- ஆசிய டிரையத்லான் போட்டி
- சென்னை
- அத்துலியா மிஸ்ரா
- தேசிய பாராலிம்பிக் தடகள
- ஆசிய டிரையத்லான் போட்டிகள்
- தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை
- முதல் அமைச்சர்…
சென்னை: வரும் பிப்ரவரியில் தேசிய பாரா ஒலிம்பிக் தடகளம் மற்றும் ஆசிய டிரையத்லான் போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் முயற்சிகளால் சென்னையில் தேசிய, சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் சங்கத்துடன் இணைந்து, தேசிய அளவிலான 23வது பாரா ஒலிம்பிக் தடகள போட்டி சென்னையில் நடைபெற உள்ளது.
நேரு விளையாட்டு அரங்கில் பிப்.17ம் தேதி முதல் பிப்.20ம் தேதி வரை நடைபெற உள்ள இந்தப்போட்டிகளில் சுமார் 1700 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து 157 பேர் களம் காண இருக்கின்றனர். தேசிய அளவிலான பாரா ஒலிம்பிக் போட்டி தமிழ்நாட்டில் நடைபெறுவது இதுவே முதல் முறை. இதற்காக தமிழ்நாடு ரூ. 3.5 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் வந்து செல்லவும், தங்கி விளையாடவும் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தங்கவேல் மாரியப்பன் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள், வீராங்கனைகள் இந்த போட்டியில் விளையாட உள்ளனர்.
இந்தப் போட்டி மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகள் தமது அசாதாரண திறன்களை வெளிப்படுத்த வாய்ப்பு அளிக்கும். அதே போல் சென்னையில் முதல் முறையாக பிப்.16ம் தேதி ஆசிய அளவிலான மும்முனை போட்டி எனப்படும் ஆசிய டிரையத்லான் கோப்பை போட்டி நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் இந்தியா, ஜப்பான், உஸ்பெகிஸ்தான், இந்தோனேசியா, செக் குடியரசு , அயர்லாந்து உள்பட 15 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இந்த போட்டிகளில் பங்கேற்கும் 52 பேரில் 10 பேர் ஜப்பானியர்கள். இந்தியாவில் இருந்து 8 பேருடன், மேலும் தமிழ்நாட்டை சேர்ந்த 4 பேர் சிறப்பு அனுமதி மூலம் விளையாடும் வாய்ப்பு உள்ளது.
The post சென்னையில் அடுத்த மாதம் ஆசிய டிரையத்லான் போட்டி: அதுல்ய மிஸ்ரா அறிவிப்பு appeared first on Dinakaran.