×

பேராசிரியர் பற்றாக்குறைக்கு காரணமே ஆளுநர்தான்: அமைச்சர் கோவி.செழியன் குற்றச்சாட்டு!

சென்னை: சென்னை பிராட்வே சாலையில் உள்ள பாரதி மகளிர் கல்லூரியில் சென்னைப் பெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பாக புதிதாக உட்புற கலையரங்கம் கட்டுவதற்கான கள ஆய்வினை அமைச்சர்கள் கோ.வி.செழியன், சேகர்பாபு உள்ளிட்டோர் மேற்கொண்டனர். இந்த கள ஆய்வின் போது பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள், கல்லூரி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கோ.வி.செழியன் பேசியதாவது, “சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பாக தரமணி அண்ணா பல்கலைகழகம் மற்றும் பாரதி மகளிர் கல்லூரிகளில் ஆய்வு மேற்கொண்டோம். இரு கல்லூரிகளிலும் பணிகளும் விரைவில் தொடங்கப்படும். கூடுதலாக பாரதி மகளிர் கல்லூரியில் 430 மீட்டர் தூரம் உள்ள சுற்று சுவர் கட்டிடத்தை ரூ.2 கோடி செலவில் சரி செய்யப்படும்.

உயர்கல்வித்துறை குறித்து ஆளுநர் குற்றச்சாட்டு என்பது, மாற்றாந்தாய் மனப்போக்கோடு ஒரு மாநில அரசில் என்னென்ன பணிகள் நடக்கிறது என்பதை வளர்ச்சிக்கான தரவுகளை பார்த்து படித்து புரிந்து ஆளுநர் அறிக்கை வெளியிட்டிருந்தால், நாங்களும் வரவேற்று இருப்போம். உயர்கல்வியில் 2030-ம் ஆண்டு 50 சதவீதத்தை எட்டுவோம் என தரவுகள் சொல்கிறது.

உயர்கல்வியில் ஆளுநர் சொல்வது போல் எங்கே பின் தங்கி உள்ளோம்? பிஎச்.டி ஆய்வு மாணவர்கள் தமிழ்நாட்டில்தான் முதலிடம், பேராசிரியர்கள் பற்றாக்குறையை பொறுத்த வரை கல்லூரி கல்வி இயக்கத்தின் சார்பில் கௌரவ பேராசிரியர்கள் நியமித்து, ஆங்காங்கே அந்த பணிகளை நடத்திக் கொண்டிருக்கிறோம்.

வேந்தர் என்கின்ற முறையில் ஆளுநராக பல்கலைக்கழகத்தில் ஆர்.என்.ரவி செய்யக்கூடிய இடர்பாடுகளால்தான் ஒரு சில இடங்களில் பேராசிரியர் பற்றாக்குறை ஏற்படுகிறது. இந்த இடர்பாடுகளை களைவதற்காகாகவே சட்ட போராட்டங்களை மேற்கொண்டு வருகிறோம். ஆளுநர் ஏற்படுத்தும் தடைகளை உடைத்து உயர்கல்வி துறையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னேற்ற பாதையில் எடுத்து செல்வார்.

ஆளுநர் தலையிடுவதில் மட்டும் தலையிட வேண்டும் மற்ற விஷயங்களில் தலையிடக்கூடாது என சொல்லுவதற்கு தான் நாங்கள் சட்ட போராட்டத்தை நடத்தி வருகிறோம். போதை பொருளை இரும்பு கரம் கொண்டு அடக்கி வருகிறோம். கடந்த ஆட்சி காலங்களில், ஆட்சியாளர்கள் தவறு செய்தவர்களை ஊக்குவித்தார்கள்.

போதைப்பொருள் ஒழிப்பில் தமிழ்நாடு முதலிடம் வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கும் சிண்டிகேட் ஆட்சி மன்ற குழு உறுப்பினர்களால் நிர்வாகிக்கப்படுகிற சட்ட விதிமுறைகள் வெவ்வேறானவை, ஒரு பல்கலைக்கழகத்தின் விதிமுறை மற்ற பல்கலைக்கழகத்திற்கு பொருந்தாது என்ற கட்டமைப்பு உள்ளது.

இந்த நிலையில் பெரும்பான்மை மிகுந்த ஆட்சி மன்ற குழு உறுப்பினர்களை ஆளுநர் தன்வசப்படுத்தி மிரட்டி மேலும் மேலும் உங்களை நல்ல நிலைமைக்கு கொண்டு செல்கிறோம் என ஒருதலை பட்சமான முறையில் நடந்து கொள்கிற காரணத்தினால் சில இடர்பாடுகள் மற்றும் தடைகள் வருகிறது. உயர்கல்வி துறையில் கவர்னர் தடைகள் உடைக்கப்பட்டு முன்னேற்ற பாதையில் முதலமைச்சர் எடுத்து செல்வார்.

ஒரு நிறுவனத்தில் பல்வேறு துறையின் கீழ் நிதி இருந்தால் அது தேவைக்கு ஏற்ப பேராசிரியர்கள், பல்கலைக்கழக கட்டடங்கள் தேவைகளுக்கு ஏற்ப பரிவர்த்தனை செய்யப்பட்டு, மீண்டும் பரிவர்த்தனை சரி செய்யப்பட்டும். அதற்காக பற்றாக்குறை இல்லை என்ற நிலைக்கு பதில் வராது. அது மாணவர்களின் சேர்க்கை, ஆசிரியர்களின் செலவினம் உள்ளிட்டவற்றையும், எந்த கட்டணத்தையும் உயர்ந்தாமல் உயர்கல்வியை எடுத்துச் செல்ல வேண்டும் என்ற மனநிலையில் உள்ளோம்.

உயர்கல்வித்துறையில் உள்ள குறைகளை போக்குவதும், பற்றாக்குறைய நீக்குவதும், பல்கலைக்கழக செயல் பாட்டையும், கல்வித்துறையையும் முதலமைச்சர் உயர்த்துவார். தமிழ் வாழ்க என்று சொன்னால் அதற்கு மாறுபட்ட பொருளை எடுப்பதை என்ன என்று சொல்வது எனவும் செம்மொழி என்ற சொல்லை பயன்படுத்தாத ஆளுநர் தமிழ் பண்பாடு, கலாச்சாரத்தை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். மாற்றான் தாய் மனப்பான்மையோடு இருக்கக்கூடிய உள்நோக்கம் தான் ஆளுநர் இவ்வாறு செயல்படுகிறார்.” என்றார்.

 

 

 

 

 

 

The post பேராசிரியர் பற்றாக்குறைக்கு காரணமே ஆளுநர்தான்: அமைச்சர் கோவி.செழியன் குற்றச்சாட்டு! appeared first on Dinakaran.

Tags : Minister ,Kovi ,Chennai ,Chennai Metropolitan Development Group ,Bharati Women's College ,Chennai Broadway Road ,V. Sezhiyan ,Sekarpapu ,METROPOLITAN ,Dinakaran ,
× RELATED ‘ரயில் ஒன்’ செயலி மூலம்...