×

கேமராவுக்கு போஸ் கொடுக்கும் பாஜக தலைவர்கள்; கங்கையில் நீராடினால் நாட்டின் வறுமை தீருமா?: அமித் ஷாவை மறைமுகமாக சாடிய கார்கே

போபால்: மகா கும்ப மேளாவில் அமித் ஷா போன்ற பாஜக தலைவர்கள் புனித நீராடி வரும் நிலையில், கங்கையில் மூழ்கினால் நாட்டின் வறுமை தீருமா? என்று கார்கே காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார்.மத்தியப் பிரதேச மாநிலம் மோவில் காங்கிரஸ் கட்சியின் ‘ஜெய் பாபு, ஜெய் பீம், ஜெய் சம்விதான்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அளித்த பேட்டியில், ‘உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் பாஜக தலைவர்கள் புனித நீராடுகிறார்கள்;

கங்கையில் மூழ்கினால் நாட்டின் வறுமையை முடிவுக்குக் கொண்டு வரமுடியுமா? அல்லது மக்களின் பசியை தான் தீர்க்க முடியுமா? யாருடைய நம்பிக்கையையும் கேள்வி கேட்க விரும்பவில்லை. நான் கூறிய கருத்துக்கு யாராவது ஆட்சேபனை தெரிவித்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ஒன்றை கேட்க விரும்புகிறேன். ஒரு குழந்தை பசியால் இறந்தாலும், பள்ளிக்குச் செல்ல முடியாத நிலை யில் இருந்தாலும், தொழிலாளர்களுக்கு அவர்களின் நிலுவைத் தொகை கிடைக்காத போதும், பல ஆயிரம் கோடி செலவழித்து கங்கையில் மூழ்குவதால் பயன் என்ன? பாஜக தலைவர்கள் போட்டி போட்டுக் கொண்டு கேமராவுக்கு நன்றாக போஸ் கொடுக்கும் வகையில் கங்கையில் மூழ்கி வருகின்றனர்.

இதுபோன்ற நபர்களால் நாட்டுக்கு ஒரு நன்மையும் செய்ய முடியாது. எங்களது நம்பிக்கை கடவுள் மீது உள்ளது. மக்கள் ஒவ்வொரு நாளும் வீட்டில் பூஜை செய்கிறார்கள். அனைத்து பெண்களும் தங்களது வீட்டில் பூஜை’ செய்த பிறகு தங்களது வீடுகளை விட்டு வெளியேறி அவர்களின் பணிகளை செய்கிறார்கள். அதில் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் மதத்தின் பெயரால் ஏழைகள் சுரண்டப்படுவதில் தான் எங்களுக்கு பிரச்னை உள்ளது’ என்றார். மத்திய பிரதேச நிகழ்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் கலந்து கொண்டார். முன்னதாக பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று புனித நீராடிய நிலையில், தற்போது கார்கே பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

காங்கிரஸ் தலைவரின் கருத்துக்கு பாஜக தரப்பில் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறுகையில், ‘காங்கிரசின் வெறுப்பானது கோடிக்கணக்கான இந்துக்களின் நம்பிக்கை மீதுள்ளது. மகாகும்பமேளா பல ஆண்டுகளாக நடைபெறுகிறது. நம்பிக்கையின் அடையாளமாக இருந்து வருகிறது. இந்த நம்பிக்கையை ஒட்டுமொத்த உலகமும் மதிக்கும் நிலையில், நாட்டின் மிகப்பெரிய எதிர்க்கட்சியான காங்கிரஸ், மகாகும்பமேளா நம்பிக்கையை கேலி செய்கிறது என்பதை வேதனையுடன் கூறுகிறேன்’ என்று கூறினார்.

The post கேமராவுக்கு போஸ் கொடுக்கும் பாஜக தலைவர்கள்; கங்கையில் நீராடினால் நாட்டின் வறுமை தீருமா?: அமித் ஷாவை மறைமுகமாக சாடிய கார்கே appeared first on Dinakaran.

Tags : BJP ,Ganges ,Karke ,Amit Shah ,Bhopal ,Maha Kumba Mela ,Garke ,Madhya Pradesh State Movil Congress Party ,
× RELATED ரீல்ஸ் மோகத்தால் வந்த வினை கங்கை...