×

தஞ்சை தமிழ்ப்பல்கலை.யில் திருக்குறள் உலக சாதனை மாநாடு

தஞ்சாவூர், ஜன.26: தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகமும், சென்னை உலகத் திருக்குறள் மையமும், கத்தார் திருக்குறள் மையமும் இணைந்து நடத்திய திருக்குறள் உலகச் சாதனை மாநாடு 2025, கடந்த 25ஆம் தேதி தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடந்தது. உலகச் சாதனை முயற்சியாக இம்மாநாடு நூறு இடங்களில் உலகெங்கும் நடந்தன. அதில், ஒரு பகுதியாகத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் “திருக்குறள் காட்டும் உயிரினங்களும் அவற்றின் வழிப் பெறப்படும் பாடங்களும்” என்ற பொருண்மையில் நடந்தது. ஆய்வரங்கில், தமிழ்ப்பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 21 ஆய்வாளர்கள் ஆய்வுக்கட்டுரைகளை வாசித்தனர்.

இந்நிகழ்விற்குத் தலைமையுரை ஆற்றிய துணைவேந்தர் (பொ) க.சங்கர், தன் உரையில் “திருக்குறள் இன்று உலக நூலாகத் திகழ்கிறது. அதன் கருத்துகள் அனைத்துவகையான இடம், காலம், மதம், இனம் அனைத்திற்கும் ஏற்றதாக உள்ளன. இன்று உலகம் முழுவதும் பல இடங்களில் இச்சாதனை மாநாடு நிகழ்ந்துவருகிறது. உலகத்தமிழர்கள் ஒருமித்த குரலில் திருக்குறளைப் பொதுநூலாக ஒலிக்கின்றனர்” என்று கூறினார். முன்னதாக, அயல்நாட்டுத் தமிழ்க்கல்வித்துறையின் இணைப்பேராசிரியர் ஞா.பழனிவேலு வரவேற்றுப் பேசினார். கத்தார் திருக்குறள் மையத்தைச் சேர்ந்த சோ.கிருஷ்ணமூர்த்தி நன்றியுரை வழங்கினார். பல்துறை ஆய்வு மாணவர்கள் பலரும் இந்நிகழ்வில் பங்கெடுத்தனர்.

The post தஞ்சை தமிழ்ப்பல்கலை.யில் திருக்குறள் உலக சாதனை மாநாடு appeared first on Dinakaran.

Tags : Thirukkural World Record Conference ,Thanjavur Tamil University ,Thanjavur ,Thirukkural World Record Conference 2025 ,Chennai World Thirukkural Center ,Qatar Thirukkural Center ,Tamil ,University ,Dinakaran ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி