கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி தேர்வழியில் தொடர்ந்து இரண்டரை மணி நேரம் மாணவர்கள் சிலம்பம் சுற்றிய நிகழ்வு உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது. கும்மிடிப்பூண்டி தேர்வழியில் ஜே.ஜே.ஜே அக்னி சிறார்கள் சிலம்பாட்ட குழுவை ஜானகி ஜோதி லிங்கம் என்பவர் நடத்தி வருகிறார். இதற்கு முன் உலக சாதனையாக 2 மணிநேரம் இடைவிடாமல் நட்சத்திர பூ பந்து என்ற சிலம்ப பிரிவில் 25 பேர் கொண்ட குழு சிலம்பம் சுற்றியது உலக சாதனையாக இருந்தது. இந்தநிலையில் இந்த சாதனையை முறியடிக்கும் வகையில் ஜே.ஜே.ஜே அக்னி சிறார் சிலம்பாட்ட குழுவைச் சேர்ந்த 90 சிலம்பாட்ட மாணவர்கள் கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வழி தடகள விளையாட்டு மைதானத்தில் இடைவிடாமல் முற்பகல் 11.45 மணி முதல் மதியம் 02.15 மணி வரை தொடர்ந்து இரண்டரை மணி நேரம் நட்சத்திர பூ பந்து சுழற்றும் உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனர்.
அதன்படி சிலம்ப மாணவர்கள் 90 பேர் இரண்டரை மணி நேரம் நட்சத்திர பூப்பந்து சிலம்பம் சுழற்றி சாதனை படைத்தனர். இந்த மாபெரும் சாதனை யுனிகோ வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் சாதனை புத்தகத்தின் நடுவர்கள் முன்னிலையில் நேரிடையாக கலந்தாய்வு செய்யப்பட்டு, பின்னர் யுனிகோ வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இந்த சாதனை இடம் பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியை தேர்வழி முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் கிரிஜாகுமார் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினர்களாக அம்பத்தூர் வட்டாட்சியர் நித்தியானந்தம், வழக்கறிஞர் வேலு, சிலம்ப ஆசான்கள் ஏழுமலை, பாக்ஸர் கஜேந்திரன், சூரிய பிரகாஷ், கோபாலகிருஷ்ணன், ராஜாமனி, நிதி, கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்து மாணவர்களுக்கு உலக சாதனை பதக்கம், சான்றிதழை வழங்கினர்.
இந்த உலக சாதனை நிகழ்வை கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்டு களித்து மாணவர்களை உற்சாகப்படுத்தினர்.
The post கும்மிடிப்பூண்டி தேர்வழியில் தொடர்ந்து இரண்டரை மணி நேரம் சிலம்பம் சுற்றி அசத்திய மாணவர்கள்: உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது appeared first on Dinakaran.