சென்ற இதழில், சுப்பாச்சாருக்கு நடந்த அதிசயத்தை பலரும் எண்ணிடத்தில் கண்ணீர் மல்க பேசினார்கள். மேலும், நாங்கள் பல வருடங்களாக பொள்ளாச்சி ராமரை வழிபடுகிறோம், இத்தனை நாட்களாக இக்கோயிலின் வரலாற்றை தெரிந்து கொள்ளாமல் விட்டுவிட்டோம். தினகரன் ஆன்மிக இதழ் வாயிலாக நாங்கள் பல தகவல்களை அறிந்துகொண்டோம் என்றும் கைபேசி மூலமாக பேசினார்கள். அதுமட்டுமா! பலருக்கும் இந்த பொள்ளாச்சி ராமர் குலதெய்வமாக இருந்திருக்கிறார், அதனை பேசியவர்களின் மூலமாக நாம் தெரிந்துகொண்டோம். வாருங்கள்… இன்னும் பல அதிசயங்கள் பற்றி இந்த தொகுப்பில் கண்டு, ராமரை தரிசிப்போம்.
கன்னத்தில் மச்சமுள்ள ராமர்
பொள்ளாச்சி ராமர் கோயிலுக்கு ஒரு உற்சவர் ராமர் தேவைப்பட்டார். இதற்காக பிரத்தேகமாக சுவாமிமலையில் இருந்து ஆட்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் மிகுந்த ஆர்வத்தோடு உற்சவர் ராமர் சிலையை செய்து கொடுத்தார்கள். முழு உற்சவர் ராமர் செய்து முடித்தபின், துணியால் துடைக்கும்போது உற்சவர் சிலையில் ராமர் கன்னத்தில் சிறிய அளவிலான மச்சம் ஒன்று இருப்பதைக் கண்டார், சிற்பி.“இந்த உற்சவர் ராமர், சமஸ்த லட்சணங்களுடன் கூடிய ராமர். (அனைத்து விதமான அழகுடன் கூடிய) இந்த மாதிரி உற்சவர் ராமரை எங்கும் நீங்கள் பார்க்க முடியாது. நீங்கள் மட்டுமல்ல நானும்தான். இனி நானே நினைத்தாலும் இது போல், சிலையினை வடிவம் செய்ய முடியாது. எனது ஆயுள் முடியபோகிறது’’ என்று கூறிவிட்டு உற்சவர் ராமரை செய்த சிற்பி அங்கிருந்து சென்றுவிட்டர். சிறிது காலத்துலே, சிற்பி சொன்னதும் நடந்தது!
ராமனின் திருக்கல்யாணம்
ஆண்டுதோறும் நடைபெறும் ராமநமி உற்சவங்கள், இங்கு மிகவும் பிரசித்தி பெற்றவை. ஐந்து நாட்கள் ராமநவமி விழா மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்படுகிறது. அதில் ஒரு பகுதியாக, ராமநவமி அன்று முன்தினம் மாலை, உற்சவர்களான ராமருக்கும் – சீதம்மைக்கும் திருக்கல்யாணம் நடைபெறும். இந்த வைபவத்தில், திரளான பக்தர்கள் கலந்துக் கொள்வார்கள். அன்றைய தினம், ஸ்வாமிகளுக்கு திருவீதிவுலா நடைபெறும். முதலில் அனுமான், அதன் பின் ராமர், கடைசியில் சீதாதேவி. இப்படி திருவீதிவுலா நடைபெற்று, இறுதியில் கோயிலை வந்தடைவார்கள்.மனிதர்களுக்கு திருமணம் நடைபெறும் போது இதை கவனித்திருக்கலாம். திருமணத்திற்கு முன், மணமக்களின் முகத்தில் ஒருவித மாற்றம் (முகஅழகு / தேஜஸ்) நிகழ்ந்திருக்கும். அதனை இந்த ராமர் – சீதாதேவி முகத்திலும் காணலாம். அதேபோல், சீதம்மையை அழைத்து வரும்போதும், ராமரின் அருகில் அமரவைக்கும்போதும், கல்யாணம் வைபவம் முடிந்ததும், மனிதர்களுக்கு எப்படி முகக்கலை (தேஜஸ்) மாறுகின்றதோ, அதே போல், ராமருக்கும் – சீதாவிற்கு முகமானது பிரகாசத்துடன் முகக்கலை, மாறுதலோடு காணப்படும். இந்த மாறுதலான முக பாவனைகளை பல பக்தர்கள் கண்டு ரசித்திருக்கிறார்கள். இன்றும், மாறுதலான முகபாவனைகளை காண பல ஊர்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றார்கள். இக்கல்யாணம் கிட்டத்தட்ட ஆறுமணிநேரம் நடைபெறும். இதற்கு அடுத்த நாள் தேர் பவனியும், பட்டாபிஷேகமும் நடைபெறும். ராமரின் கையில் கட்டிய கங்கன கயிற்றை இத்திருக்கல்யாணத்தில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் கொடுக்கப்படும். அதனை வீட்டில் வைத்து தொடர்ந்து பூஜை செய்து வந்தால், திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறுகிறது.
