×

கோவைக்குள் நுழைய விடாமல் அண்ணாமலையை எதிர்த்தவருக்கு பாஜ மாவட்ட தலைவர் பதவி: போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு


கிணத்துக்கடவு: கோவை தெற்கு மாவட்ட பாஜ தலைவராக இருந்த வசந்தராஜனின் பதவி காலம் முடிந்ததால், புதிய தலைவர் பதவிக்கு முருகேசன், அப்பு, சந்திரசேகர் உள்பட 10 பேர் போட்டியிட்டனர். இவர்களில் புதிய தலைவராக மதுக்கரை நாச்சிபாளையத்தை சேர்ந்த சந்திரசேகர் நியமிக்கப்பட்டார். இதனால் பாஜ நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. 2021 சட்டமன்ற தேர்தலின்போது கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராக வசந்தராஜனை நியமிக்காத பாஜ மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிராக முகநூலில் பதிவிட்டதோடு, அண்ணாமலைக்கு எதிராக நிர்வாகிகளை தூண்டிவிட்டு மாவட்டத்திற்குள் நுழைய விடாமல் செய்த சந்திரசேகரை தலைவராக எப்படி நியமிக்கலாம்? என்று கேட்டு, பாஜ நிர்வாகிகள் போஸ்டர் அச்சடித்து தெற்கு மாவட்ட பகுதி முழுவதும் ஒட்டி இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து பாஜ நிர்வாகிக நடராஜன் கூறுகையில், ‘‘வசந்தராஜன் தெற்கு மாவட்ட தலைவராக இருந்தபோது, காரச்சேரி உள்ளிட்ட தெற்கு மாவட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் கல்குவாரிகளை நடத்துபவர்களை கட்சியில் சேர்த்து, அவர்களிடமும், புகையிலை பொருட்கள், லாட்டரி சீட்டு விற்பனை செய்பவர்களிடமும், மாமூல் வாங்கி பல கோடி ரூபாய் அளவிற்கு சொத்து சேர்த்துள்ளார். அந்த வருமானம் அவர் கையைவிட்டு போகக்கூடாது என்பதற்காக, மாநில தலைமையிடம் பணத்தை வாரி கொடுத்து, அவரின் விசுவாசியும், பினாமியுமான சந்திரசேகரை தெற்கு மாவட்ட தலைவராக அறிவிக்க வைத்துள்ளார். பாஜ வசந்தராஜன் போன்றோரின் கையில் சிக்கி பணத்திற்கு அடிமையாகிவிட்டது.

மாநில தலைவர் அண்ணாமலையை தொகுதிக்குள் நுழையக்கூடாது என்று எதிர்த்தவரை மாவட்ட தலைவராக நியமித்தது எங்களுக்கும், தொண்டர்களுக்கும் மிகுந்த வேதனையாக உள்ளது. வசந்தராஜனின் பினாமி என்கிற ஒரே காரணத்திற்காக சந்திரசேகரை நியமித்துள்ளது எங்களால் ஏற்றுகொள்ள முடியவில்லை. அதனால் மாநில தலைமை உடனடியாக நடவடிக்கை எடுத்து சந்திரசேகருக்கு பதில், கட்சிக்காக உழைத்து வருபவர்கள் யாரையாவது ஒருவரை நியமிக்க வேண்டும். அதுவரை எங்களின் எதிர்ப்பு தொடர்ந்து கொண்டே இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

The post கோவைக்குள் நுழைய விடாமல் அண்ணாமலையை எதிர்த்தவருக்கு பாஜ மாவட்ட தலைவர் பதவி: போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : BAJA DISTRICT ,PRESIDENT ,ANNAMALA ,KOWA ,Murukesan ,Apu ,Chandrasekhar ,Vasantharajan ,southern district ,Goa ,Chandrashekhar ,Madukkari Nachipalayam ,Baja ,Annamalai ,
× RELATED மெக்ஸிகோவில் இருந்து இறக்குமதி...