×

அரசு கவின் கலை கல்லூரிக்கு ரூ.21 கோடியில் 3 புதிய கட்டிடங்கள்: அமைச்சர் சாமிநாதன் தகவல்

சென்னை: தமிழ்நாடு அரசு கவின் கலைக் கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்பு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, ரூ.21 கோடியில் 3 புதிய கட்டிடங்கள் கட்டப்பட உள்ளதாக தெரிவித்தார்.
பெரியமேடு, ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் உள்ள தமிழ்நாடு அரசு கவின் கலைக் கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்புப் பணிகளை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு முதன்மைச் செயலாளர் சந்திரமோகன், பொதுப்பணித் துறை உயர் அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

பின்னர் அமைச்சர் சாமிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு அரசு கவின் கலைக் கல்லூரி, ஆறு பிரிவுகளைக் கொண்டு ஏறத்தாழ 175 ஆண்டு காலம் நிறைவடைந்து 176வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் இந்த சூழ்நிலையில், ஏற்கனவே இருந்த பழைய கட்டிடங்களை எல்லாம் புதுப்பிக்கின்ற வகையில் முதல்வர் உத்தரவின் அடிப்படையில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், இது மட்டுமல்லாமல் 3 புதிய கட்டிடங்கள் ஏறத்தாழ சுமார் 53,300 சதுர அடி பரப்பளவில் ரூ.21 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்வதற்கு ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டிருக்கிறது.

இதன் பிறகு விரைவில் பணிகள் தொடங்கி நடைபெற இருக்கிறது. இக்கல்லூரியில் 481 மாணவ, மாணவிகள் பயின்று வருகிறார்கள். தென்னிந்தியாவிலேயே சிறப்பான கல்லூரியாக மக்களால் பாராட்டப்பட்டு அரசு கவின் கலைக் கல்லூரி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இக்கல்லூரி மீண்டும் புதுப்பொலிவு பெறுவதற்கு பணிகள் நடைபெற்று வருகின்றது. பொதுப்பணித் துறை மேற்கண்ட பணிகளை பிரதான சின்னங்களை எல்லாம் பாதுகாக்கின்ற வகையில் மேற்கொண்டு வருகிறார்கள். இப்பணிகள் முடிவடையும்போது அரசு கவின் கலைக் கல்லூரி புதுப்பொலிவு பெறும். தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் 2 பழையக் கட்டிடங்களின் புனரமைப்பு பணிகளும் மார்ச் மாதம் முடிவடைவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. புதிய கட்டிடங்களுக்கு ஒப்பந்தப் புள்ளிகோரி அப்பணிகள் பிப்ரவரி மாதம் இறுதியில் தொடங்கும்.

சென்னை நம்ம ஊர் திருவிழாவிற்கு மிகப்பெரிய வரவேற்பை அளித்திருக்கிறது. மக்கள் அதிக அளவு ஆதரவு தெரிவித்துள்ளார்கள். இதுபோன்று மற்ற மாவட்டங்களிலும் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வந்துக் கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு திருநெல்வேலி, மதுரை, கோவை, உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடத்தப் பட்டிருக்கிறது. இந்த ஆண்டு அனைத்து மாவட்டங்களிலும் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு பரிசீலனையில் உள்ளது. வள்ளுவர் கோட்டம், மார்ச் மாதம் இறுதிக்குள் பணிகள் முடிக்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. ராஜாஜி ஹால் மே மாதம் இறுதியில் நடைபெறும். இவ்வாறு கூறினார்.

The post அரசு கவின் கலை கல்லூரிக்கு ரூ.21 கோடியில் 3 புதிய கட்டிடங்கள்: அமைச்சர் சாமிநாதன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Government Kavin Arts College ,Minister ,Saminathan ,Chennai ,Tamil Nadu Government Kavin Arts College ,Periyamedu, ,E.V.Ra. Highway… ,Dinakaran ,
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்