காரைக்குடி: பல்கலைக்கழக வேந்தராக மாநில முதல்வர் இருக்க வேண்டும். மாநிலத்தின் கல்வி உரிமையை மீட்க சட்ட, அரசியல் போராட்டங்கள் தொடரும் என காரைக்குடியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழக அரசின் மக்கள் நலத்திட்டங்கள் மக்களிடம் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் ஒவ்வொரு மாவட்டமாக நேரில் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு செய்து வருகிறார். அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் 2 நாட்கள் கள ஆய்வு, நலத்திட்ட உதவி வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேற்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார்.
அங்கிருந்து சாலை மார்க்கமாக காரைக்குடி வந்தார். முதல்வருக்கு காரைக்குடி ராஜீவ் காந்தி சிலை அருகே அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து காலை 11.45 மணிக்கு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் குடும்ப நிதியில் ரூ.12 கோடியில் கட்டப்பட்ட லட்சுமி வளர்தமிழ் நூலகத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து நிர்வாக அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையையும் முதல்வர் திறந்து வைத்தார்.
பின்னர் அவர் பேசியதாவது: வழக்கறிஞர், தொழிலதிபர் என்ற அடையாளங்களை கடந்து வள்ளல் என்கிற பெயருடன் அழகப்பர் வாழ்ந்துள்ளார். கல்விக்காக அவர் செய்துள்ள தொண்டு மிக, மிக முக்கியமானது. இந்தியா விடுதலை அடைந்தபோது சென்னை பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த லட்சுமணசாமி முதலியார், அறியாமையில் இருந்து மக்களை விடுதலையடைய செய்ய, பின்தங்கிய பகுதிகளில் செல்வந்தர்கள் கல்லூரிகளை துவங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
உடனடியாக மேடையில் இருந்த வள்ளல் அழகப்பர் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து நான் தொடங்க தயார் என அறிவித்தார். அப்படிப்பட்ட உயர்ந்த உள்ளத்துக்கு சொந்தக்காரராக இருந்தார். கல்வி தொண்டையும், தொழில் தொண்டையும் சேர்த்து ஆற்றியவர். வள்ளல் அழகப்பரால் பலர் பட்டம் பெற்று உலகம் முழுவதும் உயர்ந்துள்ளனர். அன்று குமரி… நேற்று காரைக்குடி… வான்புகழ் வள்ளுவருக்கு குமரியில் தலைவர் கலைஞர் சிலை அமைத்தார். அதற்கு வெள்ளிவிழா கொண்டாடும் இந்த நேரத்தில் காரைக்குடியில் வள்ளுவர் சிலையை திறப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
வள்ளுவர் நெறிகள், வாழ்வியல் நெறிகளாக மாறும் என நாம் தொடர்ந்து சொல்லிக் கொண்டு வருகிறோம். குறள் நெறிகளை பின்பற்றினால் தான் தமிழ்நாடும் காப்பாற்றப்படும், உலகமும் காப்பற்றப்படும். அப்படி காப்பற்றப்பட வேண்டும் என்றால் வள்ளுவரை யாரும் கபளீகரம் செய்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உற்சாகம் தரும் பாராட்டு: அறிவு தான் நம்மை காக்கும் கருவி என வள்ளுவர் சொன்னதற்கு அடையாளமாக முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் தனது அன்னை லட்சுமி பெயரால் வளர்தமிழ் நூலகத்தை அமைத்துள்ளார்.
ப.சிதம்பரம் நடமாடும் நூலகம். அரசியல், வரலாறு, சட்டம், பொருளாதாரம், இலக்கியம் என அனைத்து துறைகளிலும் அறிவுப்பூர்வமான ஆழம் கொண்டவர். அறிவு கருவூலம் தான் ப.சிதம்பரம். திராவிட மாடல் ஆட்சியில் நிறைவேற்றப்படும் ஒவ்வொரு திட்டங்கள் குறித்தும் ப.சிதம்பரம் என்ன சொல்கிறார் என தெரிந்து கொள்வதில் நான் ஆர்வமாக இருப்பேன். அவரது பார்வை, பாராட்டு எனக்கு தனிப்பட்ட முறையில் உற்சாகத்தை தரும். நான் மாணவர்களை சந்திக்கும்போது எல்லாம், கல்வி தான் யாராலும் திருட முடியாத சொத்து என அடிக்கடி எடுத்துக் கூறுவேன். எனவே, இளைஞர்களே அறிவு செல்வத்தை சேர்க்க பாடுபடுங்கள்.
