×

வயநாடு நிலச்சரிவில் மாயமான 32 பேரும் உயிரிழந்ததாக கேரள மாநில அரசு அறிவிப்பு!

திருவனந்தபுரம்: கடந்த ஆண்டு ஜூலை மாதம் 30ம் தேதி கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சூரல்மலை, முண்டக்கை, புஞ்சிரிமட்டம், அட்டமலை உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் அனைவரும் இரவு தூங்கிக்கொண்டிருந்த சமயத்தில், அதீத கன மழையுடன், திடீரென்று பெருத்த சத்தத்துடன் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பெரும்பான்மையான மக்கள் மண்ணில் புதையுண்டர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. நிலச்சரிவில் புதையுண்ட மேலும் சிலரின் நிலை என்ன என்று தெரியாமல் இருந்தது. இதையடுத்து வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க கேரள அரசு வலியுறுத்தி வந்தது. அதனை ஏற்க மறுத்த ஒன்றிய அரசு, கடந்த டிசம்பர் மாதம் வயநாடு நிலச்சரிவை அதி தீவிர பாதிப்பாக அங்கீகரித்தது.

இந்நிலையில் நிலச்சரிவு பகுதியில் இருந்து மாயமான 32 பேர் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அதை ஒட்டி தற்போது மாவட்ட பேரிடர் நிவாரண பிரிவு, மாயமான 32 பேரையும் உயிரிழந்ததாக கணக்கில் எடுத்துள்ளது. இதனால் அவர்கள் குடும்பத்தினருக்கு ஏற்கனவே உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டது போல அரசின் அனைத்து நிவாரண உதவிகளும் வழங்கப்படும் என கேரள அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post வயநாடு நிலச்சரிவில் மாயமான 32 பேரும் உயிரிழந்ததாக கேரள மாநில அரசு அறிவிப்பு! appeared first on Dinakaran.

Tags : Kerala state government ,Wayanad ,Thiruvananthapuram ,Suralmalai ,Mundakai ,Punchirimattam ,Attamalai ,Wayanad district ,Kerala state ,
× RELATED மனைவியுடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக...