×

குமரி கல்லூரி மாணவர் ஷாரோன் ராஜ் கொலை வழக்கு; காதலி கிரீஷ்மாவுக்கு தூக்கு தண்டனை: தாய் மாமாவுக்கு 3 ஆண்டு சிறை: கேரள நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

திருவனந்தபுரம்: கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்து குமரி கல்லூரி மாணவர் ஷாரோன் ராஜை கொலை செய்த வழக்கில் காதலி கிரீஷ்மாவுக்கு தூக்கு தண்டனை விதித்து நெய்யாற்றின்கரை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தாய் மாமா நிர்மலகுமாரன் நாயருக்கு 3 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கேரள மாநிலம் பாறசாலையை சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது மகன் ஷாரோன் ராஜ்(23). இவர் குமரி மாவட்டம் நெய்யூரில் ஒரு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி ரேடியாலஜி படித்து வந்தார். ஷாரோன் ராஜுக்கும், குமரி மாவட்டம் களியக் ளையை சேர்ந்த கிரீஷ்மா (24) என்ற கல்லூரி மாணவிக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் பல்வேறு இடங்களில் ஜாலியாக சுற்றி வந்தனர்.
இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17ம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டதை ஷாரோன் ராஜ் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அக்டோபர் 25ம் தேதி அவர் உயிரிழந்தார். தங்களுடைய மகனை அவரது காதலி கிரீஷ்மா தான் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்தார் என்று ஷாரோன் ராஜின் பெற்றோர் பாறசாலை போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே இந்த வழக்கு திருவனந்தபுரம் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. குற்றப்பிரிவு டிஎஸ்பி ஜான்சன் தலைமையிலான போலீசார் நடத்திய விசாரணையில் ஷாரோன் ராஜுக்கு காதலி கிரீஷ்மா கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்தது உறுதியானது. நெல்லையைச் சேர்ந்த ஒரு ராணுவ வீரருக்கு கிரீஷ்மாவை திருமணம் செய்து கொடுக்க அவரது பெற்றோர் விரும்பினர். முதலில் அதற்கு கிரீஷ்மா சம்மதிக்காவிட்டாலும் பின்னர் திருமணத்திற்கு சம்மதித்தார்.

ஆனால் ஷாரோன் ராஜ் தன்னுடைய காதலில் உறுதியாக இருந்ததால் அவரை கொல்ல கிரீஷ்மா தீர்மானித்தார். இதன்படி கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் 14ம் தேதி உல்லாசமாக இருக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறி ஷாரோன் ராஜை தன்னுடைய வீட்டுக்கு வரவழைத்து கிரீஷ்மா கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்துள்ளார். குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் இந்த திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. இதையடுத்து கிரீஷ்மாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்தக் கொலைக்கு கிரீஷ்மாவின் தாய் சிந்து மற்றும் மாமா நிர்மலகுமாரன் நாயர் ஆகியோர் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களையும் போலீசார் கைது செய்து திருவனந்தபுரம் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு திருவனந்தபுரம் மாவட்டம் நெய்யாற்றின்கரை கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

கடந்த 2 வருடங்களாக இந்த விசாரணை நடைபெற்று வந்தது. இறுதிக்கட்ட விசாரணை முடிந்த நிலையில் கடந்த 17ம் தேதி இந்த வழக்கில் கிரீஷ்மா மற்றும் அவரது தாய் மாமா நிர்மலகுமாரன் நாயர் ஆகியோர் குற்றவாளிகள் என்று நீதிபதி பஷீர் அறிவித்தார். தாய் சிந்து வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். ஆதாரங்களை அழித்ததாக நிர்மல குமாரன் நாயர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. கிரீஷ்மாவுக்கு எதிராக கொலை, விஷம் கொடுத்தது மற்றும் ஆதாரங்களை அழித்தல் ஆகிய குற்றங்கள் நிரூபணமாகி உள்ளதாக நீதிமன்றம் தெரிவித்தது. தொடர்ந்து இருவருக்குமான தண்டனை 20ம் தேதி (நேற்று) அறிவிக்கப்படும் என்று நீதிபதி பஷீர் கூறினார். இதன்படி நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
போலீஸ் கஸ்டடியில் இருந்த கிரீஷ்மா நேற்று காலை 10.30 மணிக்கு நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார்.

