அண்ணாநகர்: சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட்டில் அதிகாலையில் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும்போது தினமும் கரன்ட் கட் ஆகிவிடுவதால் வியாபாரம் செய்ய முடியாமல் வியாபாரிகள் திணறி வருகின்றனர். இதுசம்பந்தமாக கோயம்பேடு மின்வாரிய அலுவலக அதிகாரிகளுடன் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது. இந்தநிலையில், நேற்று
அதிகாலையிலும் வியாபாரம் விறுவிறுப்பாக நடந்தபோது திடீரென கரன்ட் கட்டாகிவிட்டது. இதுசம்பந்தமாக மின்வாரிய அதிகாரிகளுடன் வியாபாரிகள் தெரிவித்தும் கண்டுகொள்ளவில்லை என்று தெரிகிறது. இதனால் கோபம் அடைந்த வியாபாரிகள், கோயம்பேடு மின்சார வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு நிலவியது.
இதுபற்றி மின்வாரிய அதிகாரிகள் கூறும்போது, ‘’கோயம்பேடு பூ மார்க்கெட் வளாகத்தில் உள்ள மின் இணைப்புகள் அனைத்தும் அங்காடி நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே, எங்களுக்கு எந்த சம்பந்தமும் கிடையாது’ என்றனர். கோயம்பேடு பூ மார்க்கெட் துணை தலைவர் முத்துராஜ் கூறுகையில், ‘’பூ மார்க்கெட்டில் 490 கடைகள் இயங்கி வருகின்றன. தினமும் அதிகாலை நேரத்தில் கரன்ட் கட் ஆகிவிடுவதால் வியாபாரம் செய்ய முடியவில்லை. இது குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் புகார்கள் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர்.
பூ மார்க்கெட்டில் கரன்ட் துண்டிக்கப்பட்டால் அங்காடி நிர்வாக அலுவலகம்தான் கவனிக்க வேண்டும் என்றும் எங்களால் ஏதும் செய்ய முடியாது என்றும் கூறுகின்றனர். எனவே, எங்கு புகார் கொடுக்க வேண்டும் என்று தெரியாமல் திணறி வருகிறோம். ஆசியாவிலேயே மிகப்பெரிய மார்க்கெட்டாக விளங்கும் கோயம்பேடு பூ மார்க்கெட்டில் கரன்ட் பிரச்னை நாளுக்குநாள் நீடித்து வருகிறது. எனவே, கரன்ட் பிரச்னை சரிபார்ப்பதற்கு தனி குழு அமைக்கவேண்டும். இனிமேலும் அதிகாரிகள் ஒத்துழைப்பு கொடுக்காமல் தாமதம் செய்து வந்தால் அனைத்து வியாபாரிகளையும் திரட்டி ஆர்ப்பாட்டம் செய்யப்படும்’ என்றார்.
The post கோயம்பேடு பூ மார்க்கெட்டில் தினமும் அதிகாலையில் கரன்ட் கட்: மின்வாரிய அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகை appeared first on Dinakaran.