×

சேலம் அரசு மருத்துவமனையின் மகப்பேறு வார்டில் தண்ணீர் வராததால் கர்ப்பிணிகள் அவதி: நடவடிக்கை எடுப்பதாக டீன் தகவல்

சேலம், ஜன.22: சேலம் அரசு மருத்துவமனையின் மகப்பேறு வார்டில் தண்ணீர் வராததால் சிகிச்சை பெற்று வரும் கர்ப்பிணிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் மகப்பேறு துறையில் பல்வேறு சிறப்பு வசதிகளுடன் கர்ப்பிணி பெண்கள் மற்றும் பிரசவம் அடைந்த தாய்மார்களுக்கு உயர் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அதிக ஆபத்து உள்ள கர்ப்பிணிகள், பிரசவத்திற்கு முந்தைய, பிந்தைய காலத்தில் ஏற்படும் சிக்கல்கள் உள்ள கர்ப்பிணிகளை கண்டறிந்து இங்கு பிரசவத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அதேபோல் அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான கர்ப்பிணிகள் பிரசவத்திற்கு வருகின்றனர். குறிப்பாக நாள்தோறும் 30 முதல் 40 வரை பிரசவத்திற்காக வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் சராசரியாக 1000 முதல் 1200 பிரசவங்கள் வரை நடக்கிறது.

சிறந்த நிபுணுத்துவம் பெற்ற மகப்பேறு மருத்துவர்கள் மற்றும் அனுபவம் பெற்ற செவிலியர்கள் கொண்ட குழுவின் மூலமாக தடையில்லா மருத்துவ சேவை வழங்கப்படுகிறது. பல்வேறு உயர்மருத்துவ சிகிச்சை அளிப்பதால் நாளுக்கு நாள் சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் மருத்துவமனையில் தண்ணீரின் தேவையும் அதிகரிக்கிறது. மருத்துவமனையில் உள்ள போர்வெல் மூலம் மருத்துவமனையின் வார்டுகளுக்கு தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இதுதவிர்த்து சேலம் மாநகராட்சி மூலமூம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் மருத்துவமனையில் தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. குறிப்பாக மருத்துவமனையில் உள்ள மகப்பேறு வார்டில் கடந்த சில நாட்களாகவே நான்கு தளத்திலும் போதுமான தண்ணீர் விநியோகம் இல்லாமல் உள்ளது.

இதனால் சிகிச்சைக்கு வரும் கர்ப்பிணி பெண்களும், பொதுமக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து சேலத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் கூறுகையில்,“மகப்பேறு வார்டில் உள்ள 4 தளங்களுக்கும் போதுமான தண்ணீர் விநியோகம் இல்லை. இதனால் கர்ப்பிணி பெண்கள், பச்சிளம் தாய்மார்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இங்குள்ள ஆர்.ஓ., மெசின்கள் பயன்படுத்தாமல், மூடி வைக்கப்பட்டு, பராமரிப்பு இல்லாமலும் உள்ளது,’’என்றார். இதுகுறித்து மூதாட்டி வேதாம்பாள் கூறுகையில்,“மகப்ேபறு வார்டில் போதுமான தண்ணீர் வசதி இல்லாததால், ஒவ்வொரு முறையும் நான்கு மாடி கட்டிடம் ஏறி வரவேண்டியுள்ளது. வயதானவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்,’’என்றார். இதுகுறித்து விஜயா கூறுகையில்,“மகப்பேறு வார்டில் உள்ள கழிவறைகள் போதுமான பராமரிப்பு இல்லாமல் உள்ளது.

மருத்துவர்கள் நல்ல முறையில் சிகிச்சை அளிக்கின்றனர். ஆனால் இவ்வளவு பெரிய மருத்துவமனையில் போதுமான தண்ணீர் வசதி இல்லாததது பெரிய குறையாக உள்ளது. வௌியே சென்று கடைகளில் தண்ணீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தும் சூழல் உள்ளது. குறிப்பாக சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு குடிக்க சுடு தண்ணீர் இல்லாததால், மருத்துவமனை வளாகத்தில் உள்ள கடைகளுக்கு சென்று வாங்கி வந்து பயன்படுத்துகிறோம். அங்கு 1 லிட்டர் பாட்டிலில் சுடு தண்ணீரை வாங்க ₹50 மதிப்புள்ள பொருட்களை வாங்க கட்டாயப்படுத்துகின்றனர். கர்ப்பிணி பெண்கள், குழந்தை பெற்றெடுத்த தாய்மார்கள் நலன் கருதி மகப்பேறு வார்டில் உள்ள மெசினில் சுடு தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றார். இதுகுறித்து மருத்துவமனையின் டீன் தேவிமீனாளிடம் கேட்டபோது,“பழுதான மோட்டார்கள் சரிசெய்யவும், புதிய உபகரணங்கள் வாங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் தண்ணீர் பிரச்னை சரிசெய்யப்படும்,’’ என்றார்.

The post சேலம் அரசு மருத்துவமனையின் மகப்பேறு வார்டில் தண்ணீர் வராததால் கர்ப்பிணிகள் அவதி: நடவடிக்கை எடுப்பதாக டீன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Salem Government Hospital ,Dean ,Salem ,Salem Government Medical College Hospital ,Dinakaran ,
× RELATED ஆண்கள் அறுவை சிகிச்சை பிரிவில் 6 பேருக்கு உடல்நலம் பாதிப்பு