அவரை தொடர்ந்து நிர்மல குமாரன் நாயரும் கோர்ட்டுக்கு கொண்டு வரப்பட்டார். நீதிபதி பஷீர் 586 பக்கங்களை கொண்ட தீர்ப்பை காலை 11 மணிக்கு வாசிக்கத் தொடங்கினார். இதில் கிரீஷ்மாவுக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும் கொலைக்கு 10 ஆண்டு சிறையும் வழக்கை திசை திருப்பியதற்கு 5 வருட சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. மாமா நிர்மலகுமாரன் நாயருக்கு 3 வருடங்கள் சிறையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி பஷீர் தீர்ப்பளித்தார். தீர்ப்புக்கு பின்னர் கிரீஷ்மா திருவனந்தபுரம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். நிர்மலகுமாரன் நாயருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

அபூர்வத்திலும் அபூர்வமான வழக்கு
தீர்ப்பில் நீதிபதி பஷீர் கூறி இருப்பதாவது: கிரீஷ்மா மிகவும் திறமையாக செயல்பட்டு இந்தக் கொலையை நடத்தியுள்ளார். உடல் உறுப்புகள் அனைத்தும் அழுகி ஷாரோன் உயிரிழந்துள்ளார். கிரீஷ்மாவுக்கு எதிராக 48 ஆதாரங்கள் உள்ளன. கைது செய்யப்பட்டபோது போலீஸ் லாக்கப்பில் கிரீஷ்மா நடத்திய தற்கொலை முயற்சி ஒரு நாடகமாகும். இது வழக்கை திசை திருப்ப அவர் நடத்திய ஒரு முயற்சியாகும். கிரீஷ்மாவுக்கு குற்ற பின்புலம் இருந்திருக்கிறது. ஜூஸ் சேலஞ்ச் நடத்தியதை இதற்கு உதாரணமாக கூறலாம். இதன் மூலம் முன்பும் ஷாரோனை கொலை செய்ய முயற்சித்துள்ளார் என்பது நிரூபணமாகி உள்ளது.

குற்றம் செய்த பின்னரும் அதில் இருந்து தப்பிக்க மிகவும் தந்திரமாக செயல்பட்டுள்ளார். குற்றவாளியின் வயதை காரணம் காட்டி தண்டனையில் கருணை காட்டமுடியாது. 11 நாட்கள் தண்ணீர் கூட குடிக்க முடியாமல் மிகவும் அவதிப்பட்டு ஷாரோன் மரணமடைந்துள்ளார். உல்லாசமாக இருக்கலாம் என்று கூறித் தான் ஷாரோனை கிரீஷ்மா தன்னுடைய வீட்டுக்கு வரவழைத்துள்ளார். இவர் ஷாரோனுக்கு நம்பிக்கை துரோகம் செய்துள்ளார். மரணப்படுக்கையில் இருந்த போதும் ஷாரோன் தன்னுடைய காதலி கிரீஷ்மாவுக்கு எதிராக எதுவும் கூறவில்லை. கிரீஷ்மாவுக்கு தண்டனை கிடைக்கக்கூடாது என்று தான் அவர் விரும்பினார். வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயித்த பின்னரும் ஷாரோனுடன் உல்லாசமாக இருந்து வந்தார் என்று நிரூபணமாகியுள்ளது.