பொருள் செல்வம் நிச்சயம் உங்களை தேடி வரும். அதனால் தான் நம் திராவிட மாடல் ஆட்சி அமைந்த பிறகு கல்விக்கு முன்னுரிமை கொடுத்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். இந்தியாவிலேயே உயர்கல்வித் துறையில் முதன்மை மாநிலமாக நமது தமிழ்நாடு உள்ளது. 3 ஆண்டுகள்… 32 கல்லூரிகள்: கடந்த 3 ஆண்டுகளில் 32 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளை துவங்கி உள்ளோம். ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு முதல்நிலை தேர்வுக்கு மாதம் ரூ.7,500, மெயின் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு மாதம் ரூ.25,000 வழங்கப்படுகிறது.
6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசு பள்ளியில் படித்து ஐஐடி, என்ஐடி போன்ற ஒன்றிய அரசு கல்வி நிறுவனங்களில் இளநிலை கல்வியில் சேரும் மாணவர்களின் முழு கல்விச்செலவையும் இந்த அரசு ஏற்கும். நான் முதல்வன் திட்டத்தின் மூலம் 22 லட்சத்து 56 ஆயிரம் மாணவர்களுக்கு திறன் பயிற்சி தந்து பெரும் நிறுவனங்களில் பணியாற்றுவதற்கான தகுதியை வழங்கியுள்ளோம். புதுமைப்பெண் திட்டத்தால் கல்லூரிகளில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
தமிழ்ப்புதல்வன் திட்டத்தால் மாணவர்களின் உயர்கல்வி ஆர்வம் அதிகரித்துள்ளது. முதல் தலைமுறையாக கல்லூரி வரும் மாணவர்களுக்கு கல்வி கட்டணச்சலுகைக்காக ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரூ.1,000 கோடி செலவில் காமராஜர் கல்லூரி மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ரூ.150 கோடி செலவில் உயர்கல்வி நிறுவனங்களில் டிஜிட்டல் முறையில் ஒருங்கிணைந்த கற்றல் மேலாண்மை உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலிடம்: மாணவர்களுக்கான தொழில்திறன் மேம்பாட்டு திட்டம், முதல்வரின் ஆராய்ச்சி மானிய திட்டம், முதல்வரின் ஆராய்ச்சி ஊக்கத்தொகை திட்டம், உங்களைத் தேடி கல்வி திட்டம் இப்படி பல திட்டங்களை என்னால் சொல்லிக் கொண்டே இருக்க முடியும். இந்த திட்டங்களால் தமிழ்நாட்டின் உயர்கல்வி தரம், அடிப்படை கட்டமைப்பு வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தான் இந்தியாவிலேயே அதிக அரசு பல்கலைக்கழகங்கள் உள்ள மாநிலமாகவும், 500க்கும் மேற்பட்ட தரம் வாய்ந்த பொறியியல் கல்லூரி உள்ள மாநிலமாக, அதிக அளவிலான மருத்துவ கல்லூரி உள்ள மாநிலமாக புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்கள் உள்ள மாநிலங்களில் 31 உயர்கல்வி நிறுவனங்கள் உள்ள மாநிலமாக நமது தமிழ்நாடு உள்ளது.
உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் தேசிய சராசரியை விட 2 மடங்கு அதிகமாக 49 விழுக்காடு பெற்று, இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. இப்படி உயர்கல்வியில் உன்னதமான இடத்தை தமிழ்நாடு பெற்றுள்ளது. எனவேதான், பல்கலைக்கழக நிர்வாகம் மாநில அரசின் முழுக்கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். வேந்தர் பதவியில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல்வர் இருக்க வேண்டும் என கூறுகிறோம். பள்ளி முதல் உயர்கல்வி வரை ஒவ்வொரு மாணவருக்கும் பார்த்து, பார்த்து திட்டங்களை உருவாக்கி செலவு செய்வது மாநில அரசு. பேராசிரியர்கள் முதல் அனைவருக்கும் சம்பளம் கொடுப்பது மாநில அரசு.
