×

நடைபாதையில் கட்டப்பட்ட 105 வீடுகள் அகற்றம்: மறுகுடியமர்வு செய்ய நடவடிக்கை

தண்டையார்பேட்டை: முத்தியால்பேட்டை சென் சேவியர் தெரு, பிடாரி அம்மன் கோயில் தெரு ஆகிய பகுதிகளில் 5க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் உள்ளன. இங்குள்ள நடைபாதையை ஆக்கிரமிப்பு செய்து 50 ஆண்டு காலமாக 105 குடும்பத்தினர் வசித்து வந்தனர். இதனால், பள்ளி மாணவர்கள் சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக நடந்து செல்லும் நிலை ஏற்பட்டது. எனவே, இந்த வீடுகளை காலி செய்ய கோரி அந்த பகுதியை சேர்ந்த பொதுநல சங்கம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன்படி உயர் நீதிமன்றம் இந்த வீடுகளை காலி செய்ய உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில் நேற்று துறைமுகம் தொகுதி எம்எல்ஏவும், அறநிலையத்துறை அமைச்சருமான சேகர்பாபு, 105 குடும்பத்தினருக்கு புதிதாக கட்டப்படும் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வீடு ஒதுக்கி தற்காலிக ஆணை வழங்கினார். மேலும் அவர்கள் வெளியே குடியிருக்க ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தலா ரூ.24 ஆயிரம் வழங்கினார். இதையடுத்து அவர்கள் தங்களது வீடுகளை காலி செய்தனர். பின்னர், ஆக்கிரமிப்பு வீடுகளை மாநகராட்சி அதிகாரிகள் அப்புறப்படுத்தினர். தங்கசாலை பகுதியில் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்பில் 10 மாதம் கழித்து அவர்களுக்கு வீடு வழங்க இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் 50 ஆண்டு காலமாக ஆக்கிரமிப்பு செய்திருந்த இந்தப் பகுதி தற்போது போக்குவரத்து பாதிப்பின்றி காட்சியளிக்கிறது.

The post நடைபாதையில் கட்டப்பட்ட 105 வீடுகள் அகற்றம்: மறுகுடியமர்வு செய்ய நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Thandaiarpet ,Muthiyalpettai St. Xavier Street ,Bitari Amman Koil Street ,Dinakaran ,
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்