- மருத்துவர்கள் சங்கம்
- சென்னை
- ஐஐடி
- காமகோடி
- கோமியம்
- காமகோடி கோமியம்
- சமூக சமத்துவ சங்கத்திற்கான மருத்துவர்கள்
- சேப்பாக்கோக்
- பொதுச்செயலர்
- அஹங்காட் ரவீந்திரநாத்
- சென்னை ஐஐடி
சென்னை: சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி கோமியம் குறித்து சர்ச்சையாக பேசியது தொடர்பாக, அவரை கண்டிக்கும் வகையில் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் சார்பில் சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பொறுப்பற்ற முறையில் அறிவியலுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார்.
அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், அவருடைய தந்தைக்கு உடல்நிலை சரியில்லாத போது கோமியம் கொடுத்து காய்ச்சல் சரியானதாகவும், கோமியத்தில் மருத்துவ குணம் உள்ளதாகவும் தெரிவித்தார். அதேபோல, அவர் பஞ்சகவ்வியத்தை பண்டிகை நாட்கள் உட்கொள்வோம் என தெரிவித்துள்ளார். இது மக்களுக்கு தவறான தகவல்களை பரப்புகிறது. இதுபோன்ற கருத்துக்களை மக்களிடம் சொல்வது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
ஒரு அறிவியல் தொழில்நுட்பத்தின் இயக்குனர் காய்ச்சல் மருந்துகள் பற்றியே தெரியாமல் பேசுவதற்கு பின் அரசியல் உள்ளது. பசுவை உயர்த்த பார்க்கிறார், அவருடைய கருத்துக்கள் அறிவியலுக்கு எதிரானது, எந்தவித அறிவியல் பூர்வ ஆதாரங்களும் இல்லை. காய்ச்சல் வந்தால் மருத்துவரை அணுக வேண்டும், மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என அவர் கூறியிருக்க வேண்டும். காய்ச்சலுக்கு மருந்துகள் நாடாமல் கோமியம் மட்டும் குடித்து கொண்டிருந்தால் உயிரிழப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
கோமியம் மூலம் பல்வேறு நுண்ணுயிரி தொற்றுகள் ஏற்படலாம். குறிப்பாக எலிக்காய்ச்சல், வயிற்றுப் போக்கு ஏற்படலாம். பசுமாட்டுச் சாணம் மூலம் ஜியார்டியாசிஸ் என்ற வயிற்றுப் போக்கு, நாடாப்புழு பாதிப்பு, மேட் கவ் டிசீஸ் என்ற மோசமான மூளையை பஞ்சுபோல் மாற்றும் நோய், கறுப்பு பூஞ்சை தொற்று, ரைனோ ஸ்பொரிடியோசிஸ் போன்ற பல நோய்கள் ஏற்படலாம். காய்ச்சாத அல்லது நுண்ணுயிரி நீக்கம் செய்யப்படாத பால் மூலம் டைபாய்டு, காசநோய் போன்றவை ஏற்படலாம்.
பஞ்சகவ்யம் மூலமும் மேற்கண்ட தொற்றுகள் மற்றும் நோய்கள் ஏற்படலாம். எனவே, காமகோடி சொல்வது போல் கோமியம் நோய்களை குணப்படுத்தாது, மாறாக அது பல மோசமான நோய்களையே உருவாக்கும். இதை இந்திய கால்நடை ஆராய்ச்சி மையத்தின் ஆய்வுகள் உட்பட பல ஆய்வுகள் இதை உறுதி செய்துள்ளன. ஆகவே, அவரது கருத்துக்களை புறக்கணிக்க வேண்டும். மேலும் அவரது கருத்துக்கு தமிழ்நாடு மக்களுக்கும் சுகாதாரத் துறைக்கு எதிரானது அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
* காமகோடி சொல்வது போல் கோமியம் நோய்களை குணப்படுத்தாது,மாறாக அது பல மோசமான நோய்களையே உருவாக்கும்.
The post அறிவியலுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார் கோமியம் மூலம் பல்வேறு நுண்ணுயிரி தொற்று ஏற்படும்: சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடிக்கு டாக்டர்கள் சங்கம் கண்டனம் appeared first on Dinakaran.
