×

மோடி ஆட்சியில் நாட்டில் ஏழை மக்களின் நிலை மிகவும் பரிதாபகரமான நிலையில் உள்ளது : ராகுல் காந்தி வேதனை!

டெல்லி : மோடி ஆட்சியில் ஒன்றிய அரசின் அனைத்து துறைகளும் நலிவடைந்துவிட்டதாகவும் மோடி நெருக்கமான தொழில் அதிபர்கள் மட்டுமே முழு பலனும் அடைந்திருப்பதாகவும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நாட்டு மக்கள் சிந்தும் வியர்வையால்தான் இந்திய பொருளாதாரமே ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால் தாங்கள் சிந்தும் வியர்வைக்கு அவர்கள் எந்த பலனும் அடைவதில்லை. மாறாக மோடியின் தொழிலதிபர்கள் மட்டுமே முழு பலனும் அடைந்து வருகின்றனர். மோடி ஆட்சியில் ஒன்றிய அரசின் அனைத்து துறைகளும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.

நாட்டின் உற்பத்தித்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதனால் நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட பிரச்சனைகள் தலைவிரித்தாடுகிறது. ஒன்றிய அரசின் தவறான கொள்கைகளால் விவசாயமும், விவசாயிகளும், தொழிலாளர்களும், ஏழை மக்களும் கடும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர். வாழ்க்கையின் விளிம்பு நிலைக்கு ஏழைகளும், விவசாயிகளும், தொழிலாளர்களும் சென்றுவிட்டனர். உழைப்புக்கேற்ற ஊதியம் இல்லை என்பதால் பலர் மிகுந்த இன்னலை சந்தித்து வருகின்றனர்.

கடுமையான ஜி.எஸ்.டி., வரி, வருமான வரி உள்ளிட்ட சுமைகளால் மக்கள் சொல்லண்ணா துயரத்துக்கு ஆளாகியுள்ளனர். மோடி ஆட்சியில் நாட்டில் ஏழை மக்களின் நிலை மிகவும் பரிதாபகரமான நிலையில் உள்ளது. ஏழை மக்களுக்கு வங்கிகளால் அளிக்கப்பட்ட சிறுகடனை கூட அடாவடியாக பிடுங்குகிறது ஒன்றிய அரசு. ஆனால், கார்ப்பரேட்டுகளின் கடன்களை மட்டும் தள்ளுபடி செய்கிறது மோடி அரசு. விலைவாசி உயர்வால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன.சூழல் இப்படி இருக்க மோடியின் வளர்ந்த இந்தியாவில், அவரது உழைப்பால் யார் பலனடைந்துள்ளார்கள் என்பது நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும்,”இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post மோடி ஆட்சியில் நாட்டில் ஏழை மக்களின் நிலை மிகவும் பரிதாபகரமான நிலையில் உள்ளது : ராகுல் காந்தி வேதனை! appeared first on Dinakaran.

Tags : Modi ,Rahul Gandhi ,Delhi ,Union government ,
× RELATED பிரதமர் மோடி தமது பதிலுரையில் மேக் இன்...