×

பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோயிலில் பூசாரிகள் மட்டுமே குண்டம் இறங்கினர்: தடையை மீறிய இந்து முன்னணியினர் 30 பேர் கைது

கோபி:  கோபி அருகே உள்ள பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோயிலில் நேற்று நடைபெற்ற குண்டம் திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் பூசாரிகள் மட்டுமே குண்டம் இறங்கினர். தடையை மீறி குண்டம் இறங்க முயன்ற இந்து முன்னணியினர் 30 பேரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள பாரியூரில் புகழ்பெற்ற கொண்டத்து காளியம்மன் கோயில் குண்டம் திருவிழா கடந்த 28ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து, சந்தன காப்பு அலங்காரம் உள்ளிட்ட பல்வேறு அலங்காரங்களுடன் கடந்த 2 வாரங்களாக சிறப்பு பூஜைகள், அபிஷேகம் நடைபெற்று வந்தன. இந்தாண்டும் குண்டம் திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தேரோட்டம் மற்றும் மலர் பல்லக்கு நிகழ்ச்சிகளை மாவட்ட நிர்வாகம் கொரோனா பரவல் காரணமாக ரத்து செய்தது. இந்நிலையில், உரிய வழிகாட்டு நெறிமுறைகளுடன் பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்த அனுமதி அளிக்க வேண்டும் எனவும், இல்லையெனில் தடையை மீறி குண்டம் இறங்குவோம் எனவும் இந்து முன்னனி அமைப்பினர் அறிவித்து, கோயில் பூச்சாட்டுதலின்போது காப்பு கட்டி விரதம் இருக்க தொடங்கினர். தடையை மீறி குண்டம் இறங்க வந்த இந்து முன்னனி அமைப்பினரை கலைந்து செல்ல காவல்துறையினர் கூறினர். ஆனால், கலைந்து செல்ல மறுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினருக்கும், இந்து முன்னணி அமைப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பாரியூர் கோயில் முன்பு உள்ள கோபி அந்தியூர் பிரதான சாலையில் போலீசார் பேரிகார்டுகளை வைத்தும், கயிறு கட்டியும் தடுப்பு ஏற்படுத்தினர். தடையை மீறி குண்டம் இறங்க முயன்ற இந்து முன்னனி அமைப்பினர் 30 பேர் கைது செய்யப்பட்டனர். நேற்று இரவு குண்டத்திற்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு 12 டன் (எரிகரும்பு) விறகுகளை கொண்டு குண்டம் தயார் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, அம்மன் அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. கோயிலில் ஓதுவார்கள் திருமுறை ஓதினர். அதன்பின், நந்தா தீபம் ஏற்றப்பட்டு, கோயில் தலைமை பூசாரி ராமானுஜம் 60 அடி நீளமுள்ள குண்டத்திற்கு சிறப்பு பூஜை செய்து முதலில் குண்டம் இறங்கினார்.தொடர்ந்து கோயில் பூசாரிகள் 15 பேரும், வீரமக்கள் எனப்படும் குண்டம் தயார் செய்பவர்கள் 50 பேர் மட்டுமே குண்டம் இறங்கினர். பூசாரிகள் மற்றும் வீரமக்கள் குண்டம் இறங்கிய பின்பே பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். பூசாரிகள் மற்றும் வீரமக்கள் குண்டம் இறங்கியதை தொடர்ந்து உடனடியாக குண்டத்தில் யாரும் இறங்காத வகையில் சுற்றிலும் தடுப்பு ஏற்படுத்தப்பட்டது. தடையை மீறி பக்தர்கள் குண்டம் இறங்குவதை தடுக்க கோபி டிஎஸ்பி ஆறுமுகம் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டு இருந்தனர். ஆண்டுதோறும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சுமார் 5 கிமீ தூரத்திற்கு நீண்ட வரிசையில் காத்திருந்து குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்துவதும், கோயிலில் சாமி தரிசனத்திற்காக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கோயிலில் காத்திருப்பதும் வழக்கம். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் குண்டம் இறங்க தடை விதிக்கப்பட்டுள்ளதாலும், திருவிழா கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாலும் கோயில் வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது….

The post பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோயிலில் பூசாரிகள் மட்டுமே குண்டம் இறங்கினர்: தடையை மீறிய இந்து முன்னணியினர் 30 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Pariyur Kondatu Kaliyamman temple ,Gobi ,Gundam festival ,Pariyur Kondatthu Kaliamman ,Gundam ,Pariyur Kondatthu Kaliamman temple ,
× RELATED பேருந்து நிலையத்தில் கோபி நகர திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு