திருச்சி: ஸ்ரீரங்கத்தில் இன்று காலை ஓட ஓட விரட்டி ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். 6 பேர் கும்பல் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் மேலூர் ரோடு லட்சுமி நகரை சேர்ந்தவர் அன்பு (எ) அன்பரசன்(32). இவருக்கு மனைவி மற்றும் 2 வயதில் பெண் குழந்தை உள்ளனர். சரித்திர பதிவேடு குற்றவாளியான அன்பு மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. திருச்சியை சேர்ந்த பிரபல தொழிலதிபரான ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட ரவுடி திலீப்பின் கூட்டாளியாவார். இன்று காலை 8.30 மணிக்கு வழக்கம்போல் லட்சுமி நகரில் உள்ள ஜிம்முக்கு சென்றார். பின்னர் வீட்டுக்கு பைக்கில் திரும்பினார்.
ஸ்ரீரங்கம் தெப்பக்குள தெரு சுற்றுலா வாகன பார்க்கிங் பகுதியில் வந்தபோது 2 பைக்குகளில் வந்த 6 பேர் பயங்கர ஆயுதங்களுடன் அன்பை வழிமறித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்து பைக்கை அங்கேயே நிறுத்தி விட்டு அன்பு தலைதெறிக்க ஓடினார். ஆனால் விடாமல் அவரை துரத்தி சென்று பார்க்கிங் பகுதியில் சுற்றி வளைத்து சரமாரியாக அரிவாளால் 6 பேரும் வெட்டினர். இதில் தலை, கழுத்து, கைகளில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் அன்பு கீழே சரிந்தார். இதையடுத்து 6 பேரும் அங்கிருந்து பைக்கில் தப்பி சென்றனர்.
இதையடுத்து உயிருக்கு போராடி கொண்டிருந்த அன்புவை பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து அன்பு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிந்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டனர். மேலும் அன்பு எதற்காக கொலை செய்யப்பட்டார், கொலை செய்தது யார் என்று விசாரித்து வருகின்றனர்.
இந்த தகவல் அறிந்ததும் அன்புவின் உறவினர்கள் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் திரண்டனர். பின்னர் அன்புவை கொலை செய்த குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி அரசு மருத்துவமனை முன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன் அப்பகுதியில் சேவல் சண்டை தொடர்பாக அன்பு தரப்பினருக்கும், மற்றொரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. இந்த முன்விரோதத்தால் கொலை நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
The post ஸ்ரீரங்கத்தில் பயங்கரம்; ஓட ஓட விரட்டி ரவுடி வெட்டிக்கொலை; 6 பேர் கும்பல் வெறிச்செயல் appeared first on Dinakaran.