தொடர்பை துண்டிக்க தீர்மானித்தால் விஷம் கொடுத்து கொலை செய்வது சமூகத்திற்கு தவறான முன் உதாரணமாகிவிடும். ஜூசில் ஏதோ ஒன்று கலக்கப்பட்டுள்ளது என்பது ஷாரோனுக்கு தெரிந்துள்ளது. அதனால் தான் அவர் வீடியோ எடுத்துள்ளார். அக்டோபர் 14ம் தேதி கிரீ‌ஷ்மா வீட்டிற்கு அழைத்தபோது கொலை செய்யத்தான் அழைக்கிறார் என்பதை ஷாரோன் அறிந்திருக்கவில்லை. நேசிக்கும் ஒருவரையும் நம்ப முடியாது என்பதை இந்த வழக்கு நமக்கு கூறுகிறது. இது அபூர்வங்களில் அபூர்வமான வழக்கமாகும். இதுபோன்ற வழக்கில் அதிகபட்ச தண்டனை வழங்க கூடாது என்று சட்டம் கூறவில்லை. இவ்வாறு தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகனுக்கு நீதி கிடைத்து விட்டது
ஷாரோனின் தாய் கண்ணீர் பேட்டி
கிரீஷ்மாவுக்கு தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்ட பின்னர் நீதிமன்றத்திற்கு வெளியே ஷாரோனின் தாய் பிரியா கண்ணீருடன் நிருபர்களிடம் கூறியது: என்னுடைய மகனுக்கு நீதி கிடைத்து விட்டது. நீதிமானான நீதிபதிக்கும், வழக்கறிஞர்களுக்கும், போலீசுக்கும் ஓராயிரம் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். நீதிமன்றத்திற்கு எங்களது குடும்பம் எப்போதும் கடன்பட்டிருக்கும். என்னுடைய மகனின் வேதனையை தெய்வம் கேட்டது. கடவுள் நீதிபதியின் வடிவத்தில் வந்து இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

கிரீஷ்மா திடீர் மவுனம்
நெய்யாற்றின்கரை நீதிமன்றத்தில் தீர்ப்பு தொடர்பான இறுதிக்கட்ட விவாதம் நடந்தது. அப்போது கிரீஷ்மா தரப்பில் ஏதாவது கூறவேண்டுமா என்று நீதிபதி பஷீர் கேட்டார். அதற்கு கிரீஷ்மா எழுதி தயாராக வைத்திருந்த ஒரு கடிதத்தை கொடுத்தார். அதில் கூறியிருந்தது: நான் முதுகலை படிப்பு படித்துள்ளேன். கூடுதலாக படிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். எனக்கு 24 வயது தான் ஆகிறது. எனவே தண்டனையில் சலுகை அளிக்க வேண்டும். இவ்வாறு அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. கடிதத்துடன் அவர் பட்டப்படிப்பு படித்ததற்கான சான்றிதழையும் இணைத்திருந்தார். அவரது கோரிக்கையை நீதிபதி நிராகரித்தார்.தீர்ப்பை நீதிபதி வாசித்துக் கொண்டிருந்த போது அதைக் கேட்டு கிரீஷ்மா அழத் தொடங்கினார். கடைசியில் மரண தண்டனை என்று நீதிபதி கூறியபோது அழுகையை நிறுத்திவிட்டு மவுனமானார்.

ஆயுள்தான் கிடைக்கும் என நம்பிய கிரீஷ்மா
விசாரணை நடந்த போதே,‘‘ எனக்கு ஆயுள் தண்டனை தான் கிடைக்கும். இப்போது 24 வயதுதான் ஆகிறது. 13 வருடம் சிறையில் இருந்தால், 37 வயதில் வெளியே வருவேன். அதன் பின்னர் நினைத்தபடி வாழ்வேன் என்று பலரிடம் கிரீஷ்மா கூறி வந்துள்ளார். ஆனால் மரண தண்டனை விதிக்கப்பட்டது அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்று கூறப்படுகிறது.

The post குமரி கல்லூரி மாணவர் ஷாரோன் ராஜ் கொலை வழக்கு; காதலி கிரீஷ்மாவுக்கு தூக்கு தண்டனை: தாய் மாமாவுக்கு 3 ஆண்டு சிறை: கேரள நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Kumari College ,Sharon Raj ,Krishma ,Kerala ,Thiruvananthapuram ,Neyyarrinkarai court ,Nirmalakumaran Nair ,Dinakaran ,
× RELATED டெல்லி சிபிஐ ஆபிசில் புஸ்ஸி, ஆதவ் ஆஜர்...