பல்கலைக்கழகத்திற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை பூர்த்தி செய்து தருவது மாநில அரசு. ஆனால் வேந்தர் பதவி மட்டும் ஒன்றிய அரசு நியமிக்கும் ஒருவருக்கா என்பது தான் எனது கேள்வி. அதனால் தான் சட்டப்போராட்டம் உள்பட பல்வேறு போராட்டங்களை நாம் தற்போது நடத்தி கொண்டு இருக்கிறோம். மாநிலத்தின் கல்வி உரிமையை மீட்கும் பணியில் அது கிடைக்கும் வரை சட்டப் போராட்டங்கள், அரசியல் போராட்டங்கள் தொடரும். படியுங்கள், படியுங்கள், படியுங்கள் உயர்கல்வி ஆராய்ச்சி வரை தொடர்ந்து படியுங்கள் என மாணவர்களை கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு பேசினார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், கவிஞர் வைரமுத்து சிறப்புரையாற்றினார். உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் முன்னிலை வகித்தார். அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, எஸ்.ரகுபதி, கே.ஆர்.பெரியகருப்பன், மு.பெ.சுவாமிநாதன், ராஜகண்ணப்பன், சிவ.வீ.மெய்யநாதன், எம்பி கார்த்தி சிதம்பரம், எம்எல்ஏ மாங்குடி, கலெக்டர் ஆஷா அஜித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி.ரவி வரவேற்றார்.
தொடர்ந்து மாலை 5 மணியளவில் காரைக்குடி தனியார் மண்டபத்தில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து முதல்வர் கலந்துரையாடினார். இரவு காரைக்குடியில் தங்கிய அவர், இன்று காலை 9 மணிக்கு சிவகங்கை செல்கிறார். அங்கு மன்னர் துரைச்சிங்கம் அரசு கலைக்கல்லூரியில் இலவச வீட்டுமனைப்பட்டா, உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள் வழங்கல் என சுமார் 40 ஆயிரம் பேருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
தொடர்ந்து காணொலி கட்சி மூலம் சிவகங்கையில் மருதுபாண்டியர்கள் சிலைக்கு அடிக்கல் நாட்டல், சீல்டு கால்வாய் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டல் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார். சிவகங்கை அருகே நகரம்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள வாளுக்குவேலி அம்பலம் சிலை மற்றும் மணி மண்டபத்தை திறந்து வைத்தல் உள்ளிட்ட பல்வேறு முடிவுற்ற பணிகளை திறந்து வைக்கிறார். சிவகங்கையில் பகல் 12 மணிக்கு நிகழ்ச்சி முடித்து மதுரை விமான நிலையம் செல்லும் அவர், விமானம் மூலம் சென்னை செல்கிறார்.
* ‘வள்ளுவர், வள்ளலாரை களவாட கூட்டம் காத்திருப்பு’
முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘‘வள்ளுவர், வள்ளலார் போன்ற தமிழ் மண்ணில் சமத்துவத்தை பேசிய மாமனிதர்களை களவாட ஒரு கூட்டமே இன்று காத்திருக்கிறது. அதற்கு எதிரான காவல் அரணாக ஒவ்வொரு தமிழர்களும் இருக்க வேண்டும். திராவிட இயக்க வீரமிக்க கவிஞர் பாவேந்தர் பரம்பரை கவிஞர் கவியரசு முடியரசனார் பெயரை இந்த அரங்கத்திற்கு சூட்டியுள்ளோம். திராவிட இயக்கத்தின் பகுத்தறிவு கவிஞர் என தந்தை பெரியாரால் போற்றப்பட்டவர் முடியரசனார். தலைவர் கலைஞரின் நெஞ்சுக்கு நெருக்கமாகவும், திமுக இலக்கிய அணி தலைவராக இருந்து தமிழ் வளர்த்தவர். அவரது பெயரை இந்த அரங்கத்திற்கு சூட்டியதற்கு பெருமையடைகிறேன்’’ என்றார்.
* 4.5 கி.மீ நடந்து மக்களிடம் மனு வாங்கிய முதல்வர்
காரைக்குடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு ராஜீவ்காந்தி சிலை அருகே பெருந்திரள் வரவேற்பு அளிக்கப்பட்டது. பல்கலைக்கழக அரங்கத்தில் சிங்கம்புணரியை சேர்ந்த ரமணி என்பவர் மனு அளிக்க முயன்றார். இதனை கவனித்த முதல்வர் உடனடியாக அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பனை அனுப்பி மனுவை வாங்கி பெற்றுக் கொண்டார்.
அதுபோல், நிகழ்ச்சியை முடித்து வெளியே செல்லும் போது, சாலையோரங்களில் காத்திருந்த மக்களிடம் மனுக்களை வேனில் இருந்து கீழே இறங்கி நடந்து சென்று வாங்கினார். பல்கலைக்கழக அரங்கில் இருந்து அடுத்த நிகழ்ச்சி நடைபெறும் தனியார் மண்டபத்திற்கு சுமார் 4.5 கிமீ தூரத்திற்கு நடந்தே சென்றார். அவ்வழியே ஏராளமான மக்களிடம் மனுக்களையும் ெபற்றுக் ெகாண்டார். இதனால், அங்கிருந்த பொதுமக்கள் நெகிழ்ச்சி அடைந்து முதல்வரை பாராட்டினர்.
* பல்கலைக்கழக நிர்வாகம் மாநில அரசின் முழுக்கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.
* வேந்தர் பதவியில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல்வர் இருக்க வேண்டும் என கூறுகிறோம்.
* பள்ளி முதல் உயர்கல்வி வரை ஒவ்வொரு மாணவருக்கும் பார்த்து, பார்த்து திட்டங்களை உருவாக்கி செலவு செய்வது மாநில அரசு.
* பேராசிரியர்கள் முதல் அனைவருக்கும் சம்பளம் கொடுப்பது மாநில அரசு. பல்கலைக்கழகத்திற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை பூர்த்தி செய்து தருவது மாநில அரசு.
* ஆனால் வேந்தர் பதவி மட்டும் ஒன்றிய அரசு நியமிக்கும் ஒருவருக்கா என்பது தான் எனது கேள்வி.
* தமிழ் ஆட்சிமொழியாக கோலோச்ச வேண்டும்: ப.சிதம்பரம் விருப்பம்
அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடந்த நூலக திறப்பு விழாவில் முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பேசியதாவது: தமிழ் வாழ வேண்டும், வளர வேண்டும். வாழ்வதற்கும், வளர்வதற்கும் வேறுபாடு உண்டு. தமிழ் வாழ வேண்டும் என்றால், 9 கோடி தமிழர்களும் தமிழில் பேச வேண்டும். எழுத வேண்டும். தமிழ் ஆட்சி மொழியாக என்றும் கோலோச்ச வேண்டும்.
தமிழ் வளர வேண்டும் என்றால் இலக்கிய மொழியாக, இயல் தமிழ், இசைத்தமிழ், நாடக தமிழாக மட்டும் இருந்தால் போதாது. தமிழ் கணித தமிழாக, கணினி தமிழாக, அறிவியல் தமிழாக, சட்ட தமிழாக, மருத்துவ தமிழாக, வேளாண்மை, மேலாண்மை தமிழாக, டிஜிட்டல் தமிழாக, இயந்திரவியல் தமிழாக பல புதிய வடிவங்களை தமிழ் மொழி எடுக்க வேண்டும்.
இந்த நூலகம் புதிய படைப்புகள் அரங்கேறும் ஒரு சங்கபலகையாக இருக்க வேண்டும். சிறுகதை, நாவல், நாடகம் என பல புதிய வெளிப்பாடுகள் பயிற்றுவிக்கும் பயிலகமாக இருக்க வேண்டும். ஒரு இலக்கிய சோதனை கூடமாக இருக்க வேண்டும். நூலகத்தின் யானை பசிக்கு ஒவ்வொருவரும் கைப்பிடி சோறு தர வேண்டும், தமிழ்நாடு அரசு பெரிய படி சோறு தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் ப.சிதம்பரம் தனது தாயைப்பற்றி பேசும்போது கண்ணீர் விட்டார்.
* முதல்வருடன் செல்பி எடுத்து முகம் மலர்ந்த பொதுமக்கள்
காரைக்குடிக்கு வந்த முதல்வரை பார்த்து சாலையெங்கும் நின்ற பொதுமக்கள் கையசைத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சிறுவர், சிறுமியர், பெண்கள் உட்பட ஏராளமானோர் தங்கள் செல்போனில் முதல்வரோடு செல்பி எடுத்து மகிழ்ந்தனர். அப்போது சிறுவர்களிடம், ‘நன்றாக படிக்க வேண்டும்’ என முதல்வர் அறிவுரை வழங்கினார்.
The post பல்கலைக்கழக வேந்தராக மாநில முதல்வர் இருக்க வேண்டும்: சட்டப் போராட்டம் தொடரும், காரைக்குடி விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி appeared first on Dinakaran.