாம் பரிசாக எல்இடி டிவி பெற்றார்.  சிறந்த காளைக்கான முதல் பரிசினை  சிவகங்கை புலியூர் கிராமத்தைச் சேர்ந்த சூறாவளி காளை பிடித்தது. இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில்  கார் பரிசாக வழங்கப்பட்டது. சூறாவளி பெயர் அறிவித்தபோது, அவர் களத்தில் இல்லாததால் கலெக்டர் அனீஷ் சேகரிடம் இதற்கான சாவியை அமைச்சர் பி.மூர்த்தி ஒப்படைத்தார். மதுரை மேலமடை பிரகாஷ் என்பவரது காளைக்கு 2ம் பரிசாக பசு, கன்று வழங்கப்பட்டது. நேற்றைய பாலமேடு ஜல்லிக்கட்டில்  33 பேர் காயமடைந்தனர். இவர்கள் தவிர, கருமாத்தூர் நத்தப்பட்டியைச் சேர்ந்த கோபிநாத்(33) என்ற  போலீஸ்காரர் உள்ளிட்ட 10 பேர் படுகாயமடைந்து மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நாளை (ஜன.17) நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.ஒவ்வொரு காளைக்கும் ஒரு தங்கக்காசு பரிசுபாலமேடு ஜல்லிக்கட்டில் பங்கேற்ற அனைத்து காளைகளுக்கும் விழா கமிட்டி நிர்வாகத்தினர் சார்பில் தங்கக்காசு பரிசாக வழங்கப்பட்டது. கேலரிகளில் பார்வையாளர்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் அமர்ந்து ஜல்லிக்கட்டு போட்டிகளை கண்டு ரசித்தனர்.முறையாக நடந்தது அமைச்சர் பி.மூர்த்தி பேட்டிமதுரை பாலமேட்டில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி முடிந்ததும் அமைச்சர் பி.மூர்த்தி நிருபர்களிடம் கூறும்போது, ‘‘கொரோனா காலத்திலும் கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு நடத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுமதி அளித்துள்ளார். கடந்த காலத்தில் பல்வேறு பிரச்னைகள் இருந்தது. ஆனால், இப்போது அதுமாதிரி இல்லாமல் முறையாக ஆன்லைனில் விடுபட்டு போகாமல் பதிவு செய்யப்பட்டு தேர்வு செய்யப்பட்டது. இதே கட்டுப்பாடுகளுடன் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடைபெறும். கடந்த இரு நாட்கள் நடந்த ஜல்லிக்கட்டில் ஒரு தவறு கூட நடக்கவில்லை” என்றார்.அவனியாபுரத்தில் 24 காளைகளை அடக்கியவருக்கு முதல்வர் சார்பில் கார் பரிசுஅவனியாபுரம் ஜல்லிக்கட்டில் அதிகபட்சமாக 24 காளைகளை அடக்கிய அவனியாபுரம் கார்த்திக் முதலிடம் பிடித்தார். இவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் கார் பரிசு வழங்கப்பட்டது. 2வது பரிசாக 19 காளைகளை அடக்கிய வலையங்குளம் முருகனுக்கு டூவீலர், 3வது பரிசாக 12 காளைகளை அடக்கிய விளாங்குடி பாரத்குமாருக்கு பசுவும் கன்றும் வழங்கப்பட்டன.சிறந்த காளையாக தேர்வான மணப்பாறை தேவசகாயம் காளைக்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் டூவீலர் வழங்கப்பட்டது. 2வது பரிசாக அவனியாபுரம் ராகுவிற்கு பசுங்கன்று, 3வது பரிசாக பிரதீஸ் சைக்கிள் பெற்றனர். சிறந்த வீரர்கள், காளைகளின் உரிமையாளர்களுக்கு அமைச்சர் பி.மூர்த்தி பரிசுகள் வழங்கினார். முதல்பரிசு பெற்ற கார்த்திக் கூறுகையில், கடந்த 3 ஆண்டாக மாடுபிடி பயிற்சியில் ஈடுபட்டேன். இந்த முறை அதிக காளைகளை அடக்க முதல்வரின் கார் பரிசு பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்த ஆண்டு மேலும் சாதனை படைப்பேன் என்றார்….

The post பொங்கல் விழாவை முன்னிட்டு பாலமேட்டில் கோலாகல ஜல்லிக்கட்டு appeared first on Dinakaran.

Tags : Kolagala ,jallikattu ,Balamet ,Pongal festival ,Alankanallur ,Kolagala jallikattu ,Dinakaran ,
× RELATED நெல்லையப்பர் கோயிலில் இன்று...