×

நாட்டிலேயே முதல் மாநிலமாக உத்தரகாண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் அமலுக்கு வந்தது

உத்தரகாண்ட்: நாட்டிலேயே முதல் மாநிலமாக உத்தரகாண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் அமலுக்கு வந்தது. பொது சிவில் சட்டத்திற்கான விதிகள் மற்றும் பிரத்யேக இணையதளத்தை அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி தொடங்கி வைத்தார். உத்தரகாண்டில் பழங்குடியினர் தவிர்த்து மற்ற அனைவருக்கும் பொது சிவில் சட்டம் பொருந்தும். திருமணம், விவாகரத்து, தத்தெடுத்தல், வாரிசு உரிமை ஆகியவற்றில் அனைத்து மதத்தினரும் ஒரே சட்டத்தை பின்பற்றும் வகையில் பொது சிவில் சட்டம் அமைந்துள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் புஷ்கர் சிங் தாமி தலைமையில் பாஜ ஆட்சி செய்து வருகிறது. கடந்தாண்டு பிப்ரவரி 7ம் தேதி உத்தரகாண்ட் சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா நாட்டிலேயே முதல் மாநிலமாக நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு மாநில ஆளுநரும், குடியரசு தலைவரும் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து அது சட்டமாக மாறியது. தற்போது அதற்கான பணிகள் அனைத்தும் முடிவுற்ற நிலையில் நாட்டிலேயே முதல்முறையாக உத்தரகாண்டில் இன்று முதல் பொது சிவில் சட்டம் நடைமுறைக்கு வந்தது.

இதுகுறித்து உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தன் எக்ஸ் பதிவில், “பொது சிவில் சட்டத்துக்கான விதிமுறைகள், அதை அமல்படுத்த அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பது உள்ளிட்ட பணிகள் உள்பட சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முடிவடைந்து விட்டன. பொது சிவில் சட்டம் சமூகத்தில் சீரான தன்மையை கொண்டு வரும்.

அனைத்து குடிமக்களுக்கும் சம உரிமைகள், பொறுப்புகளை உறுதி செய்யும். நாட்டை வளர்ச்சியடைந்த, ஒழுங்கமைக்கப்பட்ட, இணக்கமான, தன்னம்பிக்கை கொண்ட நாடாக மாற்ற பிரதமர் மோடி நடத்தும் யாகத்தில் மாநிலத்தில் இந்த சட்டம் அமல்படுத்தப்படுவது ஒரு பிரசாதம் மட்டுமே” என குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் உத்தரகாண்ட் தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொது சிவில் சட்டத்துக்கான இணையதளம் ஒன்றை முதல்வர் தாமி தொடங்கி வைத்தார்.

The post நாட்டிலேயே முதல் மாநிலமாக உத்தரகாண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் அமலுக்கு வந்தது appeared first on Dinakaran.

Tags : Uttarakhand ,Chief Minister of State ,Pushkar Singh Dami ,Dinakaran ,
× RELATED குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய...