×

மோசடி வழக்குகளில் 11 ஆண்டுகளாக வெளிநாடுகளில் தலைமறைவாக இருந்தவர் கைது: சென்னை வந்தபோது சிக்கினார்


பூந்தமல்லி: நம்பிக்கை துரோகம், மோசடி வழக்குகளில் 11 ஆண்டுகளாக வெளிநாடுகளில் தலைமறைவாக இருந்த கேரளாவை சேர்ந்தவர் சார்ஜாவில் இருந்து விமானத்தில் சென்னை வந்தபோது குடியுரிமை அதிகாரிகள் சோதனையில் சிக்கினார். 11 ஆண்டுகள் தலைமறைவு குற்றவாளியை கைது செய்து கேரளாவுக்கு அழைத்து செல்ல மலப்புரம் தனிப்படை போலீசார் சென்னை வந்தனர். கேரள மாநிலம், மலப்புரம் அருகே உள்ள திருரங்காடி பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் பஷீர் (53). இவர் மீது திருரங்காடி காவல் நிலையத்தில் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு, 2014ம் ஆண்டு நம்பிக்கை துரோகம் மற்றும் மோசடி வழக்குகள் பதிவாகின. இதையடுத்து போலீசார் இவரை கைது செய்து விசாரணை நடத்த தேடி வந்தனர். ஆனால் இவர் போலீசில் சிக்காமல் வெளிநாட்டுக்கு தப்பியோடி தலைமறைவாகிவிட்டார்.

வெளிநாட்டில் தலைமறைவாக இருந்து வந்த அப்துல் பஷீரை கைது செய்ய கேரள மாநிலம் மலப்புரம் காவல்துறை கடந்த ஆண்டு நடவடிக்கை மேற்கொண்டது. அதன்படி கடந்த 2024ம் ஆண்டு ஜனவரி மாதத்தில், மலப்புரம் காவல் ஆணையர் அப்துல் பஷீரை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தார். அதோடு அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் அவர் மீது எல்ஓசி போடப்பட்டது. இந்நிலையில் சார்ஜாவில் இருந்து ஏர் அரேபியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் பரிசோதித்து, பயணிகளை வெளியில் அனுப்பிக் கொண்டு இருந்தனர்.

அப்போது அந்த விமானத்தில், கடந்த 11 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த அப்துல் பஷீரும், சார்ஜாவில் இருந்து சென்னை வந்தார். குடியுரிமை அதிகாரிகள் அவருடைய பாஸ்போர்ட், ஆவணங்களை கம்ப்யூட்டரில் பரிசோதித்த போது, 11 ஆண்டுகளாக கேரள மாநில போலீசால் தேடப்பட்டு வரும் தலைமறைவு குற்றவாளி என்று தெரியவந்தது. இதையடுத்து அப்துல் பஷீரை வெளியில் விடாமல் பிடித்து, ஒரு அறையில் அடைத்து வைத்தனர். அதோடு கேரள மாநிலம் மலப்புரம் காவல் ஆணையருக்கும் அவசரமாக தகவல் தெரிவித்தனர். அதன் பின்பு சென்னை விமான நிலைய போலீசில் அப்துல் பஷீரை குடியுரிமை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

மேலும் விமான நிலைய போலீசார் அவரை காவலில் வைத்துள்ளனர். இதற்கிடையே 11 ஆண்டுகள் தலைமறைவு குற்றவாளியை கைது செய்து, கேரளாவுக்கு அழைத்து செல்வதற்காக மலப்புரம் போலீசார் சென்னை விமான நிலையத்திற்கு வந்தனர். 11 ஆண்டுகள் தலைமறைவு குற்றவாளியான கேரளாவைச் சேர்ந்தவர், சென்னை விமான நிலையத்தில் பிடிபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post மோசடி வழக்குகளில் 11 ஆண்டுகளாக வெளிநாடுகளில் தலைமறைவாக இருந்தவர் கைது: சென்னை வந்தபோது சிக்கினார் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Poonamalli ,Kerala ,Sharjah ,Kerala… ,Dinakaran ,
× RELATED 1.5 கிலோ தங்கத்துடன் தப்பிய சிறுவன் கைது