ஊட்டி : ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா குளங்களில் தூர் வாரும் பணிகள் துவங்கப்பட்டுள்ளது.ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிற்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக கோடைக்காலங்களில் அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் வகையில் ஆண்டுதோறும் கோடை சீசனுக்காக பூங்காவை தயார் செய்வது வழக்கம்.
இந்நிலையில் வரும் கோடை சீசனுக்கு பூங்காவை தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தற்போது பூங்காவில் உள்ள அனைத்து பார்ட்டிகளும் தயார் செய்யப்பட்டு மாற்று நடவு பணிகள் துவக்கப்பட உள்ளது. இதற்காக விதைப்பு பணிகளும் துவக்கப்பட்டு நாற்று உற்பத்தி தீவிரமாக நடந்து வருகிறது.மேலும் பல ஆயிரம் தொட்டியில் நடவு செய்யப்பட்டுள்ள மலர் செடிகள் பனியில் பாதிக்காமல் இருக்க பாதுகாக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதுதவிர பூங்காவில் பல்வேறு மேம்பாட்டு பணிகளும் நடந்து வருகின்றன.
மேல் பூங்காவில் உள்ள கள்ளி செடிகள் வைக்கும் கண்ணாடி மாளிகை சீரமைக்கப்பட்டு ஒரு சில நாட்கள் திறக்கப்பட உள்ளது. அதேபோல், பூங்கா குளங்களில் தற்போது தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஜப்பான் பூங்காவை சுற்றியுள்ள குளம் முழுவதும் தூர்வாரும் பணிகள் முடிந்த நிலையில் தற்போது அதன் அருகில் உள்ள இரு குளங்களையும் தூர்வாரும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இரு ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு இந்த தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோடை சீசனுக்குள் இந்த தூர்வாரும் பணிகள் முடிக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் வரும்போது குளம் முழுக்க நீர் நிரம்பி அழகாக காட்சியளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா குளங்களில் தூர்வாரும் பணி appeared first on Dinakaran.