பிருந்தாவனம் மகிமை
நாம் ஏற்கனவே சுப்பாச்சாரை பற்றி பார்த்திருக்கிறோம். முன்னொரு காலத்தில் சுமார் 50 ஆண்டு கால இந்த கோயிலுக்கு அர்ச்சகராக இருந்தவர். ஒரு நாள் விடியற் காலையில் வழக்கம் போல் ராமருக்கு பூஜைகளை செய்வதற்காக கோயிலுக்குள் வந்திருக்கிறார். பூஜை செய்வதற்கு முன், சுப்பாச்சார் தனக்கு தானே மடி செய்துக் கொள்ள வேண்டும். (மடி என்பது, தான் உடுத்துக் கொள்ளும் துணிகளை கிணற்று தண்ணீரினால் நன்கு சுத்தப்படுத்த வேண்டும். மேலும், தலை முதல் பாதம் வரை ஈரம் சொட்ட சொட்ட நன்கு குளிக்க வேண்டும்) ஆகையால், கோயிலில் உள்ள கிணற்றடிக்கு செல்கிறார். அங்கு ஒரு வயது முதிர்ந்த பெரியவர் ஒருவர் “எனக்கு பசிக்குது சாப்பிட ஏதாவது கொடு’’ என்று சுப்பாச்சாரிடம் கேட்டிருக்கிறார். “ஸ்வாமி.. நான் குளித்துவிட்டு, பூஜைகளை செய்தாக வேண்டும். ராமர் முதலான அனைத்து தேவதைகளுக்கும் நிவேதனம் செய்ய வேண்டும். அதன் பிறகு உமக்கு நான் வாழைப் பழத்தை தருகிறேன், அதுவரை காத்திருங்கள்’’ என்று சுப்பாச்சார், அந்த பெரியவரை பார்த்து கூறியிருக்கிறார். “இல்லை. அதுயெல்லாம் வேண்டாம் எனக்கு இப்பவே கொடு’’ என்று அந்த பெரியவர் சொன்னதும், சுப்பாச்சாரம் இரண்டு வாழைப் பழத்தை கொடுத்துள்ளார். அதைப் பெற்றுக் கொண்டு, அங்கிருந்து நகர்ந்துவிட்டார், அந்த வயதான பெரியவர். வழக்கம்போல் சுப்பாச்சாரும் குளித்துவிட்டு முதலில் ராமர் சந்நதியை திறந்து அவருக்கு பூஜைகளை செய்து முடித்த பின்னர், அனுமாருக்கும் அதேபோல், பூஜைகளை செய்கிறார். அதன் பின், மிருத்திகா பிருந்தாவனமாக வீற்றிருக்கும் ராகவேந்திர ஸ்வாமி சந்நதியை சுப்பாச்சார் திறக்கிறார். சுப்பாச்சாருக்கு ஒரே ஆச்சரியம்! அந்த பெரியவருக்கு கொடுத்த இரு வாழைப் பழத்தோல்கள், பிருந்தாவனத்திற்கு பின்புறம் இருந்திருக்கிறது. வந்தவர் ராகவேந்திர ஸ்வாமியை தவிர வேற யாராக இருந்திருக்க முடியும்!
விஸ்வேஷ தீர்த்தரின் கடைசி நிகழ்ச்சி
கடந்த 2019-ஆம் ஆண்டில், பிருந்தாவனம் ஆனா (முக்தியடைந்த) உடுப்பி பெஜாவர் மடத்தின் 33வது பீடாதிபதியான ஸ்ரீ விஸ்வேஷ தீர்த்தர் அவர்கள், பொள்ளாச்சி ராமர் கோயிலின் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார். கும்பாபிஷேகத்தினத்தன்று, அபிஜித் முகூர்த்தமான 12.00 மணிக்கு தொடங்கி 1.30 மணிக்கு கும்பாபிஷேகத்தை விஸ்வேஷ தீர்த்தர் நிறைவு செய்து, அங்கிருந்துதான் விமானம் மூலம் மும்மைக்கு சென்றார். அங்கு அவருக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. பின்னர், பிருந்தாவனம் ஆகிவிட்டார். பொள்ளாச்சி ராமர் கோயிலின் கும்பாபிஷேகமே, ஸ்ரீவிஸ்வேஷ தீர்த்தர் கலந்து கொண்ட கடைசி நிகழ்ச்சி ஆகும்.
விசேஷ நாட்கள்
* ஸ்ரீ ராமநவமி 12 நாட்கள் சீரும் சிறப்புமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொள்ளாச்சியை சொந்த ஊராகக் கொண்டவர்கள், எங்கு இருந்தாலும், அது சிங்கப்பூராக இருந்தாலும்கூட மறவாது ஸ்ரீ ராமநவமி அன்று வந்துவிடுகின்றார்கள்.
* பூர்வ ஆராதனை, மத்ய ஆராதனை, உத்ர ஆராதனை என மூன்று நாட்கள் மஹான் ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிக்கு ஆராதனை நடைபெறுகிறது.
* இது தவிர, மத்வ நவமி, மகான்களான ஸ்ரீ விஜேந்திர தீர்த்தர், ஸ்ரீ ரகூத்தம தீர்த்தர், ஸ்ரீ ஸ்ரீ பாதராஜர், புரந்தரதாசர், இப்படி சுமார் 12 மகான்களின் ஆராதனை மகோற்சவங்கள்
நடைபெறுகின்றன.
“ராமாய ராமபத்ராய ராமசந்த்ராய வேதாஸே
ரகுநாதாய நாதாய சிதாய பதயே நமஹ’’நிறைந்தது…
ரா.ரெங்கராஜன்
The post அதிசயங்கள் நிறைந்த பொள்ளாச்சி ராமர் appeared first on Dinakaran.