×

தாளமுத்து மற்றும் நடராசன் ஆகியோரின் நினைவிடம் புதுப்பிக்கப்பட்டு நாளை திறந்து வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: திருவாளர்கள் தாளமுத்து மற்றும் நடராசன் ஆகியோரின் நினைவிடம் புதுப்பிக்கப்பட்டு தமிழ்மொழித் தியாகிகள் நினைவு நாளான 25.1.2025 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களால் திறந்து வைக்கப்படவுள்ளது.

நாடு விடுதலை பெறுவதற்கு முன்பு, 1938-ஆம் ஆண்டிலேயே தமிழ்நாட்டில் அனைவரும் இந்தியைக் கட்டாயமாகக் கற்றுத்தான் ஆகவேண்டும் என்ற அடிப்படையில் முதற்கட்டமாக, பள்ளிகளில் 6, 7 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு 21.04.1938-ஆம் நாள் இந்தி கட்டாயப் பாடமாகக் கொண்டுவரப்பட்டது. இந்தியில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும், இல்லையேல் அவர்கள் தேர்வில் தோல்வியுற்றவராகவே அறிவிக்கப்படுவர் என்ற அறிவிப்பும் வெளியானது.

இதன் பிறகுதான் இந்தி எதிர்ப்புப் போராட்டம் வலுப்பெறத் தொடங்கியது. இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பல தலைவர்கள் பங்குபெற்றனர். பல கட்சிகளும் இதனை எதிர்த்து போராடின. நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், தனித்தமிழ் இயக்கம் உள்ளிட்ட மக்கள் இயக்கங்கள் குறிப்பாக சர். ஏ.டி. பன்னீர் செல்வம், தந்தை பெரியார், மறைமலை அடிகளார், நாவலர் சோமசுந்தர பாரதியார், கா.சு. பிள்ளை,
மு.சு. பூரணலிங்கனார், அன்னை மீனாம்பாள் சிவராஜ், ஈழத்தடிகள், பட்டுக்கோட்டை அழகிரி, மு. தருமாம்பாள், காஞ்சிமணிமொழியார், புலவர் அருணகிரிநாதர், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் அறிஞர்களும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

3.6.1938-இல் தொடங்கிய மொழிப்போர் ஒன்றரை ஆண்டுக்காலம் தொடர்ந்து நடந்தது. இதில் மாணவர்கள் பலரும் பங்கு கொண்டனர். பல்லாயிரம் பேர் சிறை சென்றனர். சென்னை அடையார், தியாசபிகல் பள்ளி முன்பு நடைபெற்ற போராட்டத்தில். சென்னை, பெரம்பூர் பண்ணைக்கார ஆண்டியப்பன் தெருவில் வசித்துவந்த இலட்சுமணன்-அம்மாக்கண்ணு இணையருக்கு 1919-இல் பிறந்த திரு. நடராசன் என்பவர் கலந்து கொண்டதால் கைது செய்யப்பட்டார்.

அவருக்கு ஆறு மாத கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் நோயால் பல நாட்கள் அவதிப்பட்ட அவரை 30 டிசம்பர் அன்று அரசு மருத்துவமனையில் சேர்த்தது காவல் துறை. பத்து நாட்களுக்கு மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடராசன் 1939-ஆம் ஆண்டு ஜனவரி மாதம், 15-ம் தேதி தமிழுக்காகத் தன்னை முதற்பலியாக்கிக் கொண்டார்.

குமாரராஜா முத்தையா செட்டியார் விருப்பப்படி மருத்துவமனையிலிருந்து தன்னுடைய சீருந்திலேயே கறுப்புக் கொடி போர்த்தி. பெரும் ஊர்வலமாக நடராசனின் பூதவுடல் எடுத்துச் செல்லப்பட்டது. மறுநாள் ஜனவரி 16-ல் பல்லாயிரம் பேர் கலந்துகொண்ட இறுதி ஊர்வலத்தில் பேரறிஞர் அண்ணா, டாக்டர் தர்மாம்பாள், அ. பொன்னம்பலம், கு.மு.அண்ணல் தங்கோ. ஆல்பர்ட் ஜேசுதாசன், நாராயணி அம்மையார் முதலானோர் புகழுரையாற்றினர். நடராசனின் இழப்பு, மேலும் பலரையும் போராட்டக் களத்திற்கு அழைத்து வந்தது.

பள்ளிகளில் கட்டாய இந்திக்கு எதிரான மொழிப் போராட்டத்தில் (1937-39) முதற் களப்பலியான நடராசனுக்கு அடுத்து, இரண்டு மாதங்களில் தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தைச் சேர்ந்த வேல்முருகன்-மீனாட்சி இணையருக்குப் பிறந்த திரு. தாளமுத்து என்ற இளைஞரும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முன்னின்று மறியல் செய்ததற்காக ஆறு மாதக் கடுங்காவலும் 15 ரூபாய் தண்டமும் தண்டனையாகப் பெற்றுச் சிறைப்பட்ட மூன்று வாரங்களுக்குள் 1939 மார்ச் மாதம், 11-ஆம் தேதி உயிரிழந்தார்.

மொழிப்போரின் வெற்றி வெளிச்சத்திற்கு ஒளிவிளக்குகளாய் நின்று உயிர்துறந்த திருவாளர்கள் நடராசன் – தாளமுத்து இருவரும் தமிழுணர்வு கொண்டோரின் மனத்தில் நீங்கா இடம் பெற்று இன்றும் நினைவுகூரப்படுகிறார்கள். இந்தி எதிர்ப்புப் போரில் சிறை சென்று உயிர் நீத்த தோழர்கள் நடராசன் (15-1-1939) தாளமுத்து (11-3-1939) இருவரின் தியாகத்தைப் போற்றும் வண்ணம் நினைவிடத்தை சென்னை, மூலக்கொத்தளத்தில் தந்தை பெரியார் அவர்கள் அடிகோலி திறந்துவைத்தார்.

இந்த நினைவிடத்தினைப் பொலிவேற்றம் செய்திடவும், ஜனவரித் திங்கள் 25ஆம் நாளை தமிழ்மொழித் தியாகிகள் நினைவு நாள் என்னும் பெயரில் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் எனவும் அறிவித்து ஆணையிடப்பட்டதைத் தொடர்ந்து, 2025 ஜனவரித் திங்கள் 25ஆம் நாளன்று பொலிவேற்றம் செய்யப்பட்ட நினைவிடம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் திறந்துவைக்கப்படவுள்ளது.

The post தாளமுத்து மற்றும் நடராசன் ஆகியோரின் நினைவிடம் புதுப்பிக்கப்பட்டு நாளை திறந்து வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K. Stalin ,Thalamuthu and Natarasan ,Chennai ,Thiruvalaras Thalamuthu and Natarasan ,Tamil Nadu ,Tamil Language Martyrs' Day ,Thalamuthu and ,Natarasan ,
× RELATED கேள்விகளுக்கு பதில் அளிக்க நான்...