×

நாளை அலங்காநல்லூரில் உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு: காளைகள், காளையர்கள் ரெடி

அலங்காநல்லூர்: பொங்கல் திருநாளன்று மதுரை மாவட்டம் அவனியாபுரத்திலும், நேற்று பாலமேட்டிலும் உற்சாகமாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து முடிந்த நிலையில், உலகப்பிரசித்தி பெற்ற அலங்காநல்லூரில் நாளை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. மதுரை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு முக்கிய இடம் உண்டு. மதுரை அவனியாபுரத்தில் பொங்கல் திருநாளன்றும், பாலமேட்டில் மாட்டுப் பொங்கல் அன்றும், அடுத்த நாளில் அலங்காநல்லூரிலும் நடத்தப்படும் ஜல்லிக்கட்டுகள், 400 ஆண்டு பழமை வாய்ந்தவை. அதிலும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, உலகப்பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டு பொங்கல் திருநாளன்று அவனியாபுரத்திலும், மாட்டுப்பொங்கல் தினத்தன்று பாலமேட்டிலும் வழக்கம்போல் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. 16ம் தேதி வழக்கமாக அலங்காநல்லூரில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு, அன்று முழு ஊரடங்கு காரணமாக இந்த ஆண்டு 17ம் தேதி (நாளை) நடைபெறவுள்ளது. ஜல்லிக்கட்டில் பங்கேற்க உள்ள காளைகளுக்கு தகுதி சான்று வழங்கும் பணி, காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு என அனைத்து பணிகளும் 100 சதவீதம் முடிவடைந்துள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த முரட்டுக் காளைகள், அலங்காநல்லூருக்கு வந்து சேர்ந்து விட்டன. கொரோனா பரவல் அச்சம் காரணமாக ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஜல்லிக்கட்டு போட்டியை காண பார்வையாளர்கள் 150 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பார்வையாளர்கள், மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளை அழைத்து வரும் உரிமையாளர்கள் என அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகளுடன், வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. வழக்கமாக ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு வரும் ஒரு காளையுடன் 5 முதல் 6 நபர்கள் வருவார்கள். ஆனால் இந்த ஆண்டு காளையுடன் உரிமையாளர் ஒருவர் மற்றும் உதவியாளர் ஒருவர் என 2 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருவருமே 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்று வைத்திருக்க வேண்டும் மற்றும் 2 நாட்களுக்கு உள்ளான தேதியில் கோவிட் தொற்று இல்லை என்பதற்கான (ஆர்டிபிசிஆர்) சான்று ஆகியவற்றை வைத்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு வரும் அலுவலர்கள், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கும் இந்த கட்டுப்பாடு பொருந்தும் என அரசு அறிவித்துள்ளது. காளைகளின் உரிமையாளர் மற்றும் அவரது உதவியாளருக்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அடையாள அட்டை இல்லாதவர்கள் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெறும் வளாகத்திற்குள் நுழைய முடியாது. காளைகளை பதிவு செய்யும் போதே உரிமையாளர் மற்றும் உடன் வரும் உதவியாளர் குறித்த விபரங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. மாடுபிடி வீரர்கள் 300 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்ற விதிமுறைகளின்படி அவனியாபுரம் மற்றும் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன. அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு திடலை சீரமைக்கும் பணி, கடந்த வாரம் முடிந்தது. வாடிவாசல் மற்றும் விஐபிக்களுக்கான பார்வையாளர் கேலரிகள் வர்ணம் பூசப்பட்டு, தயார் நிலையில் உள்ளன. கடந்த ஆண்டு 714 காளைகள் கடந்த ஆண்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 769 காளைகள் பதிவு செய்யப்பட்டன. இதில் பல்வேறு காரணங்களுக்காக 16 காளைகள் தகுதி நீக்கம் செய்யப்பட்டன. காளைகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால்  769 காளைகளில் 714 காளைகள் மட்டுமே களமிறங்கின. மற்ற காளைகள் திருப்பி அனுப்பப்பட்டன. கடந்த ஆண்டு முதல் பரிசை தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்த சந்தோஷ், தட்டிச் சென்றார். இருப்பினும் கடந்த ஆண்டு முதல் பரிசு வழங்கப்பட்டதில் சர்ச்சை எழுந்தது. அது இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளது….

The post நாளை அலங்காநல்லூரில் உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு: காளைகள், காளையர்கள் ரெடி appeared first on Dinakaran.

Tags : Jallikattu ,Alankanallur ,Avaniyapuram ,Madurai district ,Pongal ,Palamet ,
× RELATED கொத்தனார் தூக்கிட்டு தற்கொலை