×

சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் ஒப்புதல் நிறுத்தி வைப்பு: தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு


கும்மிடிப்பூண்டி: திருவள்ளூர் மாவட்டம் மணலூரில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் ஒப்புதலை நிறுத்தி வைத்து தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தாலுகாவில் உள்ள மணலூர் மற்றும் சானாபுத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க கடந்த ஆண்டு ஏப்ரல் 22ம் தேதி வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் ஒப்புதலை ரத்து செய்யக் கோரி அப்பகுதியை சேர்ந்த ஜெகன்குமார், பிரவீணா உள்ளிட்டோர் தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், தனித்தனி பகுதிகளாக பிரித்து சட்ட விரோதமாக இந்த ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாகவும், மொத்தமாக எந்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடும் நடத்தாமல் சுற்றுச்சூழல் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், அனைத்து ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு தான் சுற்றுச்சூழல் ஒப்புதல் பெறப்பட்டதாக, சிப்காட் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்ய நாராயணா, நிபுணத்துவ உறுப்பினர் சத்திய கோபால் அமர்வு, முழுமையான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு செய்யாமல் வழங்கப்பட்ட இந்த ஒப்புதலை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தெரிவித்தது. மேலும், கடந்த 2020ம் ஆண்டு இந்த திட்டத்திற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் ஒப்புதலை தீர்ப்பாயம் நிறுத்தி வைத்துள்ளதை சுட்டிக்காட்டிய தீர்ப்பாயம், மீண்டும் முழுமையான ஆய்வு நடத்த வேண்டும் என உத்தரவிட்டு, கடந்த ஆண்டு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் ஒப்புதலையும் நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.

The post சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் ஒப்புதல் நிறுத்தி வைப்பு: தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : National Green Tribunal ,SIPCOD Industrial Estate ,Gummidipoondi ,Southern Zone National Green Tribunal ,Manalur, Tiruvallur district ,Manalur ,Sanaputhur ,Tiruvallur district… ,SIPCOD ,Industrial ,Estate ,Dinakaran ,
× RELATED நெல்லை மருத்துவக் கல்லூரி...