வயநாடு :வயநாடு அருகே பெண்ணை அடித்துக்கொன்ற ஆட்கொல்லிபுலி, இன்று அதிகாலை சடலமாக கண்டெடுக்கப்பட்டது. உயிரிழப்பின் காரணம் உடற்கூராய்வுக்குப் பிறகு தெரியவரும் என கேரள வனத்துறை தகவல் அளித்துள்ளது. கேரளா, மானந்தவாடி அருகே மீன் முட்டி கிராமத்தில் விவசாய நிலத்தில் காபி கொட்டையை அறுவடை செய்தபோது புலி தாக்கியதில் 48 வயது பெண் உயிரிழந்தார். வனத்துறை அதிகாரிகள் விசாரணையில் ராதா புலி தாக்கி உயிரிழந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது உடல் பிரேத பரிசோதனை செய்ய மானந்தவாடியில் உள்ள வயநாடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, புலியை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க, வனத்துறை அமைச்சர் ஏ.கே.சசீந்திரன் உத்தரவிட்டார். இதனிடையே, புலியை உயிருடன் பிடிக்கும் முயற்சி தோல்வி அடையும் பட்சத்தில் புலியை சுட்டுப்பிடிக்க வனத்துறை முடிவு செய்தது. மனிதர்களின் உயர்தான் முக்கியம் எனக்கூறியுள்ள வனத்துறை, புலியை பிடிக்க தேவையான முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். அது தோல்வி அடையும் பட்சத்தில் சுட்டுப்பிடிக்கவும் உத்தரவிட்டது.
இந்த நிலையில், கால்நடை டாக்டர் அருண் சக்கரியா தலைமையிலான 30 பேர் கொண்ட சிறப்புக் குழுவினர் இன்று காலை புலியை சுடுவதற்காக துப்பாக்கி உடன் காட்டிற்குள் நுழைந்தனர்.அப்போது வனத்துறை அதிகாரிகள் சற்றும் எதிர்பார்க்காத வகையில், ஆட்கொல்லி புலி மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளது. பின்னர் புலியின் சடலத்தை மீட்ட வனத்துறையினர் உயிரிழப்புக்கான காரணத்தை தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.ஆட்கொல்லி புலியை சுட்டுக் கொல்வதற்கு மாநில அரசு முதல்முறையாக உத்தரவிட்டிருந்த நிலையில், புலியின் மர்ம மரணம் வனத்துறையினரை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
The post வயநாடு அருகே பெண்ணை அடித்துக்கொன்ற ஆட்கொல்லி புலி, இன்று அதிகாலை சடலமாக கண்டெடுப்பு!! appeared first on Dinakaran.