×

புதுக்கோட்டை மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

புதுக்கோட்டை, ஜன.24: புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுவதால் விண்ணப்பிக்க மாவட்ட கலெக்டர் அருணா கேட்டுக்கொண்டுள்ளார். தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகைத் திட்டத்தின்கீழ் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்துள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு, பத்தாம் வகுப்பில் தோல்வியுற்றவருக்கு மாதம் ரூ.200ம், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300ம், 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.400ம், பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.600 வீதம் 3 ஆண்டிற்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இத்தொகை நேரடியாக மனுதாரர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்பவராக இருத்தல் வேண்டும். தொடர்ந்து பதிவினை புதுப்பித்திருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும், ஏனையோர் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000 (எழுபத்து இரண்டாயிரம்) மிகாமல் இருக்க வேண்டும். அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்குச் சென்று பயிலும் மாணவ, மாணவியருக்கு மற்றும் ஏற்கனவே உதவித்தொகை பெற்றவர்களுக்கு இத்தொகை வழங்கப்படமாட்டாது.மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு பத்தாம் வகுப்பில் தேர்ச்சி மற்றும் அதற்கும் கீழ் படித்தவர்களுக்கு மாதம் ரூ.600ம், 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.750ம், பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.1000 வீதம், 10 ஆண்டுகள் வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து ஓராண்டு நிறைவு பெற்ற மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கலாம்.

மாற்றுத்திறனாளிகள் வேறு எந்த ஒரு திட்டத்திலும் உதவித்தொகை பெறுபவராக இருக்கக் கூடாது.இந்த உதவித்தொகை பெறுவதற்கு தகுதி உள்ளவர்கள் புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அனைத்துக் கல்விச் சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் வருகைபுரிந்து இலவசமாக விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பங்கள் அனைத்து வேலை நாட்களிலும் வருடம் முழுவதும் வழங்கப்படும். மேலும் இந்த உதவித்தொகை பெறுபவர்களின் அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது எனவும், இந்த உதவித்தொகை பெறுவதால் வேலைவாய்ப்பு பரிந்துரைத்தலுக்கு எவ்வித தடையும் ஏற்படாது. மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

The post புதுக்கோட்டை மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Pudukkottai ,District Collector ,Aruna ,Pudukkottai district ,Employment and Vocational Guidance Centre ,Government of Tamil Nadu ,Dinakaran